42. உடலும் உள்ளமும்

சுகமளிக்கக்கூடிய எதையும் அலங்கோலப்படுத்திப் பார்ப்பது தகாது. ஒரு சுகத்துக்காக நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்வது அதனினும் துக்ககரமானது.

இரவு ஏழு மணிக்குப் பேருந்து மாமண்டூரை நெருங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் வீசிய காற்றில், பகல் முழுதும் அடித்த வெயிலின் மிச்சம் இருந்தது. நான் மிகவும் களைத்திருந்தேன். குறுகலான இருக்கையில், இன்னொருவர் அருகே அமர்ந்திருப்பது மிகுந்த வலி தரத்தக்கதாக இருந்தது. நான் நிமிர்ந்து உட்கார்ந்தால் அவர் தோளில் இடித்தது. காலை நீட்ட முயன்றால் எனக்குக் குறுக்காக அவர் கால் நீட்டியிருந்தார். திரும்பினால் உரசவேண்டி இருந்தது. எனக்குச் சிறிது நேரம் கால்களை மடக்கி உட்கார வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமாக இல்லை. ஒரு காலை மடக்கிவிட்டேன். இன்னொன்றைத் தூக்கி மடக்க முடியவில்லை. எதிர் இருக்கையில் முட்டிக்கொண்டு நின்றது. அத்தனை நெருக்கம். இன்னொரு ஐந்து பத்து நிமிடங்களுக்கு எங்காவது வண்டியை நிறுத்தி இளைப்பாற அனுமதிக்கமாட்டார்களா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது விபத்தானது.

நான் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் சரியாகத்தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். எதிர்ப்புறம் வந்த காருக்கு அந்த இரவுப்பொழுதில் அத்தனை வேகம் இருந்திருக்கக் கூடாது. இத்தனைக்கும், முழுதும் மோதி நொறுங்கவில்லை. ஒரு உரசல்தான். அதற்குள் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு வண்டியை இடப்புறம் ஒடித்து வளைத்துவிட்டார்.

ஆனாலும் அது விபத்துதான். கூக்குரல்களும் அலறல்களும் பேருந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்களை விழித்தெழச் செய்துவிட்டது. எல்லோரும் எல்லாக் கம்பிகளிலும் மோதிக்கொண்டோம். ஆளாளுக்கு என்னென்னவோ சொல்லிக் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஓட்டுநர் ஒரு வழியாக வண்டியைச் சாலையோரம் கொண்டு சென்று நிறுத்தினார். காத்திருந்தாற்போல், அத்தனை பேரும் அலறிப் புடைத்துக்கொண்டு வண்டியை விட்டு இறங்கிவிட்டார்கள்.

பேருந்தில் உரசிய கார், எதிர்ப்புறம் தன் கட்டுப்பாட்டை இழந்து எப்படி எப்படியோ ஓடியிருக்க வேண்டும். விபத்தான இடத்துக்கு இருபதடி தூரம் தள்ளிச் சென்று, ஒரு நாய் சிறுநீர் கழிக்கும் தோற்றத்தில் பின் சக்கரத்தை உயர்த்திக்கொண்டு எதிலோ மோதி நின்றிருந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய கண்டக்டரும் டிரைவரும் அந்தக் காரை நோக்கித்தான் முதலில் ஓடினார்கள். அதற்குள், அந்தப் பிராந்தியத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தவர்களும் சாலையோரக் கடைக்காரர்களும் அங்கே குழுமிவிட்டார்கள்.

நல்லவேளையாகக் காருக்குள் இருந்தவர்களுக்கு காயம் மட்டுமே பட்டிருந்தது. யார் உயிரும் போகவில்லை என்று சில விநாடிகளில் தெரிந்துவிட்டது. நான் அமர்ந்திருந்த இருக்கையின் முன் இருக்கையில்தான் முட்டிக்கொண்டேன். நெற்றியிலும் மூக்கிலும் நல்ல வலி இருந்தது. என் அருகே இருந்தவர் புத்திசாலித்தனமாக அந்தச் சந்தர்ப்பத்தில் என் மீது சாய்ந்து என்னைக் கொலை செய்ய வருபவர்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவருக்கு வலிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. சாலையோரம் நாங்கள் கூடி நின்று, நடந்த விபத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். யாருக்கும் உயிர் போகவில்லை என்பது எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. ஆனால் பேருந்து உடனே புறப்பட வாய்ப்பில்லை என்று கண்டக்டர் வந்து சொன்னார். விபத்துக்குக் காரணமான காரோட்டி தன் தவறை ஒப்புக்கொண்டாலும், போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டதால் அவர்கள் வரும்வரை வண்டியை எடுக்க முடியாது.

