158. பூரணி

உதகமண்டலத்தில் ரன்னிமேடு என்று ஓர் இடம் உண்டு. உலகின் மிக அழகான ரயில்வே ஸ்டேஷன் அந்த ஊரில் இருப்பதுதான் என்று எனக்குத் தோன்றும். ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன் தரை மட்டத்திலேயே இருக்கும்.

நான் தாயார் சன்னிதியில் இருந்தேன். தனியாகத்தான் இருந்தேன். ‘நீங்கள் நிதானமாக சேவித்துவிட்டு வாருங்கள், ஒன்றும் அவசரமில்லை’ என்று வினய்யிடம் சொல்லி அனுப்பியிருந்தேன்.

‘ஏன் நீ பெருமாள் சன்னிதிக்குக்கூட வரமாட்டியா? அவ்ளோ பெரிய நாஸ்திகனா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘சேச்சே. அப்படியெல்லாம் இல்லை மாமா. பெருமாளைவிட தாயார் உசத்தி அல்லவா? நான் தாயார் சன்னிதியில் இருக்கிறேன், வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்து தனியே அமர்ந்தேன். உண்மையில் அந்தத் தனிமையை அப்போது மிகவும் விரும்பினேன். நீ வந்திருக்கவே வேண்டாம் என்று வினோத்துக்கு சொன்னது அவனைக் காட்டிலும் எனக்குத்தான் மிகவும் பொருந்தும் என்று தோன்றியது. ஒருவேளை மூவருக்குமே அது பொருத்தம்தானோ என்னவோ?

அண்ணா கில்லாடி என்று நினைத்துக்கொண்டேன். முன் தேதியிட்டு மரண அறிவிப்பு கிடைத்தவன் தனது பயணத்தைத் தெளிவாகத் திட்டமிட முடிகிறது. இப்படிப் புதைந்த புராதன முகங்களுக்கும் உறவுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு படும் அவதி அவனுக்கில்லை. அவனிடம் அம்மாவின் சில கூறுகள் இருக்கின்றன. எத்தனை சிறந்த அழுத்தக்காரன்! ‘அமுக்கராங்கிழங்கு’ என்று அம்மா சொல்லுவாள். அது அவன் தான். சந்தேகமேயில்லை. அவனுக்கு எல்லாம் தெரியும் என்று வினய்யும் வினோத்தும் மாறி மாறிச் சொன்னபோதெல்லாம் நான் நம்பவில்லை. அவன் ஒரு யோகியாகியிருக்கலாம். காற்றில் பறக்கலாம். நெருப்பில் கிடக்கலாம். சித்துகள் செய்யலாம். அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. விதித்திருந்தால் அதெல்லாம் நிகழத்தான் செய்யும். ஆனால் மனத்தைச் சுமையின்றி வைத்திருப்பான் என்று தோன்றவில்லை. வினய்யையும் வினோத்தையும் நேரில் சந்தித்தது, அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தும் என்னைத் தவிர்த்தது, ஆனால் தான் சொல்ல விரும்பிய தகவல்களை எனக்குத் தெரியப்படுத்தியது எல்லாமே அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மிச்சத்தின் வாசனையாகத்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

தவறில்லைதான். ஒரு துறவிக்கு இதெல்லாம் பொருந்தாது என்று நான் எப்படிச் சொல்வேன்? எதையுமே துறக்காதிருக்கத் துறவறம் கொண்டவனல்லவா நான்? ஆனால் ஒரு குற்ற உணர்ச்சி ஈயைப் போல உள்ளே பறந்துகொண்டிருப்பது அபாயம். என் குருவிடம் நான் பயின்றது அதுதான். குற்ற உணர்வற்று இருப்பதே துறவு. ஒரு குழந்தையிடம் அதனைக் காணலாம். கடவுளிடமும் அது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகப்பெரிய மாய யதார்த்தத்திடம் அதுகூடவா இருக்காது?

அண்ணாவுக்கு அப்படியொரு குற்ற உணர்வு தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் இத்தனை ஒளிந்து வாழ வேண்டிய அவசியமில்லை. வினய்யோ, வினோத்தோ இதைச் சொன்னால் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு யோகி காட்டில் திரியாமல் வேறெங்கே அலைவான் என்று கேட்பார்கள். எனக்கென்னவோ அவன் எந்தளவுக்கு யோகியோ, அதே அளவுக்குத் திருடனும்கூட என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றியது. என்னை அவன் தொடர்ந்து தவிர்த்து வந்ததன் காரணமாக இப்படித் தோன்றுகிறதா என்றும் எனக்குள்ளே கேட்டுக்கொண்டு பார்த்தேன். ம்ஹும். அதுவல்ல காரணம். என்னை யாரும் தவிர்ப்பது அத்தனை சுலபமல்ல. சந்திப்பு ஒரு பொருட்டா? உன் நினைவில் என் நிழலாடினால் முடிந்தது சங்கதி.

