41. பிசிறுகளின் காதலன்

அத்தனை பேரும் பிறந்து வாழ்ந்து இறந்துதான் போயிருக்கிறார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அதுதான் பெரும்பாலானவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

சத்திரம் பேருந்து நிலையத்தில் நான் இறங்கும்போதே அவன் என் கண்ணில் பட்டான். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு, மேலுக்கு எதையும் அணியாமல் வெற்று மார்பின் குறுக்கே இரு கரங்களையும் பெருக்கல் குறிபோலப் போட்டுக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவன், என்னைக் கண்டதும் சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது. ‘நீ வருவேன்னு தெரியும், அதான் பஸ் ஸ்டாண்டுக்கே வந்துட்டேன்’ என்று சொல்வானென எதிர்பார்த்தேன். ஏனோ அவன் அதைச் சொல்லவில்லை. மாறாக, விட்ட இடத்தில் தொடங்குவதுபோல, ‘பாக்க முடியல இல்ல? நாந்தான் சொன்னேனே?’ என்றான்.

நான் அதைக் கண்டுகொள்ளாமல், ‘ஊருக்குப் போகப் பணம் குறையறது. எனக்கு இங்க தெரிஞ்சவர் நீங்க மட்டும்தான். பஸ்ஸுக்கு பணம் தர முடியுமா?’ என்று கேட்டேன்.

அவன் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு, ‘சட்டைப்பையிலே வெச்சிருக்கேன். கெளம்பு’ என்று சொன்னான்.

எனக்குப் புரியவில்லை. என்ன என்று கேட்டேன். ‘உஞ்சட்டைப் பையிலே வெச்சிருக்கேன் தம்பி. கெளம்புன்னு சொன்னேன்’ என்று மீண்டும் சொன்னான். நான் குழப்பத்தோடு என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒரு நூறு ரூபாய்த் தாள் இருந்தது. உடனே நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன். ‘நீங்க சித்தரா?’ என்று கேட்டேன். அவன் இதற்கும் சிரித்தான். அந்தச் சிரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அவனைச் சற்றுக் கோபப்படுத்திப் பார்க்கலாம் என்று ஏனோ தோன்றியது. ‘மேஜிக் தெரிஞ்சவரா?’ என்று அடுத்துக் கேட்டேன். இதற்கு அவன் சிரிக்கவில்லை. உடனே பதில் சொன்னான், ‘ஆமா.’

எனக்குத் தெரிந்துவிட்டது. அவன் ஒரு சித்தர்தான். எங்கிருந்து அண்ணா அவனைப் பிடித்தான் என்று என்றாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் என் மனத்தில் அவனைக் குறித்த வியப்போ, பிரமிப்போ உருவாகவேயில்லை என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப அவனை நான் ஒருமையிலேயே நினைத்தேன். மனத்தில் உருவாகாத மரியாதைப் பன்மையைச் சொல்லில் அதனால்தான் என்னால் ஏற்ற இயலவில்லை. ஒருவேளை நான் குற்றாலத்தில் அண்ணாவைச் சந்தித்திருந்தால் இது மாறியிருக்கலாம் என்றும் தோன்றியது.

இப்படி யோசித்துக்கொண்டிருந்தபோதே அவன் சொன்னான், ‘மரியாதையெல்லாம் வெறும் பாவனை. நான் அதை எதிர்பார்க்கறதில்லே. உங்கண்ணன் என்னை சொரிமுத்துன்னு பேர் சொல்லியே கூப்புடுவான். நான் தேர்ந்தெடுக்கறவங்களை நான் அப்படித்தான் நினைக்கவும் பேசவும் வெப்பேன்.’

இது என்னை அதிரவைத்தது. இவன் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறானா!

சட்டென்று, ‘மன்னிச்சிடுங்க. தப்புதான்’ என்று சொன்னேன்.

அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘அந்த பஸ்ஸு கெளம்புது பாரு. போய் ஏறிக்க’ என்றான்.

‘இல்லே. நான் கொஞ்ச நேரம் கழிச்சிப் போறேன். உங்ககிட்டே பேசணும்.’