இது எனக்கு மிகுந்த ஆசுவாசம் அளித்தது. நான் கால் வலி தீர மெல்ல நடக்க ஆரம்பித்தேன். அந்நாள்களில் மாமண்டூர்ச் சாலையில் கடைகள் அதிகம் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு பெட்டிக்கடைகள் மட்டும்தான் இருந்தன. அவற்றையும் விளக்கு வைத்த ஒரு மணி நேரத்தில் மூடிவிடுவார்கள். எல்லாக் கடைகளின் வாசலிலும் நாய்கள் படுத்திருந்தன. சாராயக் கடைக்குச் செல்லும் வழி என்று அம்புக்குறி இட்ட போர்ட் ஒன்றைக் கண்டேன். அது ஒரு குறுகலான பாதையில் போகச் சொல்லி வழி காட்டியது. முற்றிலும் வெளிச்சமில்லாத சாலை. ஒருபுறம் சீமைக்கருவேல புதர்களும் மறுபுறம் ஏதோ ஒரு பெரிய தொழிற்சாலையின் பின்புற காம்பவுண்டு சுவரும் அந்தப் பாதைக்கு அரண்களாக இருந்தன. நான் ஏன் அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினேன் என்று தெரியவில்லை. சும்மா சிறிது நேரம் நடப்பது மட்டுமே என் நோக்கம். ஒரு ஐந்து நிமிடங்கள். போதும். திரும்பி வந்தால் பேருந்தை எடுத்துவிடுவார்கள். பத்து இருபதுக்கு செங்கல்பட்டில் கடைசிப் பேருந்து கிளம்பும். அதைப் பிடித்துவிட முடிந்தால் கேளம்பாக்கத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து போய்விடலாம் என்று எண்ணியிருந்தேன்.

அந்தக் குறுகிய பாதையில் நூறடி நடந்திருப்பேன். புதருக்குள் இருந்து யாரோ யாரையோ அழைப்பதுபோலத் தெரிந்தது. இருட்டில் உருவம் தெரியவில்லை. ஆனால் அங்கே யாரோ இருந்தார்கள். மேலும் சிறிது நடந்தபோது, எனக்கு எதிரே ஓர் உருவம் சற்றுத் தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். யாரோ சாராயக் கடையில் இருந்து திரும்பிக்கொண்டிருக்க வேண்டும். இந்த சாராய போதை என்பது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. எனக்கு அந்த திருவானைக்கா கிழவன் கொடுத்த அபின் பிடித்திருந்தது. சட்டென்று தரையில் இருந்து தூக்கிப் பஞ்சுப் பொதியின் மீது உட்கார வைத்துவிடுகிற பொருள். அது ஒரு அனுபவம்தான். மறக்க முடியாததும்கூட. எனக்கென்னவோ, சாராயம் அப்படியொரு அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்காது என்று தோன்றியது. அபின் கலந்த சர்க்கரைப் பொங்கலைத் தின்றபோது நான் உளறவோ, நடை தடுமாறவோ இல்லை என்பதை நினைவுகூர்ந்தேன். மயக்கத்தில்தான் கிடந்திருக்கிறேன். ஆனால் அதை மயக்கம் என்று உணரவேயில்லை. கோயிலில் இருந்து திருவானைக்கா வரை அவனோடு நடந்து சென்றபோதும் சரி, அவன் வீட்டுத் தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தபோதும் சரி. என் செயல் எனக்கு நினைவில் இருந்தது. அப்பாவும் அம்மாவும் தேடுவார்களே என்று நினைத்துக்கொண்டேதான் இருந்தேன். உறங்கிய பின்பும் கனவில் நான் முழு விழிப்புடன் இருந்தேன். திருவிளையாடல் திரைப்படத்தில் ஞானப்பழத்துக்காக மயில் மீதேறி உலகம் சுற்றிய பாலமுருகனைப் போலச் சுற்றி வந்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஆனால் நான் பார்த்த குடிகாரர்கள் எப்போதும் உளறிக்கொண்டே இருந்தார்கள். கால்களை வளைத்து வளைத்து நடப்பார்கள். எந்தக் கணமும் விழுந்துவிடுவதற்குத் தயாராவதற்காகவே அவர்கள் குடிக்கிறார்கள் என்று தோன்றியது. எந்நாளும் நான் குடிக்கமாட்டேன் என்று தோன்றியது. போதை ஒரு சுகானுபவம் என்றால், சுகமளிக்கக்கூடிய எதையும் அலங்கோலப்படுத்திப் பார்ப்பது தகாது. ஒரு சுகத்துக்காக நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்வது அதனினும் துக்ககரமானது. சொன்னேனல்லவா? நான் துக்கங்களை வெறுப்பவன். துயரங்களின் சாறு என் மீது தெளித்துவிடாதிருக்க எப்போதும் எச்சரிக்கையோடு நடப்பவன்.

நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அந்தக் குடிகாரன் முட்புதர்களை விலக்கி, உள்ளே இறங்கிச் செல்ல ஆரம்பித்தான். ஒரு ஆர்வத்தில் நான் புதரோரம் நின்று அவன் போவதைக் கவனிக்கத் தொடங்கினேன். அதிகத் தொலைவு இல்லை. அவனை அங்கே ஒலியெழுப்பி அழைத்த பெண், நான்கைந்து புதர்களுக்குப் பின்னால்தான் நின்றுகொண்டிருந்தாள். அவளால் அவன் முகத்தைக் காண முடியாது. அவனுக்கும் அவளது முகம் புலப்பட வாய்ப்பில்லை. இருள் அனைத்து முகங்களின் மீதும் கருமை பூசி மறைத்து இருந்தது. இருப்பினும், எனக்கு ஒலிகள் போதுமானதாக இருந்தது. ஒரு சல்லாபத்தை, ஒலிகளைக் காட்டிலும் வேறெது துல்லியமாக உணர்த்தும்?

நானும் ஒரு புதரின் பின்னால் மறைந்து நின்றுகொண்டு, சத்தம் வந்த திக்கையே பார்த்துக்கொண்டிருந்தேன். தரையொன்றும் அத்தனை சுத்தமாக இல்லை. திக்கித் திணறித்தான் கால் வைக்கவேண்டி இருந்தது. இருப்பினும், அனுபவசாலியான அந்தப் பெண், ஒதுங்கியிருந்த புதரின் அருகே இருவர் அமரவும் கிடக்கவும் இடம் உண்டாக்கி வைத்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன். சட்டென்று எனக்கு மதியம் சந்தித்த பெண்ணின் நினைவு வந்தது. ஒரே நாளில் ஒரே மாதிரியான இரு பெண்கள். வீட்டுக்கு வெளியே உலகம் இப்படியாகத்தான் எனக்கு விரிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டுச் சென்றபோது இந்தப் பாதையைக் கடந்திருப்பார்களா? அண்ணா வாய்ப்பில்லை. ஒருவேளை வினய் இதனைக் கண்டிருக்கலாம் என்று நினைத்தேன்.

என்றைக்காவது நேரம் ஒதுக்கி அமர்ந்து வினய்யைக் குறித்து யோசிக்க வேண்டும் என்று வெகு நாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். அவன் விட்டுச் சென்றதன் நியாயம் எனக்கு அப்போதுவரை விளங்கவேயில்லை. அண்ணாவைப்போல அவன் சந்தேகத்துக்கு இடமளித்து என்றுமே நடந்துகொண்டதில்லை. பெண் உடல் குறித்து அவன் நிறைய சிந்தித்துக்கொண்டிருந்தான் என்பது எனக்குத் தெரியும். உறுப்புகளின் உட்புறம் உள்ள எலும்பு, நரம்பு, ரத்தம் குறித்தெல்லாம் பேசினாலும் எனக்கென்னவோ அவன் பத்மா மாமியின் மகள் பற்றிய ஏக்கத்தையே வேறு வடிவில் தணித்துக்கொண்டிருந்ததாகப் பட்டது. ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பொதுவாகவே, பாடசாலைகளில் படிக்கப்போகிற பையன்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகிவிடும். இது மிகையே இல்லை. திருவிடந்தையிலேயே வினய்க்கு முன்னதாக பட்டாச்சாரியாரின் மகன் அகோபிலத்தில் ஒரு பாடசாலைக்கு ஏழு வயதில் கிளம்பிப் போனான். பதினாறு வயதில் வைரக் கடுக்கன்னும் கட்டுக் குடுமியுமாக அவன் ஊர் திரும்பியபோது, சன்னிதித் தெருவில் அவனுக்குப் பெண் கொடுக்க ஆறேழு குடும்பங்கள் தயாராக இருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள்.

‘ஸ்ரீதரனுக்குப் பதினெட்டு வயசுல அவாத்துல கல்யாணம் பண்ணிட்டா. அடுத்த வருஷம் ஒரு பொண்ணு. ரெண்டு வருஷம் கழிச்சி ஒரு பிள்ளை. இன்னிக்குப் பாரு, இப்பவே மாமா மாதிரி ஆயிட்டான், தொந்தியும் சந்தனமுமா.’

