53. மூன்றாவது வழி

என் துறவு என்பது என் உறவினர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் என்பதில்தான் முழுமை அடைகிறது.

ஸ்ரீரங்கப்பட்டணத்துப் பரிசல் பயணத்தின்போது வினய்யிடம் நான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தேன். ‘நீயே யோசித்துப் பார். அவன் உன்னைச் சந்தித்திருக்கிறான். உன்னைப் போன்ற வேறு சில பொறுக்கிகளையும் சந்தித்திருக்கிறான். திட்டமிட்டு என்னைச் சந்திப்பதை மட்டும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறான். சுத்த அயோக்கியன்.’

வினய் சிரித்தான். ‘விமல், வாழ்வில் நான் திரும்ப வேண்டிய கட்டம் ஒன்று வந்தது. பாதை இரண்டாக என் முன்னால் நீண்டிருந்தது. அவன் என்னை திசை திருப்ப அனுப்பப்பட்டிருக்கிறான். மற்றபடி அவனைப் பற்றி எனக்கு வேறு எதுவுமே தெரியாது’ என்று சொன்னான்.

‘நீ அவனை விசாரிக்கவில்லையா? அவன் எங்கே போனான், யாரிடம் இருந்தான் என்று கேட்கவில்லையா?’

‘கேட்டேன். ஆனால் அவன் அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை.’

‘பிறகு?’

‘என்னைத் திருவானைக்காவுக்குச் சென்று அங்கே உள்ள ஒரு கிழவனைப் பார்க்கச் சொன்னான்.’

இப்போது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘அந்தக் கிழவனை நானும் பார்த்தேன். சரியாகச் சொல்லுவதென்றால் என்னைத் தேடி அவன் வந்தான். அவன்தான் எனக்கு அபின் கொடுத்து இழுத்துச் சென்றான். அவனிடமிருந்து புறப்பட்டுத்தான் நான் குற்றாலத்துக்குப் போனேன்.’

வினய் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் நதியின் ஓட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று சொன்னான், ‘நாம் ஒன்றாகப் பிறந்தது ஒரு தற்செயல்.’

நான் யோசிக்கவேயில்லை. ‘பிறப்பு என்பதே ஒரு தற்செயல் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘உண்மைதான். திட்டமிட்டுப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் தத்திகளாகத்தான் இருக்கின்றன. அம்மா திட்டமே இல்லாமல் நம்மைப் பெற்றுவிட்டாள். அவளது பிழையும் நமது பிழையின்மையும் அதுதான்.’

எனக்குப் பசித்தது. நான் மைசூரில் இருந்து புறப்பட்டதில் இருந்து ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. என்னுடைய கைப்பையில் பிஸ்கட்டுகள் வைத்திருந்தேன். ஆனால் ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டில் அந்தப் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேன். எனவே பரிசல்காரனிடம் சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்டேன். அவன் கரை திரும்பிவிடவா என்று பதிலுக்குக் கேட்டதும், உடனே வேண்டாம் என்று சொன்னேன். வினய் சிரித்தான்.

‘உன்னைத் திரும்ப எப்போது பார்ப்பேன் என்று தெரியாது. இன்னும் சிறிது நேரம் உன்னோடு இருக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். நாங்கள் பேசுவது பரிசல்காரனுக்குப் புரிந்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். இந்தப் பிராந்தியங்களில் பெரிய பிரச்னை இதுதான். எல்லோருக்கும் குறைந்தது மூன்று மொழிகள் தெரிந்திருந்தன. தமிழ். கன்னடம். ஹிந்தி. நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தபோது முதலில் சற்றுத் தயங்கினேன். வினய்க்கு ஆங்கிலம் பேச வருமா என்கிற குழப்பம் இருந்தது. ஆனால் அவன் தடையில்லாமல் பேசினான். பரிசல் ஓட்டியவனுக்கு அது நிச்சயமாகப் புதிய அனுபவமாகத்தான் இருக்கும். இரண்டு துறவிகள். இருவருமே காவி அணிந்தவர்கள். ஒருவன் காவி வேட்டியும் காவி மேல் துண்டும் தாடியும் ஜடாமுடியுமாக இருப்பவன். இன்னொருவன் அதே காவியில் அழகாக அங்கி தைத்து அணிந்திருப்பவன். அவனுக்கு ஜடாமுடி கிடையாது. கவனமாக அலங்கரிக்கப்பட்ட சிகை. மழுங்கச் சிரைத்த முகம். தங்க ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த துறவி. இருவருமே படித்தவர்கள். ஆங்கிலம் பேசுகிறவர்கள். தரையில் பேச முடியாத எதை இப்படி நீருக்குள் வந்து அலசியெடுக்கிறார்கள்?

