37. நாய்வழி

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கண்ணி எல்லா இடங்களிலும் புதைந்து கிடக்கிறது. கால் வைத்து மாட்டிக்கொள்ள நபர்கள் தேடிக் காத்திருக்கும் கண்ணி.

அவன்தான் எனக்குப் பணம் தந்தான். திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்துக்கு வந்து என்னை வண்டி ஏற்றிவிட்டதும் அவன்தான். பஸ் கிளம்பும்போது ஜன்னலுக்கு வெளியே நின்று சிரித்தான். ‘எப்பிடியும் நீ உங்கண்ணன பாக்கப் போறதில்லே. திரும்பிப் போறப்ப என்னை வந்து பாத்துட்டுப் போ’ என்று சொன்னான்.

நான் அதற்கு பதில் சொல்லவில்லை. அவன் சொன்னது காதிலேயே விழாததுபோல நடந்துகொண்டேன். எனக்கென்னவோ நிச்சயமாக நான் அண்ணாவைக் குற்றாலத்தில் சந்தித்துவிடுவேன் என்று தோன்றியது. அவனைப் பேசி, மசியவைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட முடியும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. குறைந்தபட்சம் அம்மாவோடு அவனை ஃபோனிலாவது பேச வைத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நகர்ந்த வருடங்களில் அண்ணா இல்லாதுபோன துக்கத்தின் சுவடுகள் சற்று மறைய ஆரம்பித்திருந்தன. வினய் போன பிற்பாடு இந்த அதிர்ச்சிகள் என் வீட்டுக்குப் பழகிப் போகத் தொடங்கியிருந்தன என்றே நினைத்தேன். எப்படியும் வினோத் போய்விடுவான் என்று எனக்கே தோன்றத் தொடங்கியிருந்த நிலையில், நானும் தங்க மாட்டேன் என்று ஒன்றுக்கு இரண்டு பேர் சொல்லியிருந்ததுதான் குழப்பமாகவே இருந்தது.

ஆனால் அது உண்மையாகாது என்று நினைத்தேன். ஏனென்றால், அன்றைய மன நிலையில் நான் வீட்டை விட்டு வெளியேறுவதை எண்ணிப் பார்க்கவும் விரும்பவில்லை. அண்ணா குற்றாலத்தில் இருக்கிறான் என்று அந்தக் கிழவன் சொன்னபோதுகூட, உடனே சென்று அப்பாவிடம் தகவலைச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றுதான் தோன்றியது. ஆனால், நான் இரண்டு நாள் இடைவிடாது உறங்கியிருந்தேன். சர்க்கரைப் பொங்கலில் அவன் அபின் கலந்து கொடுத்திருந்த விவரம் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

‘நல்லாத்தான் இருந்தது. ஆனா சொல்லிட்டுக் குடுத்திருக்கலாம்’ என்று நான் சொன்னேன்.

அவன் சிரித்தான். ‘சொன்னா நீ எப்பிடி அதத் திம்பே? முதல்ல என்னோடகூட வந்திருக்கவே மாட்டியே’ என்று சொன்னான்.

அதுவும் உண்மைதான். ஆனால் இரண்டு தினங்களாக என்னைக் காணாமல் அம்மாவும் அப்பாவும் எங்கெல்லாம் அலைந்திருப்பார்கள், எத்தனைக் கவலைப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்க சிரமமாக இருந்தது. கண்டிப்பாக அவர்களுக்கு அண்ணாவின் நினைவும் வினய்யின் நினைவும் வந்திருக்கும். அவர்களைப் போலவே நானும் ஓடிப்போய்விட்டதாகத்தான் நினைப்பார்கள். ஆனால் அம்மா, உன்னைவிட்டு நான் எங்கும் போகிற உத்தேசம் இல்லை. குறைந்தபட்சம் இப்போது அப்படியொரு எண்ணம் நிச்சயமாக இல்லை. நாளை நானும் மனம் மாறலாம். திருப்போரூர் சாமியும் கோவளத்துப் பக்கிரியும் சொன்னது நடக்கலாம். ஆனால் நாளைதான். இன்றல்ல.