‘என்னா இருக்குது பேச? உங்கண்ணன் படுக்கைய பாத்துட்டல்ல? அவ்ளதான். உங்க வீட்ல ஒருத்தருக்குத் தெரியப்படுத்தணுன்னு ஒரு இது. அது ஒனக்கு வாய்ச்சிது. பதமா பக்குவமா இத உங்கம்மாப்பாட்ட சொல்லு. இதையுஞ்சொல்ல தெகிரியம் வரலன்னா, கோவளத்துக்குப் போயி சம்சுதீன்கிட்டேயாச்சும் சொல்லிடு. அவன் உங்கம்மாவுக்குத் தெரியப்படுத்திடுவான்.’

‘சம்சுதீனா?’

‘அவம்பேரு அதான். மசூதி வாசல்ல கெடப்பான். ஒனக்கு அவனைத் தெரியும்.’

ஏனோ எனக்கு அவனை விட்டு உடனே நகர்ந்துவிட வேண்டும் என்று இப்போது தோன்றியது. மனத்தில் எழுந்த உணர்வு அச்சமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு சிறு நடுக்கம் இருந்ததை உணர்ந்தேன். இது வேறு உலகம். இவர்கள் வேறு மனிதர்கள். தற்செயலாக அண்ணா இவர்களுள் ஒருவனாகிப் போயிருக்கிறான். நல்லது. அது அவனது கர்மா. ஆனால் நான் இதைக் குறித்தெல்லாம் வியப்பதற்கில்லை என்று எண்ணிக்கொண்டேன். நகர்ந்த வருடங்களில் நான் நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தேன். சித்தர் பாடல்கள். இந்து மதம். யோகம். ஆன்மிகம். தந்திரா. சித்து. மூலிகை மருத்துவம். என்னென்னவோ. பல யோகிகள், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப் பார்த்தேன். பக்கம் தோறும் அவர்கள் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள். எத்தனை எத்தனை அற்புதங்கள்! இரவைப் பகலாக்குவதில் தொடங்கி, நீரில் நடப்பது, காற்றில் பறப்பது, உடல் விட்டு உயிரை நகர்த்தி மீண்டும் உடலோடு சேர்ப்பது வரை என்னென்னவோ. யோக விஞ்ஞானம் சார்ந்த அடிப்படை அறிவு உண்டாகிவிட்டால் இவை எளிதில் புரிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அத்தனை பேரும் பிறந்து வாழ்ந்து இறந்துதான் போயிருக்கிறார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அதுதான் பெரும்பாலானவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

எனக்கு அதுதான் உடன்பாடற்றதாக இருந்தது. மரணத்தை எதற்கு வெல்ல வேண்டும்? வாழ்வின் அனைத்துப் பிசிறுகளையும் நான் விரும்பினேன். மரணம் உள்பட. முரண்பாடுகளில் ஒளிந்துள்ள கவித்துவத்தை ரசித்தேன். கண்ணீரின் ருசியும் புன்னகையின் வாசனையும் இணையும் புள்ளியைத் தேடுவதை விடுத்து, மரணத்துக்கு எதிரான துவந்த யுத்தத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

கடவுள். ஐயோ அவன் ஒருத்தன் இந்த யோகிகளை என்ன பாடு படுத்தி எடுக்கிறான்! வாழ்வை விடுத்து மலை முகடுகளில் அவர்கள் தேடிச் செல்லும் பக்காத் திருடன். சிலருக்கு அவன் அகப்படுகிறான். பலர் இறுதிவரை தேடிவிட்டுக் காலாவதியாகிவிடுகிறார்கள். ஆனால் காலம்தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சௌக்கியமாகத் தேடட்டும். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. நிகழ மறுக்கும் அற்புதமான இந்த வாழ்வே எனக்குப் போதும். இதன் கசடுகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இதன் துவர்ப்பு பிடித்திருக்கிறது. இதன் வாசனையும் துர்நாற்றமும் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. போதும். அற்புதங்களை அவர்களே நிகழ்த்திக்கொள்ளட்டும். அதை வியக்க நான் ஆளில்லை. கிழவனால் ஒரு நூறு ரூபாய்த் தாளைத்தான் என் சட்டைப் பையில் கொண்டுவைக்க முடியும். தலைகீழாக நின்றாலும், அவனால் ஒரு நூற்று ஒரு ரூபாய்த் தாளை உண்டாக்க முடியாது.