என் கேள்வியெல்லாம் விட்டுச் சென்றவனுக்கு எதற்குக் கரிசனம் என்பதுதான். பத்து காசுக்குப் பெறாத கரிசனம். வழி நடத்தத் தெரியாதவன் அல்லது வழி நடத்த விரும்பாதவன் யாரையும் வீதிக்கு அழைக்கக் கூடாது. வினய் விஷயத்தில் அண்ணா நடந்துகொண்டதை என்னால் அப்படித்தான் பார்க்க முடிந்தது. நான்கு பேரில் கடைசியாக சன்னியாசி ஆனவன் வினோத்தான் என்றாலும் அவனது பக்தியில்தான் எத்தனை தீவிரம்! எவ்வளவு உக்கிரமான நம்பிக்கை! ஆனால் இறக்கும்வரை அவன் கிருஷ்ணனைக் காணப் போவதில்லை என்பதை அண்ணா அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் சொல்லலாம். இப்போதேகூட விறுவிறுவென்று நடந்து சென்று அவனை எழுப்பி நிறுத்திச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். அது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால் அவனது மதிப்புக்குரிய ஒரு நபரிடம் இருந்து அந்த உண்மை வெளிப்பட்டிருந்தால், இந்நேரம் அவன் வாழ்வு வேறாகியிருந்திருக்கும் அல்லவா?

எனக்குச் சில நிஜமான சித்தர்களைத் தெரியும். அவர்கள் மீது எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அந்த மரியாதை அவர்களுடைய வெளிப்படைத்தன்மையால் உருவானது. உதகமண்டலத்தில் ரன்னிமேடு என்று ஓர் இடம் உண்டு. உலகின் மிக அழகான ரயில்வே ஸ்டேஷன் அந்த ஊரில் இருப்பதுதான் என்று எனக்குத் தோன்றும். ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன் தரை மட்டத்திலேயே இருக்கும். மலைத் தடத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டும் சிமெண்டு போட்டுப் பூசியது போல. அந்த ஸ்டேஷனைத் தாண்டியதுமே ஒரு சிற்றோடை செல்லும். ரயில் கடக்காத கணங்களில் அந்த ஓடை தண்டவாளத்தைக் கடந்து செல்லும். பளிங்கென்றால் முழுப் பளிங்கு நீர். சந்தன நிறத்தில் கூழாங்கற்கள் ஜொலிக்கும் அதன் அடியாழத்தைக் கைவிட்டுத் தொட்டுப் பார்க்க முடியும். மிகச் சிறிய ஓடைதான். ஆனால் அத்தனை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

முதல் முதலில் ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி ரயில் புறப்பட்டபோது அந்த ஓடை கண்ணில் பட்டு நான் சட்டென்று ரயிலை விட்டுக் குதித்தது நினைவுக்கு வந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? பேரழகு என்பது இந்த இடம்தான் என்று நினைத்தேன். அன்று முழுவதும் அந்த சிற்றோடையின் கரையிலேயேதான் அமர்ந்திருந்தேன். இருட்டும் நேரத்தில் அழுக்கு வேட்டியும் பரட்டைத் தலையும் தாடி மீசையுமாக ஒரு முதியவர் அங்கே வந்தார். ஓடைக்கு மறு பக்கம் எனக்கு நேரே அமர்ந்துகொண்டார். இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு என்னைப் பார்த்து, பசிக்கிறதா என்று கேட்டார். நான் நண்பகல் முதல் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன். எங்கும் எழுந்து செல்லவில்லை. பசிக்காமல் என்ன செய்யும்? புன்னகை செய்தேன். அவர் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து என்னைச் சாப்பிடச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கித் தின்றேன். நான் உண்டு முடிக்கும்வரை அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், சாப்பிட்டுவிட்டு நான் நீர் அருந்தியதும், ‘நான் உனக்குப் பழமும் தரவில்லை, நீ அதை உண்ணவும் இல்லை’ என்று சொன்னார்.

சரி இருந்துவிட்டுப் போகட்டுமே, அதனால் என்ன என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘பசி போய்விட்டதல்லவா?’ என்று கேட்டார்.

‘ஆம். இப்போது பசி இல்லை’.

‘ஏன் இல்லை?’

‘ஏனென்றால் நான் பழம் சாப்பிட்டிருக்கிறேன்’.

‘நாந்தான் உனக்குப் பழமே தரவில்லையே?’

நான் மீண்டும் சிரித்தேன். ‘சரி இப்போது உணர்வாய்’ என்று அவர் சொன்னார். மறுகணம் எனக்குப் பழம் தின்ற உணர்வே இல்லாது போனது. பசி தெரிந்தது. சிறிது ஆச்சரியமாக இருந்தது. நான் அவருக்கு வணக்கம் சொன்னேன்.

