43. சாட்சிக்காரன்

என்னைக் கண்டு நீ அச்சப்படவே தேவையில்லை. நான் வெறும் ஒரு சருகை நிகர்த்தவன். இருக்கிறேன் என்பதைத் தவிர என் இருப்பின் பொருள் ஏதுமில்லை.

நான் அதற்குமுன் ஒரு கொலையைக் கண்டதில்லை. இப்போதுகூட ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் தெரியுமே தவிர, நான் அதை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அந்தக் குடிகாரனின் மரண ஓலம் என்னை அந்தக் கணம் சற்று அசைத்தது. எத்தனைத் தெளிவான திட்டம்! அவன் குடித்துவிட்டு வருகிற வழியை அவள் தேர்ந்தெடுத்திருந்தாள். முட்புதர்கள் நிறைந்த இடம். தெரு விளக்குகூட இல்லாத இருட்டுச் சூழல். ஒரு மரண ஓலம் கேட்டால்கூட யாரும் அவ்வளவு விரைவில் ஓடி வந்துவிட முடியாத இட அமைப்பு. அந்தச் சாலையின் இறுதியிலோ அல்லது திருப்பத்திலோதான் சாராயக்கடை இருக்க வேண்டும். சாலை முழுதும் புதர்களும் ஒரு பெரும் காம்பவுண்டுச் சுவரும் மட்டுமே இருபுறமும் நிறைந்திருந்தன. ஒரு பேச்சுக்கு சாலை என்கிறேனே தவிர, அது தார் காணாத மண் தரைதான். மேடு பள்ளங்களும் சாக்கடை நீர்த்தேக்கங்களும் மிகுதி. இருளுக்குக் கண் பழகிய பின்புதான் வழி புலப்படும். மிகச் சரியான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, துல்லியமாகத் தான் நினைத்ததை அந்தப் பெண் முடித்திருந்தாள்.

இப்போது என் முன் இருந்த குழப்பங்கள் இரண்டு. நான் இறந்தவனை அல்லது இறந்துகொண்டிருந்தவனைக் கவனிப்பதா? அல்லது குத்திக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடிக்கொண்டிருப்பவளைத் துரத்திச் செல்வதா? இரண்டுமே என் இயல்புக்குப் பொருந்தாத காரியங்கள் என்று உடனே தோன்றியது. அந்த இடத்திலிருந்து அகன்றுவிடவே நான் மிகவும் விரும்பினேன். விடிந்ததும் எப்படியும் போலிஸ் வரும். அதிர்ச்சித் தகவல் பிராந்தியம் முழுதும் பரவும். கும்பல் கூடும். கொலைக்கான காரணங்கள் அலசப்படும். கொலையாளி யார் என்ற தேடல் தொடங்கும். அது பெரும்பாலும் இறந்தவனின் பின்னணியில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கப்படும்.

அவன் யாராக இருப்பான்? அவன் ஒரு குடிகாரன். அவனுக்கும் ஒரு பெயர் இருக்கும். பெற்றோர் இருக்கலாம். மனைவி, மக்களும்கூட. குத்திவிட்டு ஓடியவளை ஒரு கணம் கணிகையென்று எண்ணிவிட்டேன். அவள் அவனால் வஞ்சிக்கப்பட்டவளாக இருக்கலாம். மனைவியாகவேகூட இருக்கக்கூடும். எத்தனை நாள் வெறுப்போ, விரக்தியோ, வேதனையோ திரண்டு எழுந்து ஒரு கணத்தில் அவளை இம்முடிவெடுக்க வைத்திருக்கிறது.

அப்பா! என்ன ஓட்டம் ஓடினாள். அது என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விரைவு. புதரில் இருந்து அவள் வெளிப்பட்டு சாலையை அடைய மிஞ்சினால் மூன்று விநாடிகள்கூட ஆகியிருக்காது. அப்படியொரு மிருகப் பாய்ச்சல். ஆனால் கொன்றுவிடுவது என்று முடிவு செய்துவிட்ட பின்பு அவனது வருகைக்காகவும் தருணத்துக்காகவும் அவள் மணிக்கணக்கில் காத்திருந்திருப்பாள். அதில் சந்தேகமில்லை. அவள் முகத்தை நான் பார்த்திருக்கலாம். ஒரு கொலையை உத்தேசித்து, திட்டமிட்டு, செய்தும் முடித்த ஒரு பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நானறிந்ததெல்லாம் என் அம்மாவின் முகம் மட்டும்தான். என்னிடம் எப்போதும் புன்னகையையும், வீட்டில் பொதுவாக உணர்ச்சியற்ற ஒரு பாவத்தையும் நிரந்தரமாக அவள் வழங்கிக்கொண்டிருப்பாள். இது எனக்கு நினைவு தெரிந்த நாளாக. அம்மா என்னிடம் என்றுமே புன்னகையின்றிப் பேசியதில்லை. அது பாசத்தில் வருகிற புன்னகையாக எனக்குத் தோன்றியதுமில்லை. எனக்கான அவளது முகத்துக்கு அது ஒரு அடையாளச் சின்னம். சிறு கோபங்கள் உதிரும் கணங்களிலும் அவள் முகத்தில் அந்தப் புன்னகையை நான் கண்டிருக்கிறேன். அது மின்சாரக் கம்பங்களில் எப்போதேனும் நெருப்புப் பொறி தோன்றி உதிர்வதுபோல மின்னி மறையும்.

