147. கொலைக் குறிப்பு

சித்ரா தன்னைக் கொல்லச் சொல்லித் தன் அண்ணனிடமே கேட்டிருப்பது தெரியுமானால் அவனுக்கு என்ன தோன்றும்? அது கிருஷ்ணன் அளிக்க விரும்பும் தண்டனையாக அல்லவா நினைத்துக்கொள்வான்?

கோயிலைக் கடந்து வீதிக்குள் நுழையும்போது, நான் வினய்யின் கையைப் பிடித்து நிறுத்தினேன். என்ன என்று கேட்டான்.

‘தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியாக இல்லை’.

‘என்ன சரியாக இல்லை?’

‘இல்லை. நான் சரியாக இல்லை என்று சொன்னேன். சற்றுப் பதற்றமாக உணர்கிறேன்’.

அவன் நின்றான். என்னைப் புன்னகையுடன் நோக்கினான். ‘எது குறித்து?’ என்று கேட்டான். யோசித்தேன். குறிப்பிட்ட காரணம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பதற்றமாகத்தான் இருந்தது. வீட்டுக்குப் போகாமல் மண்டபத்திலேயே உட்கார்ந்து விடலாமா என்று தோன்றியது. வினோத்தைப் பார்க்கும்போது அவனிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும். சொல்லாமல் தவிர்ப்பது நியாயமல்ல. சொல்லுவது உவப்பானதல்ல. துறவிதான் என்றாலும் மரணம் சார்ந்த அவனது சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவன் அச்சமோ, தயக்கமோ கொள்ள வாய்ப்பில்லை என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் குற்ற உணர்வும் அவமான உணர்வும் மேலோங்க, அவன் கணப் பொழுதேனும் கிருஷ்ணனை மறந்து சித்ராவைக் குறித்து நினைத்துக் கண் கலங்கிவிடக் கூடும். எனக்கு சந்தேகமில்லாமல் தெரியும். பத்மா மாமியின் காலில் விழுந்தபோதுகூட அவன் மாமியைக் கிருஷ்ணனாகத்தான் நினைத்தான். அம்மாவை வழியனுப்பி வைக்கும்போதுகூடக் கிருஷ்ணனின் மரணமாகத்தான் அவன் அதைக் கருதுவான். வேறு எதுவாகவும் அவன் நினைக்கப் பழகவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். அப்படியொரு உன்மத்த நிலையில், சித்ரா தன்னைக் கொல்லச் சொல்லித் தன் அண்ணனிடமே கேட்டிருப்பது தெரியுமானால் அவனுக்கு என்ன தோன்றும்? அது கிருஷ்ணன் அளிக்க விரும்பும் தண்டனையாக அல்லவா நினைத்துக்கொள்வான்? வாழ்வின் தீராப் பக்கங்களில் தனது மௌனத்தாலும் மோனத்தாலும் கவிதையெழுதிச் செல்கிற கிருஷ்ணன். ஒரு கொலைக் குறிப்பை அவன் எழுதி வைப்பதை வினோத் நிச்சயம் விரும்பமாட்டான். கிருஷ்ணனை எப்படி ஒரு கொலைகாரனாகக் கருத இயலும்? அவனது அசுர வதங்கள் எல்லாமேகூட மோட்ச சன்னியாசப் பிட்சை அல்லவா?

எனக்கு இன்னும் என்னென்னவோ தோன்றியது. மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ‘வினய், நீ வீட்டுக்குப் போ. நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்68 என்று சொல்லிவிட்டு, அவன் பதில் சொல்வதற்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அவன் சிறிது நேரம் அங்கேயே நின்று நான் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். நானும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் கோயில் முன் மண்டபத்தை நோக்கிச் சென்றேன். நான் மண்டபத்தை அடையும்வரை வினய் நகரவில்லை. நான் மண்டபத்தை நெருங்கி, ஒரு தூணோரம் சாய்ந்து அமர்ந்தபின் அவன் நின்ற இடத்தில் இருந்து கையாட்டிவிட்டு வீட்டை நோக்கிப் போகத் தொடங்கினான்.

