155. கோழைப் பேய்

எனக்கு அம்மாவின் கற்பனை வளம் பற்றிய பிரமிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. தனது மானசீகத்தில் அவள் பிரம்மாண்டமானதொரு கோட்டைச் சுவரை எழுப்பியிருக்கிறாள். 

கிருஷ்ணனைக் குறித்துத் தவம் செய்யப் போனபோதுதான் வினய்க்கு சித்ரா அகப்பட்டாள் என்று நான் சொன்னபோது வினோத் உண்மையில் மிகவும் வருத்தப்பட்டான். ‘நீ அதை நினைத்து வருத்தப்படாதே. மீண்டும் ஒருமுறை முயற்சி செய். அவன் நிச்சயமாக உனக்கு நல்லது செய்வான்’ என்று சொன்னான். வினய் சிரித்தான்.

‘அவன் என்ன நல்லது செய்வது? அதை சித்ராவே செய்வதாகச் சொல்கிறாள். பதிலுக்கு உன்னைக் கொன்றுவிட வேண்டும். இது ஒன்றுதான் நிபந்தனை’.

அவன் சிரித்துக்கொண்டே சொன்னாலும், வினோத்தால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் நகர்ந்து சென்று கொல்லைப்புறத்தில் அதே துணிக்கல் அருகே அமர்ந்துகொண்டான்.

‘ஏன் அப்படி நேரடியாகச் சொன்னாய்?’ என்று நான் வினய்யிடம் கேட்டேன்.

‘அவனுக்கேதான் அம்மா சொன்னதாகச் சொன்னாயே?’

‘அது வேறு. நீ சொல்லும்போது அவனுக்குச் சங்கடமாக இருக்காதா?’

‘அதனால் என்ன? நான் நடக்காத ஒன்றைச் சொல்லவில்லையே?’

‘ஆனால் நடக்கக்கூடாத ஒன்றல்லவா?’

வினய் என் தோளைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தான். பிறகு தனது தாடிக்குள் விரல்களை விட்டு நீவிவிட்டுக்கொண்டான். அடர்ந்து சடை படிந்து இடுப்புவரை தொங்கிக்கொண்டிருந்த தலைமுடியை ஒருமுறை படீரென அடித்து சிக்கெடுப்பது போலச் செய்துகொண்டு, ‘விமல், என் ஓட்டம் ஒரு கொலையில்தான் தொடங்கியது. அதைத் தெரிந்துகொண்டதனால்தான் இன்னொரு கொலையோடு அவ்வோட்டத்தை முடித்துவைக்கத் தன்னால் முடியும் என்று அவள் சொல்கிறாள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள். வாழ்வு தராத எந்த ஒரு லாபத்தையும் மரணம் தராது. அது இயற்கையானதாக இருந்தாலும் சரி, வலிந்து திணிக்கப்பட்டதானாலும் சரி’.

‘மரணம் விடுதலையைக்கூடத் தராது என்று எண்ணுகிறாயா?’

‘நிச்சயமாக. அப்படியொரு விடுதலை வாய்த்திருந்தால் அந்தப் பைத்தியக்காரி ஏன் இன்னும் பேயாக அலைந்துகொண்டிருக்க வேண்டும்? அதுவும் தன் எதிரி என்று நினைப்பவனை அடித்துக் கொல்லக்கூட வக்கற்ற கோழைப் பேய்’.

‘அதுதான் எனக்கும் புரியவில்லை. பேய்கள் கொலை செய்யாதா?’

அவன் சிரித்தான். ஆனால் பதில் சொல்லவில்லை. பத்மா மாமி அம்மாவைப் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். கேசவன் மாமா அவளை வாசல்வரை கொண்டு விட்டுவிட்டுத் திரும்ப உள்ளே வந்தார். ‘இன்னொரு காப்பி சாப்பிடறேளாடா?’ என்று கேட்டார்.