அப்பாவுடன் பேசுகிறபோதெல்லாம் அம்மாவின் முகத்தில் ஒரு சோகத்தின் நிழல் படரும். ஆனால் குரல் மாறாது. சொற்களில் கனம் கூடாது. எளிய சொற்கள். மிகச் சிக்கனமான வெளிப்பாடு. ஆனாலும் சோகம்தான் அதில் நீரோட்டமாயிருக்கும். சோகம்தானே தவிர, விரக்தி இராது. என்ன ஆனால் என்ன? வாழ்ந்துதான் தீர வேண்டும் என்ற தெளிவு அவளிடம் என்றும் இருப்பதாக எப்போதும் நினைப்பேன்.

அம்மாவுக்கு அப்பால் நான் பார்த்த, நினைத்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். பத்மா மாமியின் மகள் சித்ரா ஒரு சுமாரான அழகி என்பதில் சந்தேகமில்லை. எனக்கு அவளைப் பிடிக்கும். பிடிக்கும் என்றால், திருட்டுத்தனமாக அவளை நான் பல சமயம் நினைத்து ரசித்திருக்கிறேன். அவளைப் போலவே பள்ளியில் என்னோடு அப்போது படித்துக்கொண்டிருந்த கார்த்திகாயினியையும் அவ்வப்போது ரசிப்பேன். கார்த்திகாயினி மலையாளி. அவளது தந்தை மின்சார வாரியத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். பூர்வீகம் எர்ணாகுளம் என்றாலும், இரண்டாம் வகுப்பின்போதே அவள் இங்கே இடம் மாறி வந்து சேர்ந்தவள். ஆனால் எனக்குப் பத்தாம் வகுப்பின்போதுதான் அவள் பரிச்சயமானாள்.

இவர்கள் இருவரைத் தவிர தென்பட்டில் விசாலாட்சி என்றொரு பெண், தையூர் பண்ணையின் பேத்தி முருகுசுந்தரி, கேளம்பாக்கம் மன்னார் உணவக உரிமையாளரின் தங்கை மகள் பானுமதி என்று மேலும் சில பெண்களையும் நான் அறிவேன். இவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவரக்கூடியவர்களாக இருந்தார்கள். பல்வேறு உணர்ச்சிகள் வந்து போகும் முகங்கள்தான் எல்லோருக்கும் என்றாலும், ஒரு கொலையை உத்தேசிக்கக்கூடிய பெண் இவர்களில் யாரும் கிடையாது.

சரி, ஒரு தவறைத் தெரிந்தே செய்வோம் என்று முடிவு செய்து, நான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டேன். மனசாட்சியுள்ள ஒரு மனிதன் மிக நிச்சயமாகக் குத்திக் கொல்லப்பட்ட ஒருவனை அப்படியே விட்டுவிட்டுப் போகமாட்டான். நான் மனசாட்சியுள்ளவன் அல்லன். அல்லது என் மனம் நான் செய்ய நினைக்கிற காரியங்களுக்கு மட்டுமே சாட்சி சொல்லும்.

அடடே, என்ன அழகு இது! என் மனமும் அதைக் குறித்து நினைக்கும் நானும் வேறு வேறாக அல்லவா மாறிவிட்டோம். என்றால் என் மனத்தை நினைப்பது எது? என் உடலா? என் ஆன்மாவா? மூளைதான் யோசிக்கிறது. மனத்தைக் குறித்து யோசிக்கிற மூளை. எனில் மூளைதான் ஆன்மாவாக இருக்குமோ? அண்ணாவிடம் கேட்டால் ஏதேனும் ஒரு பதில் கண்டிப்பாகச் சொல்லுவான். என்றைக்காவது பார்க்க நேர்ந்தால் கேட்க வேண்டியதுதான்.

