46. உடலாகுபெயர்

இந்த மண்ணில் புத்தன் ஏன் ஜெயிக்கவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? கிருஷ்ணனால் ஏன் யுத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை என்று தெரியுமா உங்களுக்கு? ஆனால், இயேசு எப்படி உலகின் நம்பர் ஒன் ஆளுமையானார்?

நிலத்தின் நிறம் மாறிக்கொண்டே போகிறது. பச்சையும் பழுப்பும் சாம்பலும் சிவப்பும் வெளிர் மஞ்சளுமாகக் கண்ணெதிரே ரயிலின் சன்னல் செவ்வகத்துக்கு அப்பால் பூமி கணத்துக்கொரு நிறம் கொண்டு கடக்கிறது. ஆனால் வானம் ஒரே மாதிரி இருக்கிறது. படர்ந்து நகர்ந்த மேகத் திட்டுகளை ஏந்திய வானம். ஓடும் ரயிலின் தடதடப்பு உடலுக்குப் பழகிவிட்டிருக்கிறது. அதன் சத்தம் செவிக்குப் பழகியது போல. இப்போதெல்லாம் நீண்ட பயணங்களில் பொதுவாக நான் படிக்க விரும்புவதில்லை. பேச்சுகூட அத்தனை முக்கியமில்லை. நிலமும் வானமும் அடையாளமற்ற முகங்களும் எனக்குப் போதும். என்னையறியாதவர்கள் என்றால் இன்னுமே விசேடம். ஆனால் ஏனோ இந்த மக்கள் காவி ஆடை அணிந்தவர்களைச் சற்றுத் தள்ளி வைத்துப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதுவே சௌகரியம் என்று நினைக்கிறார்கள். என் காவி புனிதத்தின் சின்னமல்ல. அது என் குருநாதர் எனக்களித்தது. ஒரு போர்வை. ஒரு ஆயுதம். அல்லது ஒரு கேடயம். எதையும் துறக்காதவனின் காவி. சரி போ, உடுத்திக்கொள் என்று என் மீது தூக்கிப் போட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார். இதை நான் யாரிடமும் சொல்லுவதில்லை. சொல்லி என்ன ஆகப் போகிறது? நான் திருமணமாகாதவன். இம்மக்களுக்கு அது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ஆனால் துறப்பது என்றால் அது ஒன்றுதானா! ஒரு நிறத்துக்கு இந்த மண் அளித்திருக்கும் கௌரவம் மிகப் பெரிது. நான் அதை விழிப்புடன் கவனிப்பவன். ஒரு மாறுதலுக்கு அவ்வப்போது என் காவி பட்டுத் துணியாகும். என்னிடம் சில வெல்வட் காவி உடுப்புகளும் உண்டு. அபூர்வமாகச் சில சமயம் என் பிரத்தியேகத் தையல்காரர் என் அங்கியின் ஓரங்களை சரிகை வைத்து அலங்கரித்துத் தருவார். எனக்கு அதுவும் பிடிக்கும். சிறிய தாடியும் சிறந்த புன்னகையும் வெல்வட் காவி உடுப்பும் ஊடுருவும் பார்வையும் யாருக்கும் சாத்தியமே. ஆனால் இதன் சொகுசை அடையாளம் கண்டு அனுபவிக்க ஒரு தேர்ச்சி வேண்டும். அது என்னிடம்தான் உண்டு. அல்லது என்னைப் போலச் சிலர். மக்கள் பட்டுக்காவி சன்னியாசிகளை சீக்கிரம் விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு எளிய சில மூச்சுப் பயிற்சிகள் போதுமானதாக உள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் சட்டென்று ஒரு ஓய்வைப் பிச்சையாக அளிக்கும் பயிற்சிகள்.

