149. பொம்மைகள்

அவள் எதிரே இருந்த சமாதியில் ஒரு சிறு அசைவு ஏற்படுவது போல இருந்தது. அது தன் பிரமை என்று அவள் நினைத்தாள். உற்றுப் பார்த்தபோது மீண்டும் ஒரு அசைவு உண்டானது.

பிரபவ வருடம் புரட்டாசி பதினேழாம் நாள், குருவாரம் சரித்திரங்காணாத மழையில் திருவண்ணாமலை திக்கித் திணறிக்கொண்டிருந்தபோது, நாரையூர் கீழத்தெரு அக்ரஹாரத்து துபாஷி நாராயண ஐயங்கார், செண்பகவல்லி தம்பதியின் கனிஷ்ட புத்திரியாக அம்மா பிறந்தாள். அவள் பிறந்த செய்தியை அக்கம்பக்கத்து வீட்டாருக்குக்கூடப் போய்ச் சொல்ல முடியாதபடிக்கு வெளியே வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. ஊரில் அப்போது மின்சாரமெல்லாம் வரவில்லை. லாந்தர் விளக்கைப் பிடித்துக்கொண்டு நாராயண ஐயங்கார் கண்ணை மூடி காயத்ரி சொல்லிக்கொண்டிருந்தபோது, பிரமாதமாக அலட்டிக்கொண்டு பதறாமல் அவரது தாயாரே அம்மாவுக்குப் பிரசவம் பார்த்து முடித்தாள். ‘ஆயிடுத்துடி. பொண் குழந்தைதான் பொறந்திருக்கு. அடுத்த வருஷம் இன்னொண்ணு பெத்துக்கோ. அது ஆம்பள பிள்ளையா இருக்கும்’ என்று அரை மயக்கத்தில் இருந்தவளைத் தட்டியெழுப்பிக் காதோரம் சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போய் வெந்நீர் வைத்து எடுத்து வந்தாள்.

அம்மா நாரையூரிலேயே சிறிது காலம் படித்தாள். ஐரோப்பாவில் இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பித்து இருந்த சமயம் துபாஷி நாராயண ஐயங்காருக்கு மதராச பட்டணத்தில் உத்தியோகம் அமைந்து குடும்பத்தோடு புறப்பட வேண்டியதாயிற்று. அம்மாவுக்கு அப்போது பதினாறு வயது. அந்த வருடம்தான் அவளது அக்காவுக்குக் கலியாணம் நடந்து அவள் செய்யாறில் புக்ககம் போயிருந்தாள். யுத்த காலத்தில் பட்டணத்துக்குப் போவது அத்தனை உசிதமல்ல என்று ஊரில் அத்தனை பேரும் நாராயண ஐயங்காருக்குச் சொன்னார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அவர் மதராச பட்டணத்துக்குப் போயே தீருவது என்று முடிவு செய்து கிளம்பிவிட்டார்.

பட்டணத்தில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஒரு மிளகாய் வற்றல் மண்டியின் மாடியில் இருந்த நான்கு போர்ஷன்களுள் ஒன்றில் அவர் தமது ஜாகையை அமைத்துக்கொண்டார். சிறிய வீடுதான். பதினைந்தடிக்குப் பத்தடி அளவில் ஒரு கூடம். பத்தடிக்குப் பத்தடியில் ஓர் அறை. அதில் பாதியளவுக்கு சமையலறை.பின்புறம் தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்துக்கொள்ள ஓர் இடம் இருந்தது. அது கூடத்தைக் காட்டிலும் சிறிது பெரிதாகவே இருந்தது. வீட்டைப் பார்த்த நாராயண ஐயங்காரின் அம்மா ஒரு வாரத்துக்குப் புலம்பி அனத்திக்கொண்டே இருந்தாள். ‘இதென்ன வீடு? இதென்ன ஊர்? மனுஷன் இருக்க முடியுமா இங்கே? என்னத்துக்காக இப்படி ஜெயில்லே கொண்டுவந்து தள்ளியிருக்கே?’

‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா. ஒரு மாசத்துலே வீடு பாத்துடலாம். இது இப்போதைக்குத்தான்’ என்று ஐயங்கார் சொல்லிப் பார்த்தார். அவரது அம்மா கேட்கவில்லை. ‘எனக்கு ஆகாதுப்பா இந்த பொந்துவாசமெல்லாம். நான் போறேன் உன் தம்பியாத்துக்கு’ என்று சொல்லிவிட்டு, மறுநாளே தனது பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு மயிலம் கிளம்பிப் போய்ச் சேர்ந்தாள். நாராயண ஐயங்கார் அம்மா படித்தது போதும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதாகப் பிறந்த புத்திரன் கேசவனை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு குருகுலத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். இந்தச் சமயத்தில் அம்மாவின் அக்காவுக்குப் பிரசவத்துக்கு நாள் நெருங்கியிருந்தது. அப்போது அவர்களது குடும்பம் செய்யாறில் இருந்து திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்திருந்தபடியாலும், பிரசவத்துக்காகவென்று அவளைச் சென்னைக்கு அனுப்ப இயலாதென்று அம்மாவின் அக்கா புருஷன் சொல்லிவிட்டபடியாலும், நாராயண ஐயங்காரின் மனைவி செண்பகவல்லி தனது மூத்த மகள் பிள்ளை பெறுகிறவரை திருவண்ணாமலைக்குப் போய் இருக்க வேண்டியதானது. தனியே போவானேன் என்று அவள் அம்மாவையும் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்குக் கிளம்பினாள்.