என் கவலையெல்லாம், வினோத் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடப்போகிறானே என்பது குறித்துத்தான் இருந்தது. அதெப்படி அவன் கையில் சிவலிங்கம் வந்து விழும்? அதை வைத்துக்கொண்டிருந்தபோது அவனது கை நடுங்கியதை நான் கண்டேன். தண்ணீருக்குள் நின்றிருந்தாலும் அவன் கண்கள் கலங்கியிருந்ததையும் கவனித்தேன். சிவன் பிரத்தியட்சம் என்று திருப்போரூர் சாமி சொன்னது, அந்தக் கணத்தில் அவனை பாதித்ததை உணர முடிந்தது என்னால். நான் வினோத்துடன் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்த விரும்பினேன். பிரத்தியட்சம் என்பது லிங்கமல்ல. பிரத்தியட்சம் என்பது தோற்றமும் அல்ல. அல்லிக் குளத்தில் ஓடிவந்து குதிக்கிறபோது எழும் அதிர்வை நிகர்த்த ஏதோ ஒன்று அது. உள்ளுக்குள் நிகழ்வது.

அன்று காலை நான் கண் விழித்தபோது அவனைத்தான் முதலில் பார்த்தேன். எனக்குக் காரணமே இல்லாத ஒரு பெரும் சந்தோஷம் தோன்றியது. ஏனெனில், அன்றிரவுக்குள் அவன் ஓடிவிடுவான் என்று நான் முடிவு செய்திருந்தேன். அது நிகழாததே எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அதனால்தான் அவனுடன் பேச நினைத்திருந்தேன். ஊருக்குப் போய்ச் சேர்ந்த பிறகு. குளக்கரையில் அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து. ஆனால் அதற்குமுன் நான் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தென்காசிக்குக் கிளம்ப வேண்டிவரும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

கிழவன் சொன்னான், ‘தம்பி குத்தாலத்துலே இப்ப தண்ணி வரத்து இல்லே. ஆனா தேனருவியிலே கொஞ்சம் இருக்கும். மறக்காம அங்க ஒருக்கா குளிச்சிரு.’

‘நான் ஒண்ணும் ஜாலியா ஊர் சுத்திப் பார்க்கப் போகலை’ என்று பதில் சொன்னேன்.

‘ஆனா ஊர சுத்திட்டுத்தான் திரும்புவே. அது நிச்சயம்.’

‘ஆமா. சுத்துவேன். அண்ணாவைத் தேட வேணாமா?’

இப்போதும் அவன் சிரித்தான். ‘தேடு தேடு. நல்லாத் தேடு. ஆனா கிடைக்கமாட்டான்.’

‘ஏன் இப்படி அபசகுனமாவே பேசறிங்க? அவன் போனப்பறம் எங்க வீட்ல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? எங்கம்மா இப்பல்லாம் சிரிக்கறதே இல்லை’ என்று சொன்னேன். அவன் என்ன நினைத்தானோ. சிறிது நேரம் பேசவேயில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். பேருந்து நிரம்பி, வண்டி கிளம்பிய பின்பும் பேசவில்லை. ஒரு பத்தடி தூரம் வண்டி புறப்பட்டுப் போனபோது வெறி பிடித்தாற்போல ஓடிவந்து ஜன்னலில் எக்கி, என் கையைத் தொட்டு அழைத்தான்.

‘என்ன?’

‘நீ விட்டுட்டு ஓடுவ பாரு, அப்ப உங்கம்மா சிரிப்பாங்க’ என்று சொன்னான்.

மறுநாள் விடியும் நேரம் நான் தென்காசியில் இறங்கினேன். திருச்சி போலவே அங்கும் வெயில் கொளுத்தியெடுக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இறங்கும்போதே சிறு தூறல் இருந்தது. அது மகிழ்ச்சியளித்தது. ஒரு டீக்கடையில் காப்பி சாப்பிட்டேன். பொதுக் கழிப்பிடத்தில் கடன்களை முடித்துவிட்டு சாலையோரக் கடை ஒன்றில் ஒரு வேட்டி மட்டும் வாங்கிக்கொண்டு அருவிக்கரைக்குச் சென்றேன். கிழவன் சொன்னதுபோல பெரிய நீர்வரத்து இல்லைதான். ஆனாலும் நின்று குளிக்கும் அளவுக்குத் தண்ணீர் இருக்கவே செய்தது. அரை மணி நேரம் குளித்துவிட்டு, வேட்டியை மாற்றிக்கொண்டு கோயிலுக்குப் போனேன்.

எனக்கிருந்த பிரார்த்தனையெல்லாம் ஒன்றுதான். எப்படியாவது அண்ணாவைப் பார்த்துவிட வேண்டும். குற்றாலம் பெரிய ஊர் அல்ல. ஒரு நாள் முழுதும் நடந்தால் ஊர் முழுவதையும் சுற்றி வந்துவிடலாம். ஆனால் அவன் கண்ணில் பட வேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் அந்தக் கிழவன் அது நிகழாது என்று சொல்லியிருந்தான். இப்போதே நான் குற்றாலத்துக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் வீட்டில் எழுந்தபோதே அவன் அதைத்தான் சொன்னான். ‘பிரயோசனமில்ல தம்பி.’

