157. வடக்கிருத்தல்

அவன் ஒரு பூரண யோகி. ஆனால் தனது யோகம் முழுவதையும் அயோக்கியத்தனங்களால் மூடி மறைத்தவன். விமரிசகர்களுக்கு இடம் கொடுத்துத் தோற்கடிக்கும் கலையே அவனது யோகத்தின் உச்சம்.

வினோத் நெடுநேரம் வாசல் படியில் அமர்ந்திருந்தான். சொரிமுத்து இறங்கிச் சென்ற வழியிலேயே அவனது பார்வை நிலைத்திருந்தது. வெயில் இறங்க ஆரம்பித்து வீதியில் நடமாட்டம் ஏற்பட்டிருந்தது. அக்கம்பக்கத்து வீட்டார்கள் காரணமே இல்லாமல் வெளியே வந்து வந்து  அவனைப் பார்த்துவிட்டு உள்ளே போனார்கள். நான் வினய்யிடம் ‘நீ போய் அவன் பக்கத்தில் உட்கார்’ என்று சொன்னேன்.

‘எதற்கு?’

‘ஒரு காண்ட்ராஸ்டுக்குத்தான்’ என்று நான் சொன்னதற்கு அவன் சிரித்தான். ஆனால் மறுக்கவில்லை. வினோத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். அப்போதுதான் வினோத் கண் கலங்கியிருப்பதைக் கண்டான்.

‘என்ன ஆயிற்று உனக்கு?’ என்று வினய் கேட்டான்.

‘ஒன்றுமில்லை வினய். சொரிமுத்துவிடம் நீ பேசியதைக் கேட்டதில் இருந்து எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக உள்ளது’.

‘அப்படி என்ன சொல்லிவிட்டேன்?’

‘உனக்குப் புரியாது. நீ வெளிப்படையாக இருக்கிறாய். அடுத்தவர் அபிப்பிராயங்களை நீ பொருட்படுத்துவதில்லை. உனது சிறுமைகள் உனக்கு அவமானகரமானவையாக இல்லை. உனக்குத் தேவைகள் இல்லை. கனவுகள் இல்லை. லாட்டரிச் சீட்டுகள் உன்னை மயக்குவதில்லை. உன்னை வடிவமைத்தது அந்த சொரிமுத்துதான் என்றால் உண்மையிலேயே அவர் மிகப் பெரியவர்’.

வினய் சிரித்தான். ‘என்னை வடிவமைத்தது அவரல்ல. அவராக இருந்திருந்தால் இந்நேரம் நான் இறைவனைக் கண்டிருப்பேன்’.

‘பிறகு?’

‘விடு. இனி அவையெல்லாம் உபயோகமற்றவை’.

‘நீ அவனைக் கொல்லப்போவதில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதுதான் அவனது கண்ணீருக்குக் காரணம்’ என்று நான் சொன்னேன்.

‘தவறா?’ என்று  வினோத் கேட்டான். ‘அதுதான் விதி என்று தெரிந்த பின்பு அதை நிராகரிக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?’

‘இரண்டு மரணங்கள் என்பதுதான் விதி. இரண்டாவது நபர் நீ தான் என்று  நீ ஏன் நினைக்க வேண்டும்?’

‘அம்மா சொன்னாளே’.

‘சொரிமுத்துவும் அதைத்தான் சொன்னான். அதனால் என்ன? கொல்ல நியமிக்கப்பட்டவன் சொல்லவில்லை அல்லவா? அதோடு விடு’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு வினோத் சொன்னான், ‘அம்மா இன்னும் சற்றுப் பேசியிருக்கலாம்’.

வினய் அவனது பின் தலையில் ஓங்கி அடித்து, ‘நீ வராமல் இருந்திருக்கலாம்’ என்று சொன்னான்.

நான் அவனை சமாதானப்படுத்தினேன். ‘கோபப்படாதே. அவனுக்குப் பழைய குற்ற உணர்வு இன்னமும் மிச்சம் உள்ளது’ என்று சொன்னேன்.

‘இல்லை’ என்று வினோத் உடனே மறுத்தான். ‘நான் அப்படிப்பட்டவன் அல்ல. கிருஷ்ணனைத் தவிர எனக்கு வேறு நினைப்பு கிடையாது. அவனது திருவடித் தாமரைகளைத் தவிர என் புத்தியில் இன்னொன்றில்லை. எப்போதும் ஒரு காளிங்கனாக என் சிரசில் நான் அவன் பாதங்களை ஏந்திக்கொண்டிருப்பவன். நான் குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டவன்’.