நான் அந்த இருட்டுச் சந்துப் பாதையில் இருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தேன். பேருந்து புறப்பட ஆயத்தமாகியிருக்கும் என்று தோன்றியது. இந்த ஏழெட்டு நிமிடங்களில் போலிஸ் வந்து, விசாரணையை முடித்திருப்பார்கள். விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை என்பதால், வண்டியை அனுப்பி வைப்பதில் சிக்கல் இருக்காது. அந்தக் காரோட்டிதான் பாவம். அநேகமாக அவன் மாட்டிக்கொள்வான் என்று நினைத்தேன்.

நான் பெருஞ்சாலையை நெருங்கியபோது, பேருந்து இன்னமும் கிளம்பாமல் இருந்ததைக் கண்டேன். எப்படியும் செங்கல்பட்டை அடையவே நள்ளிரவாக்கிவிடுவார்களோ என்று சந்தேகம் வந்தது. அலுப்பும் களைப்பும் ஒரு கொலைக்கு சாட்சியாக இருந்தது குறித்த பதற்றமும் என் நடையைக்கூட மாற்றியிருந்தன. உண்மையிலேயே மிகவும் தளர்ந்துதான் போயிருந்தேன். சாலையைக் கடக்கவிருந்த நேரம் சட்டென்று நெருங்கி, என் கையைப் பிடித்து அவள் இழுத்தாள். எங்கிருந்து வந்தாள், என்னை எதற்கு இழுக்கிறாள் என்று எனக்கு ஒரு கணம் புரியவில்லை. திரும்பிப் பார்த்து, ‘என்ன’ என்று கேட்டேன்.

‘நில்லு. நீ அங்கதான நின்னுக்கிட்டிருந்த?’

‘எங்க?’

‘உள்ளார, முள்ளு புதராண்ட.’

இவளா? இவளா அந்தப் பெண்? வீதி விளக்கு வெளிச்சத்தில் இப்போது அவள் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. நினைத்தபடி கொலை செய்து முடித்துவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்துவிட்டவள், இன்னொரு புதரின் பின்னால் இருளோடு கரைந்து பதுங்கியிருந்த என்னையும் பார்த்திருக்கிறாளா! இது எப்படி சாத்தியம்? நான் அவள் முகத்தை அப்போது பார்க்கவேயில்லை. என்னால் அது முடியவில்லை. ஆனால் அவள் பார்த்திருக்கிறாள்.

‘கேக்கறேன்ல? நீதான அது?’

நான் அரைக்கணம் யோசித்தேன். பின், ‘ஆமா. ஒண்ணுக்குப் போகப் போனேன். அப்பத்தான் நீ உள்ளேருந்து ஓடி வந்தே.’

‘அதைக்கேக்கலை. அவன் செத்துட்டானா? அது தெரியுமா?’

‘நான் பாக்கலை.’

‘போலிசுல சொல்லப் போறியா?’

‘இல்ல. நான் வெளியூர். அந்த பஸ்ல போயிட்டிருக்கேன்’ என்று பேருந்தைச் சுட்டிக்காட்டினேன்.

அவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.

‘இல்லே. நிஜமாவே நான் போலிசுக்கெல்லாம் போகமாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கு’ என்று மீண்டும் சொன்னேன். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் என் முகத்தை மனத்துக்குள் எழுதிக்கொள்பவள் போல, என்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். தப்பித்தவறி என்னால் ஒரு பிரச்னை வருமானால் முகத்தை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம் என்று கருதியிருக்கலாம். ஆனால் பெண்ணே, ஒரு கொலையைக் கண்ட பின்பும், கொலையாளியை இத்தனை நெருக்கத்தில் பார்த்த பின்பும் சற்றும் பதற்றமுறாமல் நின்று பேசுகிற ஒருவனை நீ எவ்வாறு வகைப்படுத்துவாய்? என்னைக் கண்டு நீ அச்சப்படவே தேவையில்லை. நான் வெறும் ஒரு சருகை நிகர்த்தவன். இருக்கிறேன் என்பதைத் தவிர என் இருப்பின் பொருள் ஏதுமில்லை.

அவளுக்குச் சற்று நம்பிக்கையளிக்கலாம் என்று தோன்றியது. ‘வரேன்’ என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்தேன். அவள் சட்டென்று மீண்டும் என் கையை எட்டிப் பிடித்தாள்.

‘என்ன?’

‘ஒரு நிமிசம் வந்துட்டுப் போ’ என்று என்னை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

‘இல்லே. நான் போகணும். இந்த வண்டி போயிடுச்சின்னா கஷ்டம்.’

‘பரவால்ல வா’ என்றாள். கையை உதறிக்கொண்டு ஓடிப்போய் பேருந்தில் ஏறிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அதைச் செய்யவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com