‘வேண்டாம் மாமா. வெளியூர்ல யாருக்காவது சொல்லணும்னா சொல்லி அனுப்பிடுங்கோ. நாளைக்கு ராத்திரி அம்மா போயிடுவா’ என்று வினய் சொன்னான். மாமா மிரட்சியுடன் அவனைப் பார்த்தார்.

‘என்ன?’

‘செய்தியாட்டமா சொல்றியேடா!’

‘உள்ளதுதானே?’

‘அவ்ளோ தெரியுமா உனக்கு? சாவு தெரிஞ்சுட்டா மனுஷனுக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் இல்லேம்பாளேடா!’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. பதட்டப்படாதிங்கோ. இது எனக்குத் தெரிஞ்சதில்லை. அண்ணா சொன்னதா அவந்தான் சொன்னான்’ என்று கொல்லைப்புறம் கைகாட்டினான். வினோத் எழுந்து உள்ளே வந்தான். மாமா மீண்டும் ஒருமுறை அவனிடம் அதைக் கேட்டார். உண்மையிலேயே அவள் நாளை மாலை இறந்துவிடுவாளா?

‘அப்படித்தான் அண்ணா சொன்னான். ஆனா சாயங்காலமில்லே. ராத்திரி ஆயிடும்’.

‘இதைப்போய் நான் யார்ட்ட சொல்லுவேன்?’ என்று மாமா கவலைப்படத் தொடங்கினார்.

‘எதுக்கு சொல்லணும்? நடந்தப்பறம் சொல்லிக்கலாம்’ என்று நான் சொன்னேன். ஆனால், வினய் ஏன் வேண்டியவர்களுக்கு அறிவிக்கலாம் என்று சொன்னான் என்பது எனக்குப் புரிந்தது. அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் இப்போது எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியாது. உறவு என்று சொல்லிக்கொள்ள அவள் மட்டும்தான் தனக்கு மிச்சம் என்று அப்பா சிறு வயதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவைப் பற்றிய தகவல் ஏதேனும் ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியிருக்கும்.

ஆனால் மாமா கோயிலுக்குச் சொல்லிவிட்டு அக்கம்பக்கத்து வீட்டாருக்கு மட்டும் தெரியப்படுத்தினால் போதும் என்றுதான் சொன்னார். ‘பழைய மனுஷா யாரும் இப்ப மிச்சமில்லே. நான் ஒருத்தன்தான் பாக்கி’ என்றார்.

‘உங்கக்கா பையன் யாரோ அமெரிக்காவிலே இருக்கான்னு சொன்னேளே’.

‘இருக்கான். ஆனா எங்க இருக்கான்னு யாருக்குத் தெரியும்? அவனுக்கு உங்க எல்லாரவிட வயசு ஜாஸ்தி. அவனும் இருக்கானோ இல்லியோ?’

‘அவர் பெயர் என்ன?’ என்று வினய் கேட்டான்.

மாமா ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘சாரங்கபாணி’ என்று சொன்னார்.

‘எல்லாம் சரி மாமா. எங்க நாலு பேருக்கு மட்டும் அம்மா ஏன் இப்படி ஒரே மாதிரியா பேர் வெச்சா?’ என்று வினோத் கேட்டான்.

‘அதுல ஒண்ணுமே நம்மளவா பேர் இல்லே. அதை கவனிச்சியா?’

நம்மளவாளா! எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஏண்டா சிரிக்கறே?’

‘ஒண்ணுமில்லே. சொல்லுங்கோ’.

‘ஜாதி இல்லேம்பே. நான் எல்லாத்தையும் அறுத்துட்டேன்; பிராமணனே இல்லேம்பே. அதானே?’

‘அவனை விடுங்கோ. அவன் மனுஷனே இல்லே. நீங்க சொல்லுங்கோ’ என்று வினய் சொன்னான்.

