167. திருமுக்கூடல்

உலகத்துடன் எனக்கு இருந்த ஒற்றை உறவையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இனி நான் கட்டற்றவன். காற்றேதான். சந்தேகமில்லை. காற்றை வெல்வதைக் காட்டிலும் காற்றாகிவிடுவது எத்தனை உயர்ந்தது.

கன்னியாகுமரியில் இருந்தேன். முப்புறக் கடலும் சங்கமமாகும் இடத்தை ஒட்டி மணல் வெளியில் தனித்து அமர்ந்திருந்தேன். இருளும் குளிரும் என்னைச் சுற்றி அரண் எழுப்பியிருந்தன. ஈர மணலின் வாசனை நன்றாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் வீசிவிட்டுப் போயிருந்த குப்பைகள்கூட ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுச் சிதறியிருப்பதைப் போலவே தோற்றமளித்தன. வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். கடற்கரையில் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. காலிக் கூடைகளுடன் உரக்கப் பேசியபடி கடந்துபோன பெண்களைப் பார்த்தேன். கைத்தடியுடன் சுற்றிவந்த காவலர் ஒருவர், என்னருகே வந்து உற்றுப் பார்த்தார். நான் புன்னகை செய்தேன். யாரோ சாமி என்று எண்ணியிருப்பார். வணக்கம் சொல்லி நகர்ந்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், இரண்டு நாய்கள் குரைத்துக்கொண்டும் ஒன்றையொன்று துரத்திக்கொண்டும் ஓடிவந்தன. நான் எழுந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. நடந்துகொண்டே இருந்த களைப்பு அமர்ந்த கணத்தில் இருந்து பூதாகாரமாகப் பெருகிவிட்டிருந்தது. இதற்குமேல் என்னால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது என்று தோன்றியது. ஓடாதவரை அது துரத்தாது என்று வினோத் சொன்னதை நினைத்துக்கொண்டேன். அதையும் பரீட்சித்துப் பார்த்துவிடலாம் என்று அசையாது அப்படியே இருந்தேன்.

அந்த நாய்கள் என்னைக் கண்டு மிரளவில்லை; என்னை அச்சுறுத்தவும் விரும்பவில்லை. அவை தமக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம் இங்குமங்கும் ஓடிப் பிடித்து ஆடிவிட்டு ஓரிடமாக இரண்டும் அமர்ந்துகொண்டன. நான் கடலுக்கு நடுவே தெரிந்த பாறை வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அங்கே விவேகானந்தர் இருந்தார். கரையில் நான் இருந்தேன். முன்பொரு சமயம் நான் விவேகானந்தர் பாறைக்குச் சென்றிருக்கிறேன். ஒரு கோட்டையைப் போல நிர்மாணம் செய்யப்பட்டிருந்த அந்த நினைவிடத்துக்குள், அப்போதும் இரண்டு நாய்கள் ஓடிக்கொண்டிருந்தன. நாய்களை யார் படகில் ஏற்றிப் பாறைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் என்று யோசித்தேன். அவை நீந்தியும் வரக்கூடும் என்று படகோட்டி ஒருவன் சொன்னான். எனக்கு அப்போது அது மிகவும் வியப்பாக இருந்தது. தரையில் சிந்திய தானியங்களை உண்ண வரும் காக்கைகள் பத்தடி நடக்கும்போது வருகிற அதே வியப்பு. கோல்கொண்டாவில் ஒரு சமயம் ஓர் அழகிய மயிலைக் கண்டேன். கோட்டைச் சுவரின் மீது அது அமர்ந்திருந்தது. நின்று ரசித்துக்கொண்டிருந்தபோதே அது தனது சிறகுகளை அகல விரித்துப் பறந்து சென்று சிறிது தொலைவில் மீண்டும் அமர்ந்துகொண்டது. பறவைதான். ஆனாலும் நடந்து மட்டுமே பார்த்திருக்கிறோம். காகமும் பறவைதான். ஆனால் பறந்து மட்டுமே கண்டிருக்கிறோம். மனிதனல்லாத அனைத்துப் பிறப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கும் என்று தோன்றியது. அண்ணாவால் நூறு நூற்றைம்பத்து அடி தூரத்துக்குப் பறக்க இயலும் என்று எப்போதோ ஒரு சமயம் கங்கோத்ரியில் நான் சந்தித்த யோகினி ஒருத்தி சொன்னாள். ஒரு மலைச் சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரத்துக்குப் போக எப்போதாவது அவன் அந்த உத்தியைப் பயன்படுத்துவான் என்று சொன்னாள். ஹட யோகிகள் பறப்பார்கள். நெருப்பில் கிடக்க அவர்களால் முடியும். நீரில் நடக்கக்கூடிய யோகிகள் பலரைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் காற்றை வசப்படுத்துதல். உடலைக் காற்றாக்குதல். காற்றுதான் சகலமும். ஆனால் பறவைகள் நடப்பதற்கு ஹட யோகம் பயில்வதில்லை. ஒரு முழு வாழ்நாளைப் பரீட்சைகளில் தொலைப்பதில்லை. சிந்திக்க இயலாத குறைபாட்டை இயற்கை இவ்வாறு அவற்றுக்கு சமன் செய்கிறது என்று நினைத்தேன்.