அம்மாவுக்கு அந்த வயதில்தான் நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாராயண ஐயங்காருக்கு மகளை நல்ல இடம் பார்த்துக் கலியாணம் செய்து கொடுத்துவிடும் விருப்பம் மட்டுமே இருந்தது. இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று செண்பகவல்லி அடம் பிடித்துத் தடுத்து வைத்திருந்ததால் மட்டுமே அவர் பொறுமையாக இருந்தார். இல்லாவிட்டால், அம்மாவின் அக்காவுக்குச் செய்தது போலப் பதினேழு வயதிலேயே மணமுடித்துக் கணக்குத் தீர்த்திருப்பார்.

அம்மா தன் அம்மாவோடு அக்காவின் இரண்டாவது பிரசவத்துக்காகத் திருவண்ணாமலைக்கு மீண்டும் சென்றபோது, துபாஷியான நாராயண ஐயங்காருக்கு மதராச பட்டணத்தில் அப்பாவின் தகப்பனாருடன் மூர் மார்க்கெட் அருகே ஒரு குதிரை லாயத்தில் அறிமுகம் உண்டானது. ‘எம்பொண்ணு ஜாதகம் அனுப்பி வெக்கறேன். உம்ம பிள்ளை ஜாதகத்த நீங்களும் குடுத்தனுப்புங்கோ. பிராப்தம் இருந்தா நடக்கட்டும்’ என்று சொல்லிவைத்தார்.

அதே சமயம் திருவண்ணாமலையில் அம்மா கிரிவலம் செய்துகொண்டிருந்தாள். ‘நம்மளவாள்ளாம் அதெல்லாம் பண்றதில்லே’ என்று அம்மாவின் அம்மாவும் அம்மாவின் அக்காவுடைய புருஷனும் கிளம்பும்போது சிறிது தடுத்துப் பார்த்தாலும் ஊருக்கு வந்திருக்கும் பெண்ணுக்குப் பொழுதுபோக வேண்டுமல்லவா? அக்கம்பக்கத்து வீடுகளில் அறிமுகமான தோழிகளுடன் அம்மா கிரிவலத்துக்குக் கிளம்பினாள். அன்றைக்கு பவுர்ணமி. அக்காலத்தில் மலை சுற்றப் பாதையெல்லாம் கிடையாது. கல்லும் மண்ணும் முள்ளும் பாறைகளும் மண்டிய வழிதான். வீதி விளக்குகள் கிடையாது. வழியில் கடைகள் கிடையாது. கிரிவலம் செல்வோர் எண்ணிக்கையே மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். அதிலும் பெண்கள் வலம் போவது அரிது. இருந்தாலும் அம்மாவின் தீராத ஆர்வத்தால் உந்தப்பட்ட சம வயதுப் பெண்கள் அவரவர் வீடுகளில் அனுமதி பெற்றுக்கொண்டு அன்று மாலை கிரிவலத்துக்குப் புறப்பட்டார்கள். இருட்டுவதற்குள் வீடு திரும்பிவிடுவதாக வாக்களித்துவிட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

நாரையூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அம்மா திருவண்ணாமலைக்குச் சென்றதில்லை. அம்மாவின் அப்பாவான நாராயண ஐயங்கார் அப்படியொன்றும் வீர வைஷ்ணவர் இல்லை என்றபோதும் சிவன் கோயிலுக்குப் போவதைப் பெரிதாக விரும்புகிறவரில்லை. தனது குழந்தைகளை அவர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றதும் இல்லை. அதனால் முதல் அனுபவமான அந்த கிரிவலம் அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் அதுவரை நினைத்திராத அருணாசலேசுவரரை அன்று மாலை முழுதும் நினைத்துக்கொண்டும் தலத்தின் பெருமைகளைத் தோழிகளிடம் கேட்டறிந்தபடியும் நடந்துகொண்டிருந்தாள். நடந்துபோகிற வழியில் ரமணாசிரமம் எதிர்ப்பட்டது. அம்மாவுக்கு ஏற்கெனவே ரமணரின் பெயர் தெரிந்திருந்தது. திருவண்ணாமலையில் வசிக்கும் ஒரு துறவி என்ற அளவில் அவள் அறிந்திருந்த ரமணரைக் குறித்து அவளோடு சென்ற தோழிகள் மேலும் பலப்பல கதைகள் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார்கள். போய் சேவித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு பெண் சொன்னாள். அம்மாவும் சம்மதித்தாள்.