‘எது இல்லேன்னு நீ சொன்னாலும் உம்பேச்சு அப்படியேதான் இருக்கு பார்’. ஒரு வெற்றியடைந்த விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் மாமா குதூகலித்தார். நாங்கள் மூவருமே புன்னகை செய்தோம். எழுபத்தொன்பது வயதில் குழந்தையாக இருப்பது ஒரு கொடுப்பினை. மாமாவுக்கு அது வாய்த்திருக்கிறது. அதை ஏன் கெடுக்க வேண்டும்? ஆனால் மாமா, நான் மொழியின் குழந்தை. என்னால் எல்லா மொழிகளிலும் பேச முடியும். தமிழிலேயே ஒன்பது விதமான உச்சரிப்புகளும் பிரயோகங்களும் எனக்குப் பழக்கம்.

அம்மா அந்நாள்களில் நடிகர் விஜயகுமாரின் ரசிகை என்று மாமா சொன்னார். இதனை நாங்கள் ஏற்கெனவே அறிவோம். அண்ணாவுக்கு விஜய் என்று பெயர் வைத்ததால்தான் அடுத்தடுத்துப் பிறந்தவர்களுக்கு அதே முதலெழுத்தில் தொடங்கும் பெயர்களாகத் தேடி வைத்ததாக அம்மா அவரிடம் சொல்லியிருக்கிறாள்.

‘அதெப்படி மாமா முடியும்? பெரியவா யாரும் ஒத்துண்டிருக்க மாட்டாளே? முக்கியமா அப்பாவே ஒத்துண்டிருக்க மாட்டாரே’.

மாமா சில விநாடிகள் அமைதியாக இருந்தார். அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டார். பிறகு தன்னருகே இருந்த வினோத்தின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ‘ஒரு பிரசவத்துக்குக்கூட அவ எங்காத்துக்கு வரவேயில்லே’ என்று சொன்னார்.

‘குழந்தை பிறக்கும். பொறந்ததும் ஒரு கடுதாசி வரும். இன்ன பேர் வெச்சிருக்கோம்னு அதுல எழுதியிருப்பா. அவ்ளோதான்’.

‘நீங்க போய்ப் பார்த்ததில்லியா?’

‘இருக்கற இடம் தெரிஞ்சாத்தானே? கடுதாசி எங்கெங்கேருந்தோ வரும். விஜய் பொறந்தப்போ கர்நூல்லேருந்து கடுதாசி வந்தது. வினய் பொறந்தத பம்பாய்லேருந்து எழுதியிருந்தா. நீ பொறந்த சேதிய ஆறு மாசம் கழிச்சித்தான் சொன்னா. இவனும் பொறந்திருக்கான்னு அவ இந்த ஊருக்கு வந்தபோதுதான் தெரியும்’.

எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அம்மா மிகவும் திட்டமிட்டுச் சில வேலைகள் செய்திருப்பதாகத் தோன்றியது. அத்தனை நுண்ணுணர்வும் பாதுகாப்புணர்வும் அவளுக்கு இருந்திருக்கிறதா என்று வியப்பாக இருந்தது.

‘சொன்னா சிரிப்பேள். அந்த காலத்துல உங்கப்பா எதோ கள்ளக்கடத்தல் பிசினஸ் பண்றார்னு நான் நினைச்சுப்பேன். என்னன்னு சொல்ல முடியாம உங்கம்மா தவிச்சிண்டிருக்காளோன்னு நினைப்பேன். ஐயோ தப்பான ஒருத்தர்ட்ட மாட்டிண்டுட்டாளேன்னு எவ்ளோ நாள் அழுதிருக்கேன் தெரியுமா?’

வினய் அவரை அப்படியே கட்டியணைத்துத் தட்டிக் கொடுத்தான்.