சட்டென்று ஒரு குரல் கேட்டது. ‘சிந்தித்து மட்டும் நீ என்ன சாதித்தாய்?’

நான் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. அந்த இரண்டு நாய்கள் மட்டும்தான் இருந்தன. எனக்குப் பெரிய வியப்போ, ஆர்வமோ எழவில்லை. இரண்டில் யார் சொரிமுத்து என்று அறியக்கூட விரும்பவில்லை. நான் படுத்துக்கொண்டேன்.

‘பதில் சொல்லிவிட்டுத் தூங்கு. சிந்தித்து நீ என்ன சாதித்தாய்?’

‘ஒன்றுமில்லை. அதனாலென்ன?’

‘ஒன்றும் சாதிக்காததற்கு உனக்கு எதற்குத் துறவு?’

‘அவசியமில்லைதான். வேண்டுமானால் சொல்லுங்கள். அங்கியை அவிழ்த்துத் தந்துவிடுகிறேன்’.

‘நாற்றம் பிடித்த உன் அங்கி எனக்கு எதற்கு? உன் அம்மாவிடம் நீ தோற்றிருக்கிறாய். அது உனக்கு உறுத்தவில்லையா?’

‘நிச்சயமாக இல்லை. என் அம்மா வெல்வதற்கு நான் உதவிய மகிழ்ச்சிதான் எனக்கு. என் சகோதரர்களும் இதில் சம அளவு உதவியிருக்கிறார்கள் என்ற திருப்தி இருக்கிறது’.

‘பாழ். எல்லாம் பாழ். அவன் இறந்திருக்கக் கூடாது. கங்காதரன் சற்றுத் தாமதித்துவிட்டான்’.

இப்போது நான் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். ‘என்ன சொல்கிறீர்கள்? அவன் கொலை செய்ய வரவில்லையா?’

‘உன் அண்ணனை எதற்குக் கொல்ல வேண்டும்?’

‘வேறு யாரை?’

‘அது உனக்குத் தேவையில்லாதது. நீ என்ன செய்யப் போகிறாய்?’

நான் சிரித்தேன். அதை இவருக்கு எதற்குச் சொல்ல வேண்டும்? உலகத்துடன் எனக்கு இருந்த ஒற்றை உறவையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இனி நான் கட்டற்றவன். காற்றேதான். சந்தேகமில்லை. காற்றை வெல்வதைக் காட்டிலும் காற்றாகிவிடுவது எத்தனை உயர்ந்தது! பறவையின் நடையைப் போல இது பிரயத்தனமற்றது. இயல்பாகக் கூடி வருவது. இந்த உலகில் எனக்குக் கடமைகள் என இனி ஒன்றுமில்லை. நான் யாருக்கும் கடமைப்படவும் இல்லை. நான் காசற்றவன். கவலையற்றவன். கடவுளும் அற்றவன். ஒரு தக்கையென என்னால் நீரில் மிதந்து செல்ல இயலும். புழுதியைப் போல், வீசும் காற்றுக்கு என்னை அளிப்பேன். எங்கிருந்து எங்கு தூக்கியெறிந்தாலும் போய் இருப்பேன். மீண்டும் சுமந்து செல்ல வரும் காற்றுக்காக எத்தனைக் காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன். அது வராமலே போனாலும் எனக்கு இழப்பில்லை. வலியில்லை. துயரமோ, கண்ணீரோ இல்லை. என் துறவின் சாரமே இதுவல்லவா? இதற்காகவல்லவா இத்தனைக் கால மெனக்கெடல்கள்?