‘அப்படியானால் நீ ஊருக்குள் நுழைந்ததும் பத்மா மாமியைப் போய்ப் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வினய் சொன்னான்.

அவன் சில விநாடிகள் வினய்யை உற்றுப் பார்த்துவிட்டு, ‘ஆம். அவசியமில்லைதான். ஒரு நப்பாசை. அவள் கரங்களால் எனக்கு மோட்சம் சித்திக்குமோ என்று’.

வினய் சிரித்தான். ‘ஒரு சன்னியாசி, மோட்சம் உள்பட எதற்கும் ஆசைப்படுதல் தகாது என்று சொரிமுத்து சொல்வார்’.

‘ஆம். பலனைக் கிருஷ்ணனிடம் விட்டு விடுதல். அது முடிந்துவிட்டால் நான் கிருஷ்ணன் ஆகிவிடுவேனே?’

‘கிருஷ்ணன் ஆவது அத்தனை சுலபமில்லை வினோத். அவன் ஒரு பூரண யோகி. ஆனால் தனது யோகம் முழுவதையும் அயோக்கியத்தனங்களால் மூடி மறைத்தவன். அவனைப் பக்கம் பக்கமாக விமரிசிக்க முடியும். விமரிசகர்களுக்கு இடம் கொடுத்துத் தோற்கடிக்கும் கலையே அவனது யோகத்தின் உச்சம்’ என்று வினய் சொன்னான்.

நான் சட்டென்று கேட்டேன், ‘இவ்வளவு தெரிந்து நீ ஏன் கிருஷ்ணனை தியானம் செய்யச் சென்றாய்?’

வினய் புன்னகை செய்தான். ‘நான் யோகியல்ல. சித்தனல்ல. ஞானமடைந்தவனா என்றால் அதுவுமல்ல. என்னால் பிரம்மச்சரிய விரதத்தைக்கூடக் காக்க முடிந்ததில்லை. திருமணமாகாதவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு தகுதியுமல்ல. வாழ்நாளில் பெரும் பகுதியைச் சிறு தெய்வங்களைத் தொழுது கழித்தவன் நான். அவை எனக்கு உதவவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு அது போதவில்லை. நான் கிருஷ்ணனைப் பரிசோதிக்க விரும்பினேன். என் பிரார்த்தனைக்கு அவன் வந்திருந்தால் அவன் தோற்றிருப்பான். சித்ராவை அனுப்பிக் கெடுத்தான் பார், அதைத்தான் சொன்னேன் அவன் ஒரு அயோக்கியன் என்று. என் தவத்தின் தோல்வியில் அவனது நிரந்தர வெற்றியின் நிழலை நான் கண்டேன். சரியாகச் சொல்லுவதென்றால், இத்தனை ஆண்டுக்காலமாக இவன் அறிய விரும்பிய கிருஷ்ணனை ஒரே நாளில் நான் அறிந்துகொண்டேன்’.

வினோத் சட்டென்று அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தான்.

‘சரி நாம் உள்ளே போய்விடலாம்’ என்று நான் சொன்னேன். வீதியில் ஏழெட்டுப் பேர் எங்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் எழுந்ததும் சட்டென்று யாரோ ஒரு மாமா எங்களை நோக்கி விரைந்து வந்தார். அவர் விசாரிக்கத் தொடங்குவார் என்று என் உள்ளுணர்வு சொன்னது. உடனே நான் அவர்கள் இருவரின் முதுகிலும் தட்டி அவசரப்படுத்திவிட்டு உள்ளே போனேன். அவர்கள் எழுந்து உள்ளே வந்து கதவை மூடினார்கள்.

‘இது மிகவும் சிரமம். இவர்களிடம் மாட்டிக்கொண்டால் நம்மால் தப்பிக்கவே முடியாது’ என்று வினோத் சொன்னான்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை. என்ன கேட்டாலும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிடு. சில நிமிடங்களில் எரிச்சலாகிப் போய்விடுவார்கள்’ என்று நான் சொன்னேன்.

‘அதையே நான் தவிர்க்க விரும்புகிறேன். எனது பழைய அடையாளங்களின் எச்சங்களை இந்தப் பயணத்துடன் நான் முற்றிலுமாகக் கழுவிக் கரைத்துவிட விரும்புகிறேன். உள்ளவை தாண்டி எந்தக் கூடுதல் சொற்களையும் சேகரித்து வைக்க  என்னிடம் காலி இடம் இல்லை’.