இவன் யார் அப்படிச் சொல்ல என்றுதான் நினைத்தேன். அதைவிட, அண்ணா எங்கிருந்து இப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப் பிடிக்கிறான் என்பது புரியாத விஷயமாக இருந்தது. திருவானக்கா கிழவனை அண்ணாவுக்கு முன்பே தெரிந்திருக்க நியாயமேயில்லை. அவன் சுற்றத் தொடங்கிய பின்புதான் பழக்கமாகியிருக்க வேண்டும். ‘அது ஆச்சி, ரெண்டர வருசம்’ என்று கிழவன் சொல்லியிருந்தான். இரண்டரை வருடங்களுக்குமுன் அண்ணா என்னைப் பற்றி இவனிடம் சொல்லியிருக்கிறான். காலத்தின் இடைவெளியை இடக்கையால் நகர்த்திவிட்டு, நேற்று அவன் நிகழ்த்திய சாகசம் எனக்குப் புரியவில்லை. எப்படி என்னை அடையாளம் கண்டான்? என் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தகர்த்துவிட்டு எப்படி என்னை அவனோடு அழைத்துச் சென்றான்? இரண்டு நாள் அவன் வீட்டில் சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறேன். ஒரு பிள்ளை பிடிக்கிறவனைப்போல, போதை மருந்து கொடுத்து என்னைக் கடத்தித்தான் சென்றிருக்கிறான். ஆனாலும் அவன் மீது எனக்குக் கோபம் வரவில்லை. அவனுக்கு அண்ணாவைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்ததுதான் காரணம்.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கண்ணி எல்லா இடங்களிலும் புதைந்து கிடக்கிறது. கால் வைத்து மாட்டிக்கொள்ள நபர்கள் தேடிக் காத்திருக்கும் கண்ணி. அண்ணா தன் காலை அதில் வைத்துவிட்டான். வினய் வைத்துவிட்டான். வினோத்தும் வைக்கப்போகிறான். ஆனால் நான் சிக்கமாட்டேன் என்றுதான் அப்போதும் தோன்றியது.

அன்றெல்லாம் நான் குற்றாலத்தின் வீதிகளில் அலைந்து திரிந்துகொண்டே இருந்தேன். ஒரு வீட்டு வாசலில் கொய்யா பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்ததை ஓரிடத்தில் பார்த்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று ஏழெட்டு கொய்யாக் காய்களைப் பறித்து என் தோள் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினேன். நாள் முழுதும் அதைத் தின்றுகொண்டேதான் அலைந்தேன். கண்ணில் பட்ட ஒவ்வொரு முகத்திலும் என் அண்ணாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கோயில், மண்டபங்கள், ஓடைப்பாதை, அருவிக்கரை என்று தரைத் தளத்தில் போய்த் தேடக்கூடிய அனைத்து இடங்களிலும் அன்று தேடித் தீர்த்தேன். இரவு கோயில் வாசலிலேயே படுத்துத் தூங்கினேன். மறுநாள் மலையேறிப் போய்த் தேடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

விடிந்து எழுந்தபோது என்னருகே நாய் ஒன்று படுத்திருக்கக் கண்டேன். நான் கண் விழித்தபோது அதுவும் விழித்தெழுந்தது. என்னைப் பார்த்து சிறிதாக இரண்டு முறை குரைத்தது. நான் அதைப் பொருட்படுத்தாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தபோது, அது பாய்ந்து என் முன்னால் வந்து நின்று மீண்டும் குரைத்தது. நான் சில விநாடிகள் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன காரணத்தாலோ அதை அண்ணாவே என்னிடம் அனுப்பியிருப்பான் என்று தோன்றியது. இப்போதெல்லாம் இம்மாதிரியான விபரீத பயங்கரக் கற்பனைகள் நிறைய வருகின்றன. எல்லா இடங்களிலும் என்னவாவது ஒரு அற்புதம் நிகழ்ந்துவிடும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏதோ சரியில்லை அல்லது எல்லாமே சரியாக இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த நாய்க்கு நான் அலுத்திருக்க வேண்டும். என்னைவிட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. ஏதோ நினைத்துக்கொண்டு நான் அது போன வழியிலேயே போக ஆரம்பித்தேன். மனத்தில் அந்த எண்ணம் மட்டும் தீராமல் அப்படியே தேங்கி நின்றது.

இந்த நாய் என்னை அண்ணாவிடம் கொண்டு சேர்க்கப்போகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com