அற்புதங்களின் மீதான ஈர்ப்பு உதிர ஆரம்பித்திருந்தது. அன்றைய என் வயதுக்கு அது அதிகம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனாலும் நான் அப்படித்தான் இருந்தேன். அதிசயப் பிறவிகளும் கடவுளை நோக்கிய அவர்களது முயற்சிகள் மிகுந்த பயணங்களும் தொடக்கத்தில் எனக்கும் ஆர்வம் தரத்தக்கவையாகத்தான் இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் மனித மனத்தினும் பெரிய அற்புதம் வேறில்லை என்று கண்டேன். அதை அலையவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் எத்தனை சுகமான காரியம்! முட்டாள்தனமாக அதைக் கட்டுப்படுத்தி ஒருமையில் நிறுத்துவதை யோகமென்கிறது உலகம். என்ன பெரிய சித்து? என்ன பெரிய அதிசயம்? என் சட்டைப்பையில் அந்தக் கிழவன் நூறு ரூபாய்த் தாளை எனக்குத் தெரியாமல் வைத்தது ஓர் அற்புதமா? எந்தப் பிரயத்தனமும் இன்றி எனக்குத் தேவையான பணம் என்னிடம் வந்து சேர நான் ஒரு வழி கண்டறிந்தேனே, அதுவல்லவா அற்புதம்?

நான் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இப்படியெல்லாம் நான் எண்ணுவதைக்கூட அவன் படித்திருப்பான் என்று அறிவேன். அதனாலென்ன? எதிராளி மனத்துக்குள் ஓடுகிற எண்ணங்களை இழுத்து நிறுத்திப் படிப்பது ஓர் அறிவியல். ஆனால், அது மின்சார ரயிலில் பயணம் செய்கிறபோது வெளியே விரையும் கம்பங்களை எண்ணுவதை நிகர்த்ததுதான். இன்னொருவன் மனத்தைப் படித்து எனக்கென்ன ஆகப்போகிறது? அடுத்தவர் டைரியை வாசிக்கும் எளிய கிளுகிளுப்புதான் அதிலும் இருக்கிறது. எனக்கு மனிதர்களை அவரவர் சொற்களின் மூலம் படிக்கவே விருப்பம். உண்மையும் பொய்யும் மாறி மாறி முலாம் பூசுகிற சொற்கள். பொய்யும் அழகுதான். உண்மையின் பேரெழில் அதற்கும் உண்டு. முற்றிலும் உண்மையானவை எப்படி அலுத்துப் போகுமோ, அதே போலத்தான் முழுப் பொய்களும் திகட்டும். மனிதர்கள் தம் மானசீகத்தில் சரி விகிதம் அறிந்து அதைக் கலந்து வெளிப்படுத்துகிறார்கள். அதுதான் அழகு. அதன்மூலம்தான் மக்களைப் படிக்க வேண்டும். பூரணத்தில் இருந்து பூரணத்தை ஏன் எடுக்க வேண்டும்? பூரணங்கள் அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கட்டும். நான் பிசிறுகளின் காதலனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

நான் அந்தக் கிழவனிடம் விடைபெற்று, சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஏறியதுமே கண்டக்டரிடம் அந்த நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்து டிக்கெட்டும் வாங்கிவிட்டேன். அது யார் காசோ, எங்கிருந்து வந்ததோ. வாழைப்பழப் பிள்ளையாரின் வேறொரு வடிவம். ஒழியட்டும் என்று எண்ணிக்கொண்டு கண் மூடித் தூங்க ஆரம்பித்தேன்.

இரண்டு மணி நேரம் அயர்ந்து தூங்கித்தான் போனேன். பிறகு என்னருகே இருந்தவரிடம் இருந்து செய்தித் தாளை வாங்கிப் புரட்டினேன். வண்டி விழுப்புரம் தாண்டியதும் ஒரு சாலையோர விடுதியின் முன்னால் நின்றது. பத்து நிமிடங்கள் நிற்கும் என்று கண்டக்டர் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார். எனக்கும் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று தோன்றியது. வண்டியை விட்டு இறங்கினேன்.