என் ஆசிரமத்தை நான் திட்டமிட்டு உருவாக்கினேன். அமைதியை மட்டுமே அங்கு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தினேன். வெறும் அமைதி. ஓம் போன்ற ஒலித்தட்டுகள் அங்கே கூடாது என்று தீர்மானமாகச் சொல்லியிருந்தேன். திருவுருவங்களுக்கு இடமில்லை. பூஜைகள் இல்லை. மணிச்சத்தம் இல்லை. பிரசாதங்கள் கிடையாது. முக்கியமாக, நான் யாருக்கும் விபூதி அளிப்பதில்லை. என்னைத் தேடி வருகிறவர்களுக்குச் சொல்லித்தர என்னிடம் சில மூச்சுப்பயிற்சிகள் உண்டு. மிக மிக எளிதான பயிற்சிகள். அவை அவர்களை உட்காரவைக்கின்றன. உட்காருகிறவர்களோடு நான் பேச ஆரம்பிக்கிறேன். பேச்சு என்றால் உரையாடல். நான் கொஞ்சம் பேசுவேன். பிறகு எதிராளியைப் பேசவிடுவேன். அபத்தங்களை ரசிப்பது போலொரு சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. எனக்கு அபத்தங்களை ரசிக்கப் பிடிக்கும். இந்த உலகில் பேசப்படும் பெரும்பாலான விஷயங்கள் அபத்தமானவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பேசாதிருப்பது ஒன்றே புனிதமானது. எண்ணம் சொல்லாகும்போது அபத்தங்கள் ஆனந்தத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றன.

என் ஆச்சரியமெல்லாம் ஒன்றுதான். அபத்தத்தின் பூரணம் என்று தெரிந்தே நான் பேசுகிற பலவற்றை மக்கள் சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டு போகிறார்கள். என் முன்னால் கண்ணில் நீர் பெருக நின்று கைகூப்பி வணங்குகிறார்கள். ஆசிரமத்துக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை நன்கொடை அளிக்கிறார்கள். என்ன வேண்டும் இவர்களுக்கு? எது பற்றாக்குறையாகி என்னைத் தேடி வருகிறார்கள்?

மிகவும் யோசித்துவிட்டு நானொரு முடிவுக்கு வந்தேன். எதுவும் இல்லாமல் இவர்கள் யாரும் வரவில்லை. எல்லாம் அபரிமிதமாக இருக்கிறபடியால் வருகிறார்கள். எல்லாம் நிறைய இருக்கிறவர்களுக்கு எதுவுமில்லாதவனின் சகாயம் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டுவிடுகிறது. இத்தனைக்கும் நான் கடவுளைக்கூட முன் நிறுத்துவதில்லை. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசுவதில்லை. பொய் சொல்லாதே, திருடாதே, தருமம் செய் என்று போதிப்பதில்லை. வெறுமனே அவர்களைப் பேசவிட்டுக் கேட்கிறேன். ஒரு புன்னகையில் அரவணைத்துவிடுகிறேன். எல்லாம் சரியாகிவிடும் என்று யாருக்கும் வாக்குத் தருவதில்லை. முட்டி மோதி செருப்படி படு என்றுதான் சொல்கிறேன். கர்மாவை வாழ்ந்துதான் கழித்தாக வேண்டும். ஆனால் கவலையின்றிக் கழிக்க முடியும். எதற்குக் கவலை கொள்ள வேண்டும்? உன் உலகத்தில் உன்னைத் தவிர யாருமில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். அது ஒருவித உசுப்பிவிடும் உத்தி. போராடத் தூண்டும் உத்தி. செய்யப்போவது அவன்தான். செருப்படியும் அவனுடையதுதான். அடி வாங்கித்தான் தீர வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல ஒருவன் வேண்டியிருக்கிறான்.

என்ன விசித்திரம்! ஆனால் எனக்கு இது பிடித்திருந்தது. என் குருநாதர் எனக்கு வேத உபநிடதங்களின் பல அங்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் தர்க்க சாஸ்திரம் பயின்றிருக்கிறேன். யோகக் கலையின் மிகச் சில அம்சங்களை அறிவேன். அதிகம் பயிற்சி செய்ததில்லை. அவ்வப்போதைய முதுகு வலிக்கும் இடுப்புப் பிடிப்புக்கும் என்னால் சுய வைத்தியம் செய்துகொள்ள முடியும். அவ்வளவுதான். போதுமே?