‘நல்லது. ஆனால் இது தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள். இன்று தப்பிக்கலாம். நாளை நிறையப் பேர் இங்கே வரத்தான் செய்வார்கள்’.

இருட்டிய பின்பு நாங்கள் கோயிலுக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். மாமாவிடம் சொன்னபோது, ‘நானும் வரேனே?’ என்றார்.

‘தாராளமாக வாருங்கள். ஆனால் யாரையும் நிறுத்தி அறிமுகப்படுத்தாதீர்கள்’.

‘அடப்போடா. உங்க வேஷத்த பாத்தாலே எல்லாருக்கும் தெரிஞ்சிடும்’ என்று மாமா சொன்னார்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை மாமா. உங்கள் வேட்டி சட்டைகள் இருந்தால் கொடுங்கள். நாங்கள் அதை அணிந்துகொள்கிறோம்’ என்று நான் சொன்னேன்.

மாமா சிறிது வியப்புற்றார். ‘முடியுமா? பண்ணுவேளா?’ என்று கேட்டார். வினோத் சிறிது தயங்கி, ‘எனக்கு வேண்டாம்’ என்று சொன்னான். அவர் என்னைப் பார்த்தார்.

‘நான் பேண்ட் சூட் கூடப் போடுவேன்’ என்று சொன்னேன்.

‘சரி நீ பேண்ட் சூட்டில் வா. இவன் காவியிலேயே இருக்கட்டும். நான் வெறும் கோவணாண்டியாக வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘கொன்னுடுவேன். நீங்க ஒருத்தரும் கோயில் பக்கம் வரப்படாது’ என்று மாமா சொன்னார். நான் சிரித்தபடி அவரை சமாதானப்படுத்தினேன்.

‘நித்ய கல்யாணப் பெருமாளைப் பார்த்து வெகுநாள் ஆகிறது. பத்மா மாமி கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு அவனிடம் பதில் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். அதற்காகத்தான் கோயிலுக்குப் போகலாம் என்றேன்’ என்று சொன்னேன்.

‘என்ன கேட்டா மாமி?’

‘உலகம் முழுவதிலும் இருந்து இங்கே வந்து வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு அவன் திருமணம் செய்துவைக்கிறான். இந்த மண்ணில் பிறந்த சித்ராவுக்கு மட்டும் ஏன் துரோகம் செய்தான் என்று கேட்டாள்’.

மாமா சிறிது யோசித்தார். பிறகு பெருமூச்சு விட்டார். ‘பாவம்தான்’ என்று சொன்னார்.

அரை மணியில் நாங்கள் மூவரும் குளித்து வேறு உடை அணிந்து தயாராகிவிட்டோம். மாமாவும் பளிச்சென்று திருமண் ஶ்ரீசூர்ணம் அணிந்து எங்களோடு புறப்பட்டார். ‘நாளைக்கு ஒருநாள். அதுக்கப்பறம் எங்கேருந்து கோயிலுக்குப் போறது? அது ஆயிடுமே பதிமூணு நாள்?’ என்று சொன்னார்.

ஆனால் நாளை அம்மா போய்விடுவாள் என்பதை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நான் மீண்டும் அவரிடம் ஒருமுறை நினைவுபடுத்தினேன். அவர் அதற்கு சம்மதித்தார். வாசல் கதவை வெறுமனே மூடிவிட்டு அவர் படியிறங்கி வந்தார். நாங்கள் கோயிலுக்குப் போனபோது, பத்மா மாமி கோயில் வாசலில் அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும், ‘நீங்க சாயந்தரத்துல வரமாட்டேளே?’ என்று மாமா கேட்டார்.

‘என்னமோ தோணித்து, இன்னிக்கி வந்துட்டேன்’ என்று மாமி சொன்னாள்.

நான் வினோத்தைப் பார்த்தேன். அவனுக்குப் புரிந்தது. அம்மாவை முந்திக்கொள்ள மாமி விரும்பிவிட்டாளா என்ன?

‘நீங்கள்  உள்ளே போங்கள். நான் வருகிறேன்’ என்று அவன் கேசவன் மாமாவிடம் சொன்னான். நான் வினய்க்குக் கண்ணைக் காட்டினேன். ஏன் என்றெல்லாம் கேளாமல் அவன் மாமாவை அரவணைத்தபடி கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். நானும் பின்னால் போனேன். வினோத் மட்டும் பத்மா மாமியின் அருகே அமர்ந்தான். ‘எப்போ?’ என்று கேட்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com