‘முட்டாள்!’ என்றது அது.

இருந்துவிட்டுப் போகிறேன். என்ன அதனால்?

‘ஓயாமல் செய்துகொண்டே இருப்பவன்தான் செயலற்றவனாகிறான். ஏனென்றால் அவன் செயலாகிவிடுகிறான். ஓய்வை உணர்ந்துவிட்டால் மரணத்தை நெருங்கிவிட்டதாகப் பொருள்’.

‘நான் ஓய்ந்துவிட்டேன் என்று யார் சொன்னது?’

‘இலக்கற்று இருப்பது ஓய்வுற்று இருப்பது போலத்தான்’.

‘உங்களுக்கு என்ன அக்கறை?’

அது சிறிது நேரம் அமைதியாக இருந்தது. பிறகு மெல்ல என்னை நோக்கி நடந்து வந்து என் அருகே அமர்ந்து என்னை உற்றுப் பார்த்தது. தன் மூக்கை என் மடியின்மீது தேய்த்து முகர்ந்தது. வாலை உயர்த்தி இப்படியும் அப்படியுமாக இருமுறை ஆட்டியது. நான் என்ன என்று கேட்டேன்.

‘தனிப்பட்ட அக்கறை என்று எனக்கு யாரிடமும் எதுவும் இல்லை. ஆனால் என் கடமைகளில் இருந்து நான் நகர்ந்து செல்வதில்லை. நீ எனக்கு ஒதுக்கப்பட்டவன் என்பதால்தான் உன்னை விடாமல் பின் தொடர்கிறேன்’.

‘ஒதுக்கியவனை உதைத்தால் சரியாகிவிடும்’ என்று சொன்னேன்.

என் அன்பான சொரிமுத்துக் கிழவா, நான் யாருக்கானவனும் இல்லை. எனக்கும்கூட. இந்தக் கணம் நீ கோபம் கொண்டு என்னைக் கடித்து, சாகடிக்கலாம். நான் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போகலாம். அல்லது ஒரு பேயாகத் திரியலாம், சித்ராவைப் போல. ஒன்றுமில்லாமல் காற்றாகவும் கரியாகவும் மாறி உருவற்றுப் போய்விடவும் கூடும். கழுகுகளுக்கு உடலைத் தின்னக் கொடுத்துவிட்டு இயற்கையாகிவிடுவேன். எட்டிப் பார்க்காத வரை இதுவா அதுவா என்ற வினா இருக்கத்தான் செய்யும். நான் சிந்தித்துக் கிழித்தது இதுதான். இருப்பதற்கும் இல்லாது போவதற்கும் இடையே வாழ்வது என்ற ஒன்று உள்ளது. நான் அதைக் கண்டவன். அதன் அனைத்து விதமான ருசிகளையும் அறிந்தவன். துறவென்று நீ சொல்வதைத் துறந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். ஒரு முழு வாழ்நாளை அம்மா வீணடித்தாள். என் அண்ணன்களும் அதையே செய்தார்கள். நோக்கம் வேறு. வழிமுறைகள் வேறு. ஆனால் சென்று சேர்ந்த இடம் அதுதான்.

‘நிறுத்து. வினய்க்கு கோரக்கரின் தரிசனம் சற்றுமுன் கிடைத்துவிட்டது’.

‘அப்படியா? மிக்க மகிழ்ச்சி. இமயத்தின் உயர்ந்த காடுகளில் அவன் அண்ணாவின் இடத்தை நிரப்பி மரத்துக்கு மரம், மலைக்கு மலை ஒரு குரங்கைப் போலத் தாவிக்கொண்டிருக்கட்டும்’.

‘பத்மா மாமி விரைவில் இறந்துவிடுவாள். வினோத் அவளுக்கு ஈமச் சடங்குகள் செய்து முடித்துவிட்டு, மதுராவுக்குப் போகப் போகிறான்’.