வினய் என்னை நோக்கிக் கையை நீட்டினான். நான் என்னவென்று கேட்டேன். ‘கையைக் கொடு. பசிக்கிறது என்றாயே?’

நான் சிரித்தபடி அவன் முன்னால் கையை நீட்டினேன். அவன் என் உள்ளங்கையின் மீது தன் கையை வைத்து மூடினான். நான்கு வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு அவன் கையை எடுத்தபோது என் உள்ளங்கையில் ஒரு பிஸ்கட் பொட்டலம் இருந்தது. எனக்கு அது வியப்பாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை. நான் அறிவேன். என் கைப்பைக்குள் நான் வைத்திருந்த பிஸ்கட் பொட்டலம்தான் அது.

‘நீயும் இதில் இறங்கிவிட்டாயா? அருமை’ என்று சொன்னேன். அந்தப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். அதுவரை எங்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாதிருந்த பரிசல்காரன் திடீரென்று என் கையில் இருந்த பிஸ்கட் பொட்டலத்தைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்தான்.

‘அவனுக்கு இரண்டு பிஸ்கட்டுகள் கொடு’ என்று வினய் சொன்னான். நான் எனக்கு இரண்டு பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே பரிசல்காரனிடம் கொடுத்தேன். என்ன நினைத்தானோ, அவன் அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இடுப்பில் முடிந்துகொண்டான்.

‘சரி சொல், திருவானைக்கா கிழவன் உன்னை எங்கே அனுப்பினான்?’ என்று கேட்டேன்.

‘அவன் என்னை எங்கும் அனுப்பவில்லை. அவனிடம்தான் நான் ஆறு வருடங்கள் இருந்தேன்.’

‘நினைத்தேன். இந்த மாதிரி சில்லறை சித்துகளில் அவன் விற்பன்னன். ஏனோ எனக்கு அவன்மீது மரியாதையே வரவில்லை.’

‘இல்லை விமல். அவன் பெரிய ஆள்.’

‘அப்படியா நினைக்கிறாய்? பெரிய ஆள் பிஸ்கட் பொட்டலம் தரமாட்டானே?’ என்று சிரித்தேன்.

அவன் காயப்பட்டிருக்க வேண்டும். சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அவனைவிட்டு விலகியிருக்கக் கூடாது விமல். ஒரு சிறு பிழை செய்தேன். அது மொத்தமாக என்னை வேறொரு தளத்துக்கு நகர்த்திக்கொண்டு போய்விட்டது.’

பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென்று கண் கலங்கி இருந்ததைக் கண்டேன். இது எனக்கு வியப்பாக இருந்தது. ‘டேய், அழாதே’ என்று சொன்னேன்.

‘அழக் கூடாது என்று பல வருடங்களாக நினைத்திருந்தேன். ஏனோ இன்று அழத் தோன்றுகிறது. நான் உன்னைப் பார்த்திருக்கக் கூடாது.’

‘ஆம். எனக்கும் அதுதான் தோன்றுகிறது.’

‘நீ என் ரத்த உறவு என்ற எண்ணம் இன்னும் மனத்தில் இருக்கிறது. அந்தச் சுமை அதன் பங்குக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.’

‘வினய், உறவில் தவறே இல்லை. அதை ஏன் சிக்கலாக நினைக்கிறாய்? என்னைப் பார். நான் எந்த உறவையும் துறக்கவில்லை. கணந்தோறும் புதிய உறவுகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறேன். என் துறவு என்பது என் உறவினர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் என்பதில்தான் முழுமை அடைகிறது.’

‘அது வேறு. என்னால் அம்மாவைத் துறக்க முடிந்ததே. அது பெரிதல்லவா?’ என்று அவன் கேட்டான்.

‘முட்டாள். அனைத்தையும் துறந்த பின்புதான் நான் அம்மாவை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன். என் துறவின் பூரணமே அவளது நினைவின் இருப்புதான்’ என்று சொன்னேன்.