‘ஆனா அதெல்லாம் இல்லே. உங்கப்பா உத்தமர். அவர் ஆண்டவன் ஆசிரமத்துல உத்தியோகம் பார்த்திருக்கார். பகவான் அனுக்கிரகத்தவிட ஆசார்ய அனுக்ரஹம் பெரிசு. அது அவருக்கு நிறையவே கிடைச்சிருக்கு’.

‘ஆனா இங்க வந்தப்பறம் நீங்க கேட்டிருக்கலாமே மாமா? ஏன் அப்படி ஊர் ஊரா போய் பிள்ளை பெத்துக்கணும்?’

‘கேக்காம இருப்பேனா?’

‘என்ன சொன்னா?’

‘உங்கப்பாக்கு அப்ப நிரந்தர உத்தியோகம் இல்லேடா. என்னிக்கு அது இருந்திருக்கு? எப்பவும் எதோ ஒரு இடத்துல ஒட்டிண்டுதான் காலத்த ஓட்டியிருக்கார். தேசம் பூரா எங்கெங்கயோ அலைஞ்சி, என்னென்னமோ பண்ணியிருக்கார். கொஞ்சநாள் கயாவுல சிராத்தம் பண்ணி வெக்கற பிராமணனாக்கூட இருந்திருக்கார். தெரியுமா உங்களுக்கு?’ என்று மாமா கேட்டார்.

எனக்கு அம்மாவின் கற்பனை வளம் பற்றிய பிரமிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. தனது மானசீகத்தில் அவள் பிரம்மாண்டமானதொரு கோட்டைச் சுவரை எழுப்பியிருக்கிறாள். வாழ்நாள் முழுதும் அதன் கட்டுமானப் பணியை அவளே நிகழ்த்தியிருக்கிறாள். அப்பா ஒரு உத்தமர். அப்பாவுக்கு உத்தியோகம் சரியாக அமையவில்லை. அப்பா அஹோபிலத்தில் இருந்திருக்கிறார். அப்பா பம்பாயில் இருந்திருக்கிறார். அப்பா ஒரு சவுண்டி பிராமணனாக இருந்திருக்கிறார். கர்நூலில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்திருக்கிறார். எத்தனை எத்தனை கதைகள்! வாழ்ந்த காலம் முழுவதும் எது ஒன்றைக் குறித்தும் ஒரு சொல்லைக்கூட அப்பா பேசியதில்லை; வெளிப்படுத்தியதில்லை. எங்கள் நால்வருக்கு முன்னதாக ஒரு பெரும் பொய்யைப் பிள்ளையாகப் பெற்று சீராட்டி வளர்த்திருக்கிறார்கள்! எத்தனை பேரால் இது முடியும்? யாருக்கு சாத்தியம்? அந்தப் பொய்க்கு அவசியமற்றுப்போன காலத்தில் எங்களை அனுப்பிவிட்டு அழுது தீர்த்து ஓய்ந்து உட்கார்ந்தாற் போலவே, அதையும் விட்டொழித்துவிட்டுத் திருவிடந்தைக்கு வந்து தங்கிவிட்டார்கள். பெரும் சாதனைதான். சந்தேகமில்லை.

‘அப்படியாவது அவரோடு அவள் வாழ நினைத்ததன் காரணம்தான் விளங்கவேயில்லை’ என்று வினோத் சொன்னான்.

அன்போ காதலோ அவற்றை நிகர்த்த வேறெதுவுமோ இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைத்தேன்.

சட்டென்று வினய் சொன்னான், ‘பழி வாங்க நினைத்திருக்கலாம் அல்லவா? இவனைக் கொன்று பழி தீர்க்க இன்றுவரை பேயாகத் திரியும் சித்ராவைப் போல, அப்பாவை அவள் வாழ்ந்து பழி தீர்த்திருக்கலாம் அல்லவா?’

நாங்கள் பேச்சற்றுப் போனோம்.

மீண்டும் ஒருமுறை அம்மாவின் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றோம். இப்போது அவள் கண்ணைத் திறந்திருந்தாள். சிரித்தாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com