‘அவனுக்குக் கிருஷ்ண தரிசனம் கிடைக்கட்டும். அவன் ஒரு கோபிகையாகி பிருந்தாவனத்தின் துளசி வனங்களுக்குள்ளே காற்றில் ஆடிக்கொண்டிருக்கட்டும்’.

‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்?’

நான் சிரித்தேன். அவரை ஏந்தி எடுத்து முத்தமிட்டேன். அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். ‘அன்றொரு நாள் எனக்கு அபின் கொடுத்தீர்களே, அது இப்போது இருக்கிறதா?’

‘எதற்கு?’

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இது போதவில்லை. மகிழ்ச்சியின் அபரிமிதத்தை நான் அறிய வேண்டும். அதில் திளைத்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். இடைவெளியில்லாமல் மேகப் பொதிகளுக்கு நடுவே நான் பறந்துகொண்டே இருக்க வேண்டும். வழியில் கடவுள்களின் சந்தை தென்பட்டால், அதைத் தவிர்த்துவிட்டுப் போய்விடுவேன். கடவுள்கள் மனிதர்களைக் காட்டிலும் அபாயகரமானவர்கள்’.

‘அப்படியா நினைக்கிறாய்? ஒருவேளை வழியில் உன் அண்ணா தென்பட்டால்?’

நான் சிரித்தேன். ‘அது மட்டும் நடக்காது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘அவன் அம்மாவின் இறந்த உடலைக் காண வெட்கப்பட்டதாக வினய் சொன்னான். என்னைக் காண அவன் அச்சப்படுவான்’.

‘அச்சமா?’

‘ஆம். சந்தேகமில்லை. அச்சம்தான்’.

‘என்ன அச்சம்?’

‘கிழவா, தவமென்பது வாழ்வது. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக் கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும். அவன் தோற்றவன். நான் வென்றவன் இல்லையே தவிர தோற்க விரும்பாதவன். இது அவனுக்கு மிகுந்த இடைஞ்சலாக இருக்கும் என்று எண்ணுகிறேன்’.

‘நீ ஒரு அயோக்கியன். அரசியல் தரகன். சந்தர்ப்பவாதி. பெண் பித்தன். சுகபோகங்களில் திளைக்க விரும்புபவன். ஆனால், ஞானியைப் போலப் பேசுகிறாய்’.

நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். ‘ஞானம் பிறக்கும் இடம் புரிகிறதா உங்களுக்கு?’

அது என்னை விட்டு நகர்ந்து அந்த இன்னொரு நாயின் அருகே சென்று அமர்ந்துகொண்டது. கோபத்திலும் ஆவேசத்திலும் அதன் கண்கள் ஜொலித்ததன. ஆக்ரோஷமாக அதற்கு மூச்சு வாங்கி, அடி வயிறு வேகவேகமாக விரிந்து சுருங்கியது. ஆங்காரமாகக் குரல் எழுப்பித் தனது வாயைத் திறந்து பற்களைக் காட்டியது. நான் அமைதியாக அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

தனது தோழனின் திடீர்க் கோபம் அந்த இன்னொரு நாய்க்கு வியப்புக்குரியதாக இருந்திருக்க வேண்டும். அது சட்டென்று சொரிமுத்துவின் உடலைத் தன் முகத்தால் தேய்த்து நக்கியது. பின்னங்காலைத் தூக்கி சொரிமுத்துவின் கால்களின்மீது போட்டு, தட் தட்டென்று இருமுறை தட்டியது. வாலை ஆட்டியது. சட்டென்று எழுந்து நின்று வவ் என்று குரைத்தது. சொரிமுத்துவும் எழுந்துகொண்டார். நான் உட்கார்ந்த நிலையிலேயே அவரைப் பார்த்துக் கரம் குவித்தேன்.

‘போய் வாருங்கள் ஐயா. என்னை ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள். நான் இருக்கும்வரை இப்படித்தான் இருப்பேன். இறக்கும்போது மகிழ்ச்சியாக இறப்பேன்’ என்று சொன்னேன். சொரிமுத்து திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவரோடு சென்ற அந்த இன்னொரு நாய் சிறிது தூரம் சென்று, நின்று திரும்பி என்னைப் பார்த்தது. அது சிரித்தாற்போலத் தெரிந்தது. சட்டென்று தனது முன்னங்காலை உயர்த்தி ஆசி வழங்குவது போலச் செய்தது. ‘இனி உன் வழிக்கு நான் வரமாட்டேன்’ என்ற குரல் கேட்டது.