ஒரு கணம் அவன் அதிர்ச்சியடைந்தான். பிறகு, ‘நீயும் சித்ராவை விரும்பினாய்’ என்று சொன்னான்.

அடக்கஷ்டமே! எங்கிருந்து எங்கு தாவுகிறது இந்த அழகுக் குரங்கு மனம்! ஆம். நானும் சித்ராவை நேசித்தேன். அதிலென்ன சந்தேகம். ஆனால் அது காதல் இல்லை. எனக்கு அவளது கன்னங்கள் பிடித்தன. உதடு பிடித்தது. எச்சில் விழுங்கும்போது கழுத்தில் விழும் குழி பிடித்தது. அதே குழிகள் முலைகளுக்குக் கீழே, இடுப்புக்கு மேலே இடப்புறம் அவளுக்கு உண்டு. அது பிடித்தது. இன்னும் என்னென்னவோ. சித்ரா என்னைவிட வயதில் பெரியவளாக இருந்தது மட்டும்தான் எனக்கிருந்த ஒரே மனத்தடை. ஆனால் இப்போது நினைத்துக்கொள்கிறேன். வயதில் என்ன இருக்கிறது? அந்த ஒரு நினைவு அந்நாள்களில் என் பல சந்தோஷ நினைவுகளைப் பாதியில் கிள்ளி எறிந்திருக்கிறது.

வினய் என்னைப் புன்னகையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பரிசல் இப்போது நகரவில்லை. நதியின் நடுவே இரு பெரும் பாறைகளுக்கு மத்தியில் மையம் கொண்டாற்போல் நின்றிருந்தது. ஓட்டச் சொன்னால் ஓட்டலாம் என்பது போல பரிசல்காரன் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவேளை நதிக்கு நடுவே அமர்ந்து பேசுவது எங்களுக்கு உவப்பானதாக இருக்கும் என்று அவன் கருதியிருக்கலாம்.

‘வாழ்க்கைதான் எத்தனை குரூரமானது! அண்ணா என்னைச் சரியான நபரிடம்தான் அனுப்பினான். என் அவசர புத்தி என்னை அங்கிருந்து பெயர்த்தெடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டது’ என்று வினய் சொன்னான்.

‘புலம்பாதே. என்ன ஆனது என்று சொல். எப்படிச் சரி செய்யலாம் என்று நான் சொல்கிறேன்.’

‘நீயா!’ அவன் சிரித்துவிட்டான்.

‘ஏன், முடியாது என்று நினைக்கிறாயா? இந்த தேசத்தில் பல அரசியல் சிக்கல்களை நான் தீர்த்து வைப்பவனாக இருக்கிறேன். ஒன்று தெரியுமா? கடந்த வாரம் நடந்த கோவா பொதுத் தேர்தலே நான் தீர்மானித்ததுதான். இன்னும் அதன் முடிவு வெளியாகாதிருப்பதும் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான்.’

அவன் என் கையைப் பிடித்துத் தன் கரங்களுக்கு நடுவே வைத்துக்கொண்டான். இன்னும் நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, ‘விமல்! உன் வழி வேறு என்று நினைக்கிறேன். நான் போகும் பாதைக்கு முற்றிலும் நேரெதிராக நீ போய்க்கொண்டிருக்கிறாய்.’

‘முட்டாள், நீயேதான் நீ விரும்பும் வழியில் போகவில்லை போலிருக்கிறதே? அப்புறம் என் வழியைப் பற்றிய விமரிசனம் எதற்கு?’

‘ஆம். ஒருவிதத்தில் சரி. ஆனால் இன்னொரு முறை நான் அண்ணாவைச் சந்தித்துவிட்டால் சரியாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.’

‘அப்படியா? அதுசரி, நீ எதற்கு அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டுக்குப் போனாய்?’ என்று கேட்டேன்.

கணப் பொழுது அவன் யோசித்தான். பிறகு சொன்னான். ‘அவரோடு எனக்கு ஒன்றுமில்லை. அவரது மனைவி என்னை வரச் சொல்லியிருந்தாள்.’

‘எதற்கு?’

‘அவளுக்கு ஆவிகளுடன் பேசப் பிடிக்கும்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com