151. நிழல் வெளி

அம்மாவும் அப்பாவும் கோயிலில் வெண் பொங்கலும் புளியோதரையும் தளிகை விட்டு, ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்தார்கள்.

மதராசபட்டணத்துக்கு வந்து சேர்ந்த பின்பு அம்மா மீண்டும் செகந்திராபாத்துக்குப் போக விரும்பவில்லை. போக முடியாத சூழ்நிலைகள் உருவானதும் ஒரு முக்கியக் காரணமே. அம்மா ஊருக்கு வந்த இரண்டாம் நாளில் நாராயண ஐயங்காரைக் காலரா தாக்கியது. அம்மாதிரியானதொரு கொடூரமான நோய்த் தாக்குதல் யாருக்குமே வரக் கூடாது என்று பின்னாள்களில் அம்மா பலமுறை சொல்லியிருக்கிறாள். நாராயண ஐயங்கார் பதினெட்டு தினங்கள் காலராவுடன் போராடிவிட்டு இறந்துபோனார். செகந்திராபாத்தில் உள்ள அத்திம்பேருக்குத் தந்தி அடித்துவிட்டு, கேசவன் மாமா தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். அப்பா காரியத்துக்கு வரவில்லை. அங்கே ஒரே கலவரமாயிருக்கிறது என்றும், பத்தாம் நாள் காரியத்துக்கு எப்படியும் வந்துவிடுவார் என்றும் அப்பாவின் அப்பாவும் அம்மாவும் திரும்பத் திரும்ப சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அம்மாவுக்குத் தனது மாமனார் மாமியாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. செகந்திராபாத் ஆஞ்சநேயர் கோயிலைப் பற்றிப் பேசினாள். ஆனால் மைதிலியைப் பற்றிச் சொல்லவில்லை.

காரியங்கள் அனைத்தும் முடிந்து சுபஸ்வீகாரம் ஆனதும் அம்மாவை செகந்திராபாத்துக்கு அனுப்பிவைப்பது குறித்து அம்மாவின் அம்மாவும் கேசவன் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இல்லை, அவரே இங்க வந்துடுவார்’ என்று அம்மா அப்போதைக்குச் சொல்லி அதைத் தடுத்து நிறுத்தினாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அப்பா மதராசுக்கு வந்தார். வந்தவர் நேரே தன் வீட்டுக்குப் போய்த் தங்கிக்கொண்டு, அம்மாவை அங்கே வரும்படிச் சொல்லி அனுப்பினார். அம்மா போகவில்லை. அதன்பின்புதான் அப்பாவின் வீட்டாருக்கு லேசாக சந்தேகம் தட்டியிருக்கிறது. மகனிடம் அவர்கள் விசாரிக்க ஆரம்பித்ததும், அப்பா கோபித்துக்கொண்டு மீண்டும் செகந்திராபாத்துக்குப் போய்விட்டார்.

அன்றைக்கு மறுநாள் அம்மாவின் மாமனார் டிராம் பிடித்து மூர் மார்க்கெட் வரை வந்து இறங்கி, அங்கிருந்து தனது வேலையாளை அம்மா வீட்டுக்கு அனுப்பி அம்மாவைக் கையோடு அழைத்துவரச் சொன்னார். மாட்டேன் என்று சொன்னால், ‘நான் காலில் விழுந்து அழைக்கிறேன் என்று சொல்லு’ என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

வேறு வழியின்றி, அம்மா தனது மாமனார் வீட்டு வேலையாளுடன் மூர் மார்க்கெட்டுக்குச் சென்றாள். உடன் வருவதாகச் சொன்ன கேசவன் மாமாவை வேண்டாம் என்று சொல்லித் தடுத்து நிறுத்திவிட்டாள். மூர் மார்க்கெட்டில் வைத்து அம்மாவின் மாமனார் என்ன நடந்தது என்று அம்மாவிடம் விசாரித்தார். அம்மா எதைச் சொல்வாள்? ‘என் திருமணத்துக்குப் பின்பு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லியிருக்கிறாள். அந்த மனிதர் மனம் உடைந்துபோய் வீடு திரும்பினார். அதன்பின் நடந்தவை எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.

ஒருநாள் நள்ளிரவு அம்மாவின் வீட்டுக் கதவு தடதடவென தட்டப்படும் சத்தம் கேட்டது. கேசவன் மாமா எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். அப்பா வெளியே நின்றுகொண்டிருந்தார். சட்டை கிழிந்து, தலைமுடியெல்லாம் கலைந்து, முகமெல்லாம் ரத்தக் களேபரமாகியிருக்க, ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ஓடிவந்த கோலத்தில் அவர் இருந்தார். கதவு திறக்கப்பட்டதுமே பாய்ந்து உள்ளே வந்து அவரே கதவை மூடித் தாழிட்டார்.