வினய் வீட்டுக்குப் போகும் நேரம் அம்மா கண்ணைத் திறந்து பார்த்தால் சிறிது பயந்துவிடுவாள் என்று தோன்றியது. அவனது தோற்றம் அத்தனை பயங்கரமாக இருந்தது. அவன் மேல் சட்டை அணிய விரும்புவதே இல்லை. வினோத் கொடுத்ததைக்கூட உதாசீனப்படுத்திவிட்டான். புடைத்துக்கொண்டு வெளியே தெரிந்த அவனது மார்பு எலும்புகளை விரல் வைத்து எண்ண முடிந்தது. கழுத்தில் ஆறேழு நரம்புகள் இற்றுப்போன கயிறுகளைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தன. முகமெங்கும் மண்டிய தாடியும் சடாமுடியும் உருண்டுகொண்டே இருந்த விழிகளும் அம்மா ரசிக்கக்கூடியவையாக இருக்க முடியாது என்று நினைத்தேன். விரல் நகங்களை அவன் நறுக்குவதில்லை. அதில் படியும் அழுக்கையும் அவன் பொருட்படுத்துவதில்லை. நான் அவனிடம், ‘தினமும் குளிக்கிறாயா?’ என்று கேட்டேன். ‘தோன்றும்போது குளிப்பேன். குளிக்கத் தோன்றும்போது அருகே நீர்நிலை இருக்க வேண்டும். அதுதான் சிக்கல்’ என்று சொன்னான். தனக்கென ஒதுங்க ஓர் இடமின்றியே இருபதாண்டுக் காலத்துக்கும் மேலாக அவன் கழித்திருக்கிறான் என்பது வியப்பாக இருந்தது.

‘ஆனால் எனக்கு அது ஒரு பிரச்னையாகத் தெரிந்ததே இல்லை. உறக்கம் வரும்போதுதான் எங்கே படுப்பது என்ற கேள்வி வரும். உறங்காதிருக்கும்போது உலகம் முழுவதும் என்னுடையதுதான்’ என்று சொன்னான். அண்ணாவைப் போன்றவர்களுக்கு மலைகளெங்கும் குகைகள் உண்டு. மர வீடுகள் கட்டிக்கொண்டு எந்தக் காட்டிலும் இருந்துவிடுவார்கள். ஆனால் வினய் போன்ற சமவெளிச் சன்னியாசிகளின் பாடுதான் சிரமம். ஒரு சமயம், வினய் ஆறு நாள் தவமிருக்க உத்தேசித்து, அதற்காக இடம் தேடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் ஆந்திர மாநிலத்தில் சுற்றிக்கொண்டிருந்தான். பலப்பல இடங்கள் அலைந்து திரிந்தும் அவன் விரும்பிய தனிமை எங்கும் அமையவில்லை. இறுதியில் கூடூர் ரயில் நிலையத்துக்கு அவன் வந்து சேர்ந்தபோது, ஒரு சரக்கு ரயில் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. அதில் மூன்று பெட்டிகள் நிறைய நிலக்கரி இருப்பதை அவன் கண்டான். ஒரு பெட்டியைத் திறந்து ஏறிக்கொண்டு கதவை மூடிக்கொண்டான். கௌஹாத்தி வரை சென்ற அந்த சரக்கு ரயிலிலேயே அவன் தனது தவத்தைச் செய்து முடித்தான்.

வினோத் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, ‘அந்தத் தவத்தின் இறுதியில் உனக்கு என்ன கிடைத்தது?’ என்று கேட்டேன்.

‘நிறைய புழுதி. நிறைய அழுக்கு. ஒரு மாதிரி அலர்ஜி உண்டாகி இரண்டு மாதங்கள் என் மூக்கு எரிந்துகொண்டே இருந்தது’ என்று சொன்னான்.

மண்டபத்தில் நான் தனியேதான் இருந்தேன். கோயில் நடை சாத்திவிட்டிருந்தபடியால் வெளியூர் பக்தர்கள் யாரும் இல்லை. சுற்றுப்புற கடைக்காரர்களும் பழைய புடைவைகளைத் திரைச் சீலைகளாகத் தொங்கவிட்டு, உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் நடை திறக்க இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதன்பின் மீண்டும் பக்தர்கள் வரத் தொடங்குவார்கள். புராண காலம் தொட்டுப் புகழோடு இருக்கிற ஊர். ஆனால் கால மாற்றத்தின் சுவடுகள் எது ஒன்றும் படியவேயில்லை. ஒருவிதத்தில் அது நல்லதே என்றும், இன்னொரு பார்வையில் வருத்தத்துக்குரியதாகவும் தோன்றியது.