ஒரு சமயம் வகுப்பில் மாணவன் ஒருவன் கேட்டான், ‘குருஜி, என்ன முயற்சி செய்தாலும் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை.’

‘அப்படியா? நீ என்ன முயற்சி செய்தாய்?’

‘நான் தியானம் செய்கிறேன். பிராணாயாமம் செய்கிறேன். ஜபம் செய்கிறேன்.’

‘சரி, கட்டுப்படுத்த முடியாத உன் மனம் எதை நோக்கி ஓடுகிறது?’

‘பெரும்பாலும் பெண்களை.’

‘சரியாகச் சொல். பெண் என்றால் முழு உருவமா, முலைகளா, யோனியா?’

அவன் ஒரு கணம் தயங்கினான். வெட்கப்பட்டு அருகே உள்ளவர்களைப் பார்த்தான்.

‘பரவாயில்லை சொல்’ என்று நான் மீண்டும் சொன்னேன்.

‘எல்லாம்தான் குருஜி.’

‘அப்படியென்றால் நீ மிகவும் சரியாக இருக்கிறாய். உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.’

‘ஆனால் இது தவறல்லவா?’

‘பெண்ணை நினைப்பது தவறென்றால் இந்த உலகில் பெண்கள் பிறந்திருக்க வேண்டியதே இல்லை. இதுவேதான் அவர்களுக்கும் ஆண்கள் விஷயத்தில்.’

‘ஆனால் காமத்தைக் கடந்தால் அல்லவா கடவுள்?’

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘யார் சொன்னது? எல்லாவற்றிலும் இருக்கிற கடவுள் காமத்தில் எப்படி இல்லாதிருப்பான்?’ என்று கேட்டேன்.

‘இதோ பார். மனோமயகோசத்தைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அது பிராணமயகோசத்தின் பங்காளி. இந்த இரண்டுமே சூட்சும வகையறா. இதனால்தான் சூட்சுமத்தை சிந்திக்காதே என்கிறேன். ஸ்தூலத்தில் இருந்து தொடங்கு. உன் உடலைக் கவனி. சிறிய பிரயத்தனங்களில் அதை உன் வசப்படுத்திவிட முடியும்.’

‘ஆனால் உடலைக் கவனித்தால் போதுமா?’

‘முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.’

இதுதான். இவ்வளவுதான். என் வகுப்புகளை நான் இவ்வாறுதான் அமைத்துக்கொள்கிறேன். துயரங்களில் இருந்து விடுதலை என்பது மனித குலத்தின் மாபெரும் கனவாக இருக்கிறது. ஆனால் எப்படி நான் இந்த மக்களுக்குச் சொல்லிப் புரியவைப்பேன்? மனித குலத்தின் கட்டுமானமே துயரங்களின் அடிக்கல்லின் மீது எழுப்பப்பட்டதுதான் என்பதை?

‘என் பிரியமான நண்பர்களே, இந்த மண்ணில் புத்தன் ஏன் ஜெயிக்கவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? கிருஷ்ணனால் ஏன் யுத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை என்று தெரியுமா உங்களுக்கு? ஜரதுஷ்டிரன் காலாவதியாகிப் போனான். வர்த்தமான மகாவீரர் இருந்த சுவடாவது இருக்கிறதா? ஆனால், இயேசு எப்படி உலகின் நம்பர் ஒன் ஆளுமையானார்?’

‘அது மிஷனரிகள் செய்த வேலை’ என்று ஒருவன் உடனே பதில் சொன்னான். நான் புன்னகை செய்தேன். ‘இல்லை நண்பனே. வெறும் பிரசாரம் ஓரெல்லைக்கு மேல் பலன் தராது. மதத் தலைவர்கள் அத்தனை பேரும் ஆன்மாவைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசுதான் உடலைப் பற்றி யோசித்தார். தேக சொஸ்தம் அவரது முதன்மைக் கருவி. குருடர்கள் பார்த்தார்களா என்று கேட்காதே. ஊமைகள் பேசினார்களா என்று மடக்க நினைக்காதே. அவரால் குறைந்தபட்சம் ஒரு ஜலதோஷத்தையாவது சரி செய்ய முடிந்திருக்கிறது. ஒரு விஷக் காய்ச்சலை விரட்டியடிக்க முடிந்திருக்கிறது. வியாதிகளைத் தீர்த்ததால் அவர் வென்றார். அது இல்லாமல் அத்தனைக் கோடி ஜனம் சென்று விழ வேறு காரணமே கிடையாது.’