‘இன்று உனக்கு இந்தப் பாடத்தை நடத்த எனக்குக் கட்டளை. அவ்வளவுதான். புரிந்ததா?’ என்று கேட்டார்.

‘ஓ, புரிந்தது. பசி என்பது மூளை செய்யும் சிறு சண்டித்தனம்’ என்று சொன்னேன்.

அவர் புன்னகை செய்தார். ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மீண்டும் ஓரிரு முறை நான் அவரை அதே ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷனை அடுத்த ஓடைக் கரையில் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை அவர் தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. நானே நடந்த சம்பவத்தைச் சொல்லி அவருக்கு நினைவூட்டியபோதுகூட, ‘அப்படியா?’ என்றுதான் கேட்டார். புதிய புதிய மாணவர்களையும் வேறு வேறு பாடங்களையும் அவரது விதி அவருக்கு அளித்துக்கொண்டேதான் இருக்கும். இது எனக்குப் புரிந்தது. இதையும் அவரிடம் சொன்னபோது, ‘இருக்கலாம், தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பொள்ளாச்சிக்கு அருகே கோடி சாமியார் என்று ஒருவர் இருந்தார். அவரிடமும் நான் இந்தத் தன்மையை கவனித்திருக்கிறேன். முதல் முறை சந்திக்கச் சென்றபோது, தினமும் சந்திக்கும் நபரைப் போல என் பெயரைச் சொல்லி அருகே அழைத்தார். அப்போது எனக்கு மிகவும் இளம் வயது. திகைப்பில் இருந்து நான் வெளி வருவதற்குள் அவர் எதற்காக அழைத்தாரோ அதைச் செய்து முடித்துவிட்டிருந்தார் போல. அவரது பார்வை அடுத்த நபரின் பக்கம் திரும்பிவிட்டது. மறுமுறை நான் அவரைக் காணச் சென்றபோது என் பக்கமே அவர் திரும்பவில்லை. பெரிய வருத்தமில்லை என்றாலும் பெயர் சொல்லி அழைக்கத் தெரிந்தவருக்கு அடையாளம்கூடவா தெரியாமல் போயிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

காரணம் உதிக்கும்போது நினைத்து காரியம் முடிந்ததும் மறந்துவிடுகிற அத்தகைய சித்தர்களை நினைத்துப் பார்த்தேன். அண்ணாவால் ஏன் அப்படி இருக்க முடியாது போயிற்று? ஒரு கழுதையைப் போல எங்கள் நினைவை அவன் காலம் முழுதும் சுமந்து திரிவதாகத் தோன்றியது. அவசியமே இல்லாதது. வங்காளத்தில் அவன் வினோத்தைச் சந்தித்திருக்கவே வேண்டாம். வாரணாசியில், கங்கைக் கரையில் வினய்யைச் சந்தித்ததும் அபத்தம் என்றுதான் தோன்றியது. இதோ, அம்மாவின் மரணம் நெருங்கியிருக்கிறது. ஒரு பூரணமான வாழ்வை நிகழ்த்தி முடித்துவிட்டு நிம்மதியாக உறங்கப் போகிறாள். பூடகங்கள் இருந்தாலும் பூரணம்தான். தன்னளவில் அவள் அந்த பூரணத்தின் நாயகியாகத்தான் வாழ்ந்து முடித்திருக்கிறாள். நேரில் வந்து கொள்ளி வைக்கப் போகிற பிரகஸ்பதி தன்னை ஒப்பிட்டுக்கொள்ளாமலா இருப்பான்? தனது முழுமையின் பின்னம் உணராமலா போவான்? அதைவிட, என்னை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்? நான் அவனிடம் ஒன்றுமே கேட்கப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். யாரவன்? கோடானுகோடி மனிதர்களுள் ஒருவன். அவ்வளவுதானே? பார்த்ததும் புன்னகை செய்வேன். ஹலோ சொல்வேன். எப்படி இருக்கிறாய் என்று கேட்பது அபத்தம். அர்த்தமற்றது. எப்படி இருந்தாலும் அதுதான் அவன். அதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது?

எனது நிராகரிப்பின் மூலம் அவனது அகங்காரத்தைச் சற்று சிதைத்துப் பார்க்க மிகவும் விரும்பினேன். ஒரு விதத்தில் அம்மாவின் மரணத்தைக் காரணமாகக் கொண்டு நான் அவ்வளவு தூரம் கிளம்பி வந்ததன் நோக்கமே அதுதானோ என்றும் தோன்றியது.

மிகவும் களைப்பாக உணர்ந்தேன். கிளம்பலாம் என்று எழுந்துகொண்டபோது வினய்யும் மாமாவும் தாயார் சன்னிதியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com