‘என்ன விஷயம்?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘உன் அக்கா எங்கே?’ என்று அப்பா கேட்டார்.

உறக்கம் கலைந்து, அம்மாவும் அம்மாவின் அம்மாவும் எழுந்து வந்தார்கள். அப்பா அவர்களைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, எதுவும் பேசாமல் நேரே அம்மாவின் முன்னால் போய் நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

‘எதற்கு இது?’ என்று அம்மாவின் அம்மா கேட்டாள். அவளுக்கு மிகவும் பதற்றமாகிவிட்டது. ஆனால் அம்மா ஒன்றும் பேசவில்லை.

‘நான் செய்த பாவத்துக்கு’ என்று அப்பா சொன்னார். ‘உங்க பொண்ணுக்குப் புரியும்’ என்றும் சொன்னார். அம்மா அதுவரையிலுமேகூட தன் வீட்டாரிடம் நடந்த எதையும் சொல்லியிருக்கவில்லை என்பது அப்போதுதான் அப்பாவுக்குத் தெரியும். அம்மா அதன்பின்பும் எதையும் சொன்னதாகத் தெரியவில்லை. அன்றிரவு அப்பாவும் அம்மாவும் பத்து நிமிடங்கள் வீட்டின் பின்புறம் இருந்த அரிசிக் களஞ்சியத்தின் மீது சாய்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, அம்மாவின் அம்மா அந்த நள்ளிரவு நேரத்திலும் அப்பாவுக்கு சூடாகக் காப்பி போட்டுக் கொடுத்தாள். அப்பா அதை வாங்கிக் குடித்துவிட்டு, ‘நாங்கள் நாளைக் காலை செகந்திராபாத் கிளம்புகிறோம்’ என்று சொன்னார்.

‘இப்போதாவது உண்மையைச் சொல். என்ன நடந்தது?’ என்று கேசவன் மாமா அம்மாவிடம் கேட்டார். அம்மா ‘ஒன்றுமில்லை’ என்று சொன்னாள்.

மறுநாள் அதிகாலை அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அவர்கள் செகந்திராபாத்துக்குப் போகவில்லை. அப்பாவுக்கு அப்போது அகோபிலத்தில் உள்ள ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் கணக்கெழுதும் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்நாள்களில் அகோபிலத்துக்குப் போகிறவர்கள் மிகவும் குறைவு. சரியான வழி கிடையாது. பேருந்து வசதிகள் கிடையாது. மிகவும் ஆபத்தான பிராந்தியம் என்று சொல்லுவார்கள். ஆனால் அம்மா துணிந்து அப்பாவுடன் அங்கே போய்ச் சேர்ந்தாள். அப்பாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. அவர் ஆசிரம உத்தியோகம் பார்க்கும் நேரம் போக மீதி நேரம் முழுவதையும் அம்மாவுடனேயே செலவழிக்க ஆரம்பித்தார். வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்கள் துலக்கி வைப்பது, துணி துவைப்பது, ஒட்டடை அடிப்பது, தலையணைகளுக்கு உறை போடுவது, கடைக்குப் போய் வருவது, அம்மாவின் வீட்டு விலக்கு தினங்களில் சமைப்பது என்று ஒரு சிறந்த குடும்பத் தலைவனானார். வீட்டிலும் செய்வதற்கு வேலைகள் இல்லாத சமயத்தில் அவர் பிரபந்தம் படிக்கத் தொடங்கிவிடுவார்.

அம்மாவின் அம்மா காலமான சேதி வந்தபோது, விஜய், வினய் இருவரையும் ஆளுக்கொருவர் தூக்கிக்கொண்டு மதராசுக்குப் போனார்கள். காரியம் முடியும்வரை அப்பாதான் கேசவன் மாமாவுக்குத் துணையாக இருந்தது. நான்காம் நாளே அம்மா குழந்தைகளுடன் ஊருக்குத் திரும்பிவிட்டாள்.

ஆறாண்டுக் காலம் இப்படியே ஓடிய பிற்பாடுதான் கேசவன் மாமாவுக்கு அம்மா ஒரு கடிதம் எழுதினாள். இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் மதராசுக்கே குடிமாறி வந்துவிடப் போகிறோம். அம்மாவும் இல்லாத நிலையில் நீ கோவிந்தப்பன் நாயக்கன் தெரு வீட்டில் இன்னும் எதற்குத் தனியே இருக்க வேண்டும்? எங்களோடு திருவிடந்தைக்கு வந்துவிடு.