ஒரு கணம்தான். எனக்குப் புரிந்துவிட்டது. அண்ணா என்று அழைக்க வாயெடுக்கும்போதே, இரண்டு நாய்களும் எங்கோ ஓடி இருளில் மறைந்துபோயின. எனக்குச் சிரிப்பு வந்தது. மெல்ல மெல்ல எனக்குள் சிரித்து, அது அடங்காமல் பீறிட்டு வெளிப்பட்டு உரக்கச் சிரிக்கத் தொடங்கினேன். என் கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்துக்கொண்டே இருந்தேன். இரவெல்லாம் சிரித்துச் சிரித்து மிகவும் களைத்துப்போனேன்.

மறுநாள் விடிந்து சூரிய உதயம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியபோது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

பல வருடங்களுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சி பூத்திருப்பதாக ஒரு சமயம் தகவல் வந்தது. போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று எனது மாணவர்களுடன் கிளம்பிச் சென்றேன்.

நாளெல்லாம் ஒரு மலை ஏறி மறு புறம் இறங்கி, நீலக் குறிஞ்சிகள் பூத்திருந்த இடத்தை நாங்கள் நெருங்கியபோது வெகுவாக இருட்டிவிட்டிருந்தது. உருவம் தெரியாத அடரிருள். சீடர்களுக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது. மீண்டும் நாளைதான் வர வேண்டுமா என்று கேட்டார்கள்.

‘நீலக்குறிஞ்சியை நீங்கள் புகைப்படத்தில் பார்த்ததில்லையா?’

‘புகைப்படத்தில் பார்த்து என்ன குருஜி?’

‘பிறகு? தொட்டுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதானே? தொடுங்கள்’. நான் தொட்டுக் காட்டினேன்.

‘தொடுவது மட்டும்தானா?’

‘வேறென்ன? அதன் உருவம் உங்களுக்குத் தெரியும். புகைப்படத்தில் பார்த்திருக்கிறீர்கள். இதோ இப்போது தொடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிள்ளி முகர்ந்து பார்க்க விரும்பினாலும் செய்யலாம். வேறென்ன வேண்டும்?’

தர்க்கப்படி சரிதான். ஆனால் ஓர் அனுபவம் இல்லாமல் போகிறதே என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஒரு கணம் யோசித்தேன். ‘வா. என்னைத் தொடு. நான் வேறு அது வேறல்ல’ என்று சொன்னேன். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத அந்தப் பதிலில் திகைப்புற்ற பெண்ணொருத்தி, பரவசம் மேலிட்டுப் பாய்ந்து வந்து ‘குருஜி’ என்று என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதுதான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. சூரிய உதயம் எப்போதும் நிகழ்வது. குமரி முனையில் அதைக் காண்பது ஓர் அனுபவம்தான். சந்தேகமில்லை. நான் குமரி முனையில் இருந்தேன். சூரிய உதயத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாளில், இந்த இடத்தில், இப்போது கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்திருக்க வேண்டாம் என்றுதான் உலகம் சொல்லும்.

சொல்லிவிட்டுப் போகட்டுமே? இன்றெல்லாம் நான் நடப்பேன். இரவு களைத்து எங்காவது படுத்துக் கண் மூடுவேன். அப்போது சூரியன் எனக்காக மீண்டும் உதிக்கும். அல்லது உதிக்கச் செய்வேன். சரி, உதிக்காமலே போனால்தான் என்ன? என் உள்ளங்கைகளைக் காண எனக்கு வெளிச்சம் தேவையில்லை. கண்களும்கூட.

நான் என் மனத்துக்குள் அம்மாவுக்கு நன்றி சொன்னேன். அண்ணாவுக்கு நன்றி சொன்னேன். சொரிமுத்துவுக்குச் சொன்னேன். யாருக்காவது மிச்சம் வைத்திருக்கிறேனா என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை என்று தோன்றியது. அதன்பின் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

(முற்றும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com