கேசவன் மாமாவின் நண்பர் ஒருவர் மகாபலிபுரத்தில் இருந்தார். அவரது பிள்ளையை கேசவன் மாமாதான் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று ராஜா வேதபாட சாலையில் சேர்த்துவிட்டு வந்தார். ஸ்மார்த்தப் பையன். அவனுக்குப் பதினேழு வயதிலேயே திருமணமாகிவிட்டது. அவன் கல்யாணத்துக்கு மாமா என்னையும் அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது.

‘சட்டப்படி தப்புன்னு சொல்லுவா. கம்ப்ளைண்டுன்னு ஒண்ணு குடுக்கலன்னா சட்டத்துக்கு என்ன மதிப்பு?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

வினய் வேதபாட சாலைக்குப் போய்ச் சேர்ந்தபோது, நான் அதைத்தான் நினைத்தேன். எப்படியும் நாலாயிரம் கற்றுக்கொண்டு திரும்பும்போதே அப்பா அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து வைத்துவிடுவார். அதிகபட்சம், இருபது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிவிடும். அந்தப் பெண் பத்மா மாமியின் மகள் சித்ராவா, வேறு யாராவதா என்பது மட்டும்தான் எனக்கு மிச்சமிருந்த வினா.

ஆனால் அவனும் சொல்லாமல் ஓடித்தான் போனான். சித்ராவினும் பேரழகி ஒருத்தி அவனுக்குக் கிடைத்திருப்பாள் என்று எண்ணிக்கொள்வது அப்போது எனக்கு சௌகரியமாக இருந்தது. வாழ்வை வெறுத்து ஓடவோ அல்லது அண்ணாவைப்போல் ஞான வேட்கை கொண்டு அலைந்து திரியவோ அவன் பொருத்தமானவனில்லை என்று நினைத்தேன். வினோத்திடமும் இதையேதான் பலமுறை சொன்னேன். அவன் நம்பினானா இல்லையா என்பதல்ல. திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக்கொள்வதன் மூலம், ஏதோ ஒரு விதத்தில் என்னைத் திருப்திப்படுத்திக்கொள்வதாகத் தோன்றியது. எனக்கு அது வேண்டியும் இருந்தது.

இரண்டு நிமிடங்கள் நான் அந்த புதரின் பின்னால் நின்றுகொண்டு கவனித்திருப்பேன். முதலில் சிரிப்பும் கிசுகிசுப்பான பேச்சொலியும் கேட்டன. அவர்கள் சல்லாபத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிந்தது. எதற்குப் பைத்தியம்போல் இதைப் போய் நின்று பார்க்கிறேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இருந்தாலும் ஓர் ஆர்வம் இருந்தது. ‘தொட்டுப் பாக்கத் தோணுதில்ல?’ என்று மதியம் கேட்ட பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. அவசியம் தொட்டுப் பார்க்க வேண்டும்தான். அதிலென்ன சந்தேகம்? இத ஈர்ப்பில் அல்லவா உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது? இதில் எனக்கு வெட்கமெல்லாம் இல்லை. ஆனால், உச்சி வெயிலிலோ அல்லது இம்மாதிரி இருட்புதரிலோ எனக்கு முடியாது. செயல்பாடுகளில் லலிதம் முக்கியம். ஒவ்வொரு அசைவிலும் உள்ளார்ந்த பேரமைதியும் அதனுள்ளே பெரும் இசையும் இழையோடுவது அதனினும் எனக்கு முக்கியம். வாழ்வின் வாசனை நிதானத்தில் உள்ளது. பதற்றத்தின் மேடு பள்ளங்களை நான் அறவே வெறுத்தேன். தவிரவும், வாடகைக்கு ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வதெல்லாம் எனக்கு ஒவ்வாமை தரும். என் இயல்பு வேறு. என் பிரத்தியேகங்களின் தன்மை வேறு. எனக்குள் ஒரு கிருஷ்ணரைப்போல நான் எப்போதும் கோபிகைகளின் அரவணைப்பில் இருந்தேன். ஆ, அந்த நினைவுதான் எத்தனைப் பெருஞ்சுகம்!

சரி கிளம்பிவிடலாம் என்று எண்ணி நான் புதரை விட்டு விலகி, சாலைக்கு வந்தேன். நான் நடக்கத் தொடங்கிய விநாடி அந்தச் சத்தம் என் செவியைத் தாக்கியது. எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஒரு மரண அறிவிப்பு ஓலம். சத்தம் எழுந்த உடனேயே அந்தப் புதருக்குள் இருந்து வெளிப்பட்டு அந்தப் பெண் ஓட ஆரம்பித்தாள். அவள் கையில் ஒரு கத்தி இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com