அவர்கள் ரமணரைக் காணச் சென்றபோது ஆசிரம வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நெருங்கிச் செல்ல நேரமாகும் என்று தோன்றியது. ‘இரு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு பெண் மட்டும் உள்ளே சென்றாள். அவளுக்குத் தெரிந்த யாரோ ஆசிரமத்தில் இருப்பதாக இன்னொரு பெண் அம்மாவிடம் சொன்னாள். அம்மா ரமணாசிரமத்தின் வெளியே நின்றிருந்தாள். அந்த ஆசிரம வளாகத்தின் அருகிலேயே ஒரு அதிஷ்டானம் இருப்பதாகவும் அது சேஷாத்ரி சுவாமிகளுடையது என்றும் உடனிருந்த பெண் அம்மாவிடம் சொன்னாள்.

‘அவர் யார்?’ என்று அம்மா, அந்தப் பெண்ணிடம் கேட்டாள்.

‘சேஷாத்ரி சுவாமிகள் பெரிய மகான். சிறு வயதில் ரமணருக்கு நிறைய உதவிகள் செய்தவர். நாளை என் வீட்டுக்கு வா. என் பாட்டி உனக்கு அவரைக் குறித்து நிறைய சொல்லுவாள்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

சும்மா நிற்கும் நேரத்தில் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலாம் என்று அம்மாவுக்குத் தோன்றியது. அவள் சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். எந்த வித அலங்கார வினோதங்களும் இன்றி ஒரு சமாதி. சேஷாத்ரி சுவாமிகள் என்னும் சித்தர் அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் விவரம் கூட அப்போது எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு மடமாகவோ, ஆசிரமமாகவோ உருப்பெறாமல் வெறும் சமாதியாக இருந்த அந்த இடத்துக்கு அம்மா வந்தபோது அங்கு யாரும் இல்லை. அவள் சமாதியை நெருங்கியபோது தன்னியல்பாக அவளது கரங்கள் குவிந்து வணங்கின. சமாதியை ஒருமுறை சுற்றி வந்தாள். என்ன தோன்றியதோ, பிறகு சமாதிக்கு எதிரே சிறிது இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள்.

அவள் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சித்தர் காலமாகியிருந்தார். திருவண்ணாமலையில் மூலைக்கு மூலை சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும் மகான்களும் காலம்தோறும் உதித்த வண்ணம் இருப்பதை அவள் அறிவாள். ஆனால் ஏன் யாரும் அந்த மண்ணிலேயே பிறந்து மகானாவதில்லை என்று அவளுக்குச் சந்தேகம் வந்தது. சேஷாத்ரி சுவாமிகள்கூட எங்கிருந்தோ வந்தவர்தான். ரமணரும் வெளியூர்க்காரர். அம்மா கேள்விப்பட்டிருந்த அத்தனை திருவண்ணாமலைத் துறவிகளும் வெளீயூர் ஆசாமிகளாகவே இருந்தார்கள். அவளுக்கு வியப்பாக இருந்தது. சன்னியாசிகளை ஈர்க்கும் ஊருக்கு அத்தகையோரைப் பிறப்பிக்கும் வல்லமை ஏன் இல்லை?

இதைக் குறித்து அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது அவள் எதிரே இருந்த சமாதியில் ஒரு சிறு அசைவு ஏற்படுவது போல இருந்தது. அது தன் பிரமை என்று அவள் நினைத்தாள். உற்றுப் பார்த்தபோது மீண்டும் ஒரு அசைவு உண்டானது. நில நடுக்கத்தில் தம்ளர் அசைவது போல அந்தச் சமாதியே சற்று அசைந்து கொடுத்ததை அவள் கண்டாள். சட்டென்று பயந்துவிட்டாள். எழுந்து சென்றுவிடலாம் என்று அவள் நினைத்தபோது ஒரு குரல் கேட்டது.

‘உட்கார்’.

அவள் அக்குரலுக்குக் கட்டுப்பட்டு அங்கேயே அமர்ந்தாள். சிறிது பயமாக இருந்தது. தன்னுடன் வந்த தோழிகள் இப்போது அருகே இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாள். சரி போ, ஒரு சித்தர் தன்னை என்ன செய்துவிடுவார் என்றும் நினைத்தாள். செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால் அருளாசியோடு போய்ச் சேரலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் ஒருமுறை எழுந்து சமாதியை வணங்கிவிட்டு அமர்ந்தாள்.

அப்போது அவள் முன்னால் நான்கு மரப்பாச்சி பொம்மைகள் தோன்றின. இரண்டு விரற்கடை நீளம் மட்டுமே இருந்த மர பொம்மைகள். நான்கும் ஒன்றே போல இருந்தன. அவள் அவற்றை வியப்புடன் தொட்டுப் பார்த்தாள். ஒன்றும் ஆகவில்லை. நடுக்கத்துடன் மீண்டும் ஒன்றைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தாள். வெறும் பொம்மைதான். அது அந்தச் சித்தரின் ஆசியாகத் தனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. நான்கையும் எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். இரு உள்ளங்கைகளிலும் தலா இரண்டு பொம்மைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள். மீண்டும் ஒருமுறை சமாதியை வலம் வந்து வணங்கிவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com