அது அப்பாவின் அப்பா எந்தக் காலத்திலோ யாரிடமோ சொல்லிவைத்து நூற்று எண்பத்தேழு ரூபாய்க்கு வாங்கிய கோயில் வீடு. அந்த மனிதர் இறக்கும்வரை அவருக்கு அப்படியொரு வீடு இருக்கிறது என்கிற விவரமே யாருக்கும் தெரியாது. இறந்தபின்பு அவரது உயிலில் பார்த்துத்தான் அப்பாவுக்கு அந்த வீட்டைக் குறித்து தெரிய வந்தது. ஒரு நல்ல நாள் பார்த்து அவர்கள் திருவிடந்தைக்குக் குடி வந்தார்கள். அம்மாவும் அப்பாவும் திருவிடந்தைக்கு வரும்போது எனக்கு இரண்டு வயது பூர்த்தியாகியிருக்கவில்லை. என்னுடைய இரண்டாவது வயது பிறந்த நாளுக்கு முதல் நாள் வீட்டில் ஒரு வாத்தியார் வந்து ஏதோ ஒரு ஹோமம் செய்து வைத்துவிட்டுப் போனார். அம்மாவும் அப்பாவும் கோயிலில் வெண் பொங்கலும் புளியோதரையும் தளிகை விட்டு, ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்தார்கள். ‘என்ன விசேஷம்?’ என்று விஜய் அம்மாவிடம் கேட்டதற்கு, ‘என் அக்கா நினைவு நாள்’ என்று அவள் பதில் சொன்னாள்.

முன்னுக்குப் பின் தொடர்பு இருப்பது போலவும் இல்லாதது போலவும் ஒரே சமயத்தில் தோற்றமளித்த இத்தகவல்களை அம்மா தன்னிடம் சொன்னதாக வினோத் சொல்லி முடித்தபோது, எனக்கு பதில் பேசவே தோன்றவில்லை. எனக்கென்னவோ, திட்டமிட்டே அம்மா ஆங்காங்கே இடைவெளி வைத்து அவனிடம் பேசியிருப்பதாகத் தோன்றியது. அவள் சுயநினைவின்றிக் கிடப்பதாகவும் பேச்சற்றுப் போய்விட்டதாகவும் கேசவன் மாமா சொன்னதை எண்ணிப் பார்த்தேன். அவரிடம் அம்மா அப்படித்தான் தோற்றம் கொண்டிருக்கிறாள். அவருக்கு அதுவே சரி என்று எண்ணியிருப்பாள் என்று தோன்றியது. வினய்யிடம் ஒருவேளை அவள் மீதமுள்ள தகவல்களை வேறு வடிவத்தில் தரலாம். அல்லது என்னிடமே சொல்லலாம். அண்ணாவுக்காகக் காத்திருக்கலாம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும் என்பதுகூட இல்லை. எப்படிப் பார்த்தாலும், கற்பனைக்கு எட்டாத ஒரு மகத்தான வாழ்வைத்தான் அவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதுகூட எனக்கு அவளோடு பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் கையைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் சும்மா அமர்ந்திருக்கலாம் போலிருந்தது.

வினோத்திடம் இதனைச் சொன்னபோது, அவன் கண்கள் கலங்கிவிட்டன.

‘அழுகிறாயா?’ என்று கேட்டேன்.

‘என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று அவன் சொன்னான்.

‘ஏன்?’

‘தெரியவில்லை. ஆனால் நான் சமநிலையில் இல்லை. என்னால் இருக்க முடியவில்லை’ என்று சொன்னான்.

‘வினோத், நீ தத்துவங்களில் நம்பிக்கை உள்ளவன். பல உடல்களுக்குள் புகுந்து வெளிவந்தாலும், உயிர் ஒன்றே என்பதை நீ ஏற்பாய் என்று நம்புகிறேன்’.

‘ஆம்’.

‘அப்படியே இதையும் சேர்த்து நம்பு. பல வடிவங்களில் காணக் கிடைத்தாலும் உடலும் ஒன்றேதான்’.

‘அதெப்படி ஒன்றாகும்?’

‘உடலற்ற உயிருக்கோ, உயிரற்ற உடலுக்கோ பொருளில்லை என்பது உண்மை என்றால் இரண்டும் சம அந்தஸ்து வாய்ந்தவை. பொருள் உண்டு என்றாலும் பதில் அதுவே’.

அவன் வெகு நேரம் பிரமை பிடித்தாற்போல எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு சட்டென்று சொன்னான், ‘இப்போது நான் அண்ணாவுக்காக மிகவும் ஏங்குகிறேன். அவன் வர வேண்டும். அவன் வந்தால்தான் நிறையக் குழப்பங்கள் தீரும்’.

அந்தக் கணத்தில் எனக்கு மனத்தில் பட்டது. அவன் வரமாட்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com