முன்புறம் கூரை வேய்ந்த ஒரு சிறிய உணவகம் அது. வெளியே ஒரு ஸ்டூலில் பெரிய ஸ்பீக்கர் வைத்துப் பாடல் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். குளிர்பானங்கள். பிஸ்கட்டுகள், திரைப்படப் பாடல் ஒலித்தட்டுகள். உள்ளே முட்டை தோசை, இடியாப்பம் தயாராக உள்ளதாக வாசலில் நின்று ஒருவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒரு கணம் தயங்கினேன். சரி, காப்பிதானே சாப்பிடப் போகிறோம் என்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். காப்பி சொல்லிவிட்டுத் திரும்பியபோது என் பக்கத்தில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவளும் ஒரு காப்பி சொன்னாள். சொல்லிவிட்டுச் சட்டென்று என்னிடம் திரும்பி, ‘வேணுமா?’ என்று கேட்டாள்.

‘என்ன?’

‘வேணுமா?’

‘என்னது வேணுமா?’

‘ஐய, தெரியாத மாதிரி கேக்குது பாரு’ என்று மிகவும் உரிமையுடன் என் விலாவில் இடித்தாள்.

எனக்குப் புரிந்தது. சட்டென்று நான் அங்கிருந்து எழுந்து அடுத்த மேசைக்குச் சென்று உட்கார்ந்துகொண்டேன். அவள் சில விநாடிகள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, ‘காப்பி வேணா’ என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே போய்விட்டாள்.

நான் காப்பியைக் குடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவள் எனக்காகக் காத்திருந்ததைக் கண்டேன். அவள் ஏதும் பேசுவதற்குள் பேருந்தில் ஏறி உட்கார்ந்துவிட வேண்டும் என்று நினைத்து வேகமாக நடந்தேன். ஆனால் அவள் நான் முற்றிலும் எதிர்பாராவிதமாக என் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

‘வண்டி இன்னும் அஞ்சு நிமிசம் நிக்கும். வேணுன்னா சொல்லு. பின்னாடி இடம் இருக்குது. பதினஞ்சு ரூபா குடு. போதும்.’

நான் அவளை முறைத்தேன். இதென்ன விபரீதம்? பட்டப் பகலில் பொது வெளியில் இப்படிப் பேச முடியுமா? சரி முடிகிறது. ஐந்து நிமிடங்கள். பதினைந்து ரூபாய். ஒரு நேர்த்திக்கடன் போல் யாராவது இதற்கு ஒப்புக்கொண்டு ஒதுங்குவார்களா?

‘வேணான்னா வேணான்னு சொல்லு. நான் அடுத்த ஆளப் பாக்கப் போவேன்ல? டைம் வேஸ்ட் பண்றியே? பஸ்ஸு கெளம்பிரும்ல?’

‘வேணாம்’ என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சற்றுப் படபடப்பாக இருந்தது. நான் வீட்டைவிட்டுத் தனியே எங்கும் போகாதவன். இந்தப் பயணம் நான் திட்டமிடாதது. என் அப்பாவும் அம்மாவும் என்னைக் காணாமல் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏதோ ஒரு நப்பாசையில் அண்ணா இருக்கும் இடம் தெரிந்ததால், அவனைத் தேடித் தனியே போய்விட்டேன். அவனைப் பார்க்க முடியாவிட்டாலும் அவனைப் பற்றிய ஒரு பெரிய உண்மையை அறிந்து வந்திருக்கிறேன். கிழவன் சொன்னதற்காக இல்லாவிடினும் இதை நிச்சயம் நான் வீட்டில் சொல்லிவிடுவேன். ஏதோ ஓரிடத்தில் ஒவ்வொரு சங்கதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆக வேண்டும்.

வண்டி அங்கிருந்து கிளம்பியபோது, அந்தப் பெண் நான் அமர்ந்திருந்த இடத்தருகே வந்தாள். நான் அவளைப் பார்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு எங்கோ பார்க்க ஆரம்பித்தேன். அவள் சிரித்தாள். ஏனோ அதை நான் பார்த்துவிட்டேன்.

‘தொட்டுப் பாக்கணுன்னு தோணுதில்ல? அப்பறம் என்ன?’ என்று அவள் கேட்டாள். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. சீ என்று வேறுபுறம் திரும்பிக்கொண்டேன். வண்டி வேகமெடுத்து வெகுதூரம் சென்ற பிறகுதான் என்னால் நிதானத்துக்கு வர முடிந்தது. அப்போது நினைத்தேன். அது உண்மையா? அவளைத் தொட்டுப் பார்க்க எனக்குத் தோன்றியதா?

நிச்சயமாக இல்லை. ஆனால் தொட்டுப் பார்த்திருக்கலாம் என்று இப்போது நினைத்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com