மண்டபத்தின் கட்டாந்தரையில் அப்படியே மல்லாக்கப் படுத்தேன். சிறிது நேரம் தூங்கலாம் என்று நினைத்தேன். சீடர்கள் யாரும் உடன் வராமல் நான் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. என் சீடர் யாராவது என்னை இப்படிக் கட்டாந்தரையில் படுக்கக் கண்டால் துடித்துவிடுவார்கள். குறைந்தபட்சம் இடுப்பு வேட்டியை அவிழ்த்து விரித்தேனும் என்னைப் படுக்கச் சொல்லுவார்கள். வாழ்வின் ஆக சொகுசான விசிறி மடிப்புகளிலேயே வாழ்ந்து பழகிவிட்டேன் என்பதை எண்ணிப் பார்த்தேன். என் துறவின் நோக்கமே அதுதானோ என்று சந்தேகம் வந்தது. இல்லை, சுதந்திரமே என் தெய்வம் என்று வலுக்கட்டாயமாக இழுத்து நினைத்துக்கொண்டு தூங்கப் பார்த்தேன்.

யாரோ மண்டபத்துக்கு வருவதுபோல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். வினோத் வந்துகொண்டிருந்தான்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவன் என்னைப் பார்த்ததும் புன்னகை செய்தான்.

‘வினய் வந்துவிட்டான். வீட்டுக்குப் போனால் பார்க்கலாம்’ என்று சொன்னேன். ‘நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?’

‘அவனை அழைத்துவரச் சென்ற உன்னையும் காணவில்லை என்பதால் மாமா மிகவும் கவலைப்படத் தொடங்கிவிட்டார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக வசந்த மண்டபம் போய் உட்கார்ந்திருந்தேன். போரடித்ததால் எழுந்து வந்தேன்’.

நான் புன்னகை செய்தேன். ‘உட்கார்’ என்று சொன்னேன். அவன் என் அருகே அமர்ந்துகொண்டான்.

‘வினய் வீட்டுக்குப் போயிருக்கிறான்’ என்று மீண்டும் சொன்னேன்.

‘அம்மா சிறிது நேரம் சுயநினைவுடன் இருந்தாள். என்னிடம் பேசினாள். பிறகு நினைவு போய்விட்டது’ என்று வினோத் சொன்னான்.

‘ஓ. மாமா அருகே இருந்தாரா?’

‘இல்லை. பத்மா மாமிக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு வெளியே போனார்’.

‘ஓ. நல்லது. அம்மா என்ன சொன்னாள்?’

‘நிறையச் சொன்னாள்’.

‘உன்னை அவளுக்கு அடையாளம் தெரிந்ததா?’

‘முதலில் சிறிது யோசித்தாள். வினய்யா என்று கேட்டாள்’.

‘பிறகு?’

‘விஜய் வந்தானா என்றாள்’.

‘உம்’.

‘என் கழுத்தில் உள்ள துளசி மாலையைப் பார்த்ததுமே அவளுக்கு என்னைப் பற்றிய தகவல்கள் தெரிந்துவிட்டன என்று நினைக்கிறேன்’.

நான் புன்னகை செய்தேன்.

‘எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது விமல். அவள் சற்றும் பரவசமடையவில்லை. கண்ணீர் விடவில்லை. அவள் முகத்தில் தவிப்பின் சிறு சுவடுகூடத் தெரியவில்லை’.

‘விடு. நினைவு மீண்டதே பெரிது’.

‘இல்லை. கேசவன் மாமா எப்படி அழுதார் தெரியுமா? நீ இல்லாமல் போய்விட்டாய். தூணில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதார்’.

‘பாவம், நல்ல மனிதர். தனது சக்தி முழுவதையும் பாசமாகச் செலவழித்துவிடப் பார்க்கிறார். காமுகர்கள் இப்படித்தான் சக்தியை விந்துவாக விரயம் செய்வார்கள்’.

வினோத் திகைத்துவிட்டான். ‘நீ என்ன சொல்கிறாய்? நமக்குப் பாசமற்றுப்போனது நாம் தேடிக்கொண்ட வாழ்க்கை. அம்மா ஒரு குடும்பப் பெண் அல்லவா? நான்கு பெற்றவள் அல்லவா? நான்கையும் பறிகொடுத்தவள் அல்லவா?’

‘சரி, அதனால் என்ன? அவள் நாளை இறக்கப் போகிறவள். நினைவு மீண்டதே பெரிது. பேசினாள் என்று வேறு சொல்கிறாய்’.

‘சும்மா பேசியதல்ல. அவளுக்கு அந்தச் சுவடியின் ரகசியம் தெரிந்திருக்கிறது’ என்று வினோத் சொன்னான்.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. ‘உண்மையாகவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். நாம் நால்வரும் வீடு தங்க மாட்டோம் என்பதை அவள் அறிந்தே இருந்திருக்கிறாள்’.

‘அம்மாவே சொன்னாளா?’

‘ஆம்’.

‘வேறென்ன சொன்னாள்?’

‘என் மரணம் வினய்யால் நேரும் என்று சொன்னாள்’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com