‘அப்படியானால் டாக்டர்கள்தான் கடவுளா?’

‘இல்லை. மருந்தாக மாறத் தெரிந்த வைத்தியன் கடவுளாகிவிடுகிறான்’ என்று சொன்னேன்.

அன்றைக்கு வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்து சென்றதும், ஒரு பெண் என்னருகே வந்து நின்றாள்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘அவர் கிறிஸ்தவராவதற்கு நீங்கள் கதவு திறந்துவிட்டீர்கள்!’

நான் சிரித்தேன். ‘என் பேச்சு அவனை மதத்துக்குள் கொண்டு தள்ளுமானால், எதிலிருந்தும் அவனுக்கு மீட்சி கிடைக்காது. அவனது நிரந்தர மதம் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.’

‘மதம் பெரிதல்ல என்கிறீர்களா?’

‘எதுவுமே பெரிதல்ல பெண்ணே. உன்னைக் கவனி. இந்த உலகில் நீ மட்டும்தான் பெரிது. உனக்கு மிஞ்சி ஒன்றுமில்லை. உன் அழகு. உன் வனப்பு. உன் ஆரோக்கியம். உன் அறிவு. உன் தெளிவு. உன் நிம்மதி. உன் மகிழ்ச்சி. உன் கொண்டாட்டங்கள். இவ்வளவுதான். இது போதும்.’

‘அப்படியானால் கடவுள்?’

‘அவன் உனக்கு முன்மாதிரி. அவனைப்போல் ஆனந்தமாக இருக்க எப்படி உன்னைத் தயாரிக்கிறாய் என்பதுதான் விஷயம். அதைத்தான் உடலில் இருந்து தொடங்கச் சொல்கிறேன்.’

அவள் புன்னகை செய்தாள். நான் உங்களைத் தொடலாமா என்று கேட்டாள். இப்போது நானும் புன்னகை செய்தேன். என் வலக்கைய நீட்டினேன். அவள் அதை ஏந்தி எடுத்து முத்தமிட்டாள். ‘நீங்கள் ஒருநாள் என் வீட்டுக்கு வர வேண்டும். என் அப்பாவைச் சந்திக்க வேண்டும்.’

‘அப்படியா? உன் தந்தை என்ன செய்கிறார்?’

‘அவர் ஒரு அரசியல்வாதி.’

‘எம்எல்ஏவா? எம்பியா? எந்தத் தொகுதி?’

‘அதெல்லாம் இல்லை. அத்தனை எளிதில் உங்களுக்கு அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அவர் மேலிடங்களின் நண்பர். பேப்பரில் பேர் வராது. டிவியில் முகம் காட்டமாட்டார். ஆனால் காய் நகர்த்தல்கள் பல அவர்மூலம் நிகழும்.’

‘ஓ. சந்திக்கலாமே? ஆனால் அவருக்கு நான் எதற்கு?’ என்று கேட்டேன்.

‘அப்பா எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். எப்போதும் பதற்றமாகவே இருப்பார். உங்களுடன் பேசினால் அவர் சற்று மாறக்கூடும்.’

‘அப்படியா?’ என்று சிரித்தேன்.

நான்கு நாள் இடைவெளியில் அவள் மீண்டும் என் ஆசிரமத்துக்கு வந்தாள். ‘போகலாமா?’ என்று கேட்டாள். ஒரு பிஎம்டபிள்யூ காரில் நான் பயணம் செய்தது அதுதான் முதல் முறை. அந்தப் பயணம் முழுவதும் அவள் என் கையைப் பிடித்துக்கொண்டே அருகில் அமர்ந்திருந்தாள். மிகவும் வாசனையாக இருந்தாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com