162. கண்ணீரின் குழந்தை

அன்புள்ள மாமா, என் அன்பின் அபரிமிதத்தைத் தாங்கும் சக்தி இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு இல்லை. அதனால் விலகிச் சென்று நிற்கிறேன்.

பொழுது விடிவதற்கு முன்பே கேசவன் மாமா எழுந்துவிட்டார். பழக்கம் போலிருக்கிறது. பரபரவென்று பாலைக் காய்ச்சி, காப்பி போட்டு வைத்துவிட்டு எங்களை வந்து எழுப்பினார். வினோத் எழுந்ததுமே, ‘வினய் எங்கே?’ என்றுதான் கேட்டான்.

‘அவன் தன் கேர்ள் ஃப்ரெண்டைப் பார்க்கப் போயிருக்கிறான். வந்துவிடுவான்’ என்று சொன்னேன். ஏழு மணிக்கு வினய் வந்தான். ஓடி வந்தவனைப்போல மூச்சு வாங்க நின்றான். சிரித்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘என்னைப் பேய்களுக்கெல்லாம் பிடிக்கிறது. இந்த ஊர் நாய்களுக்குத்தான் பிடிக்கவில்லை. பார்த்தாலே குரைத்தபடி துரத்த ஆரம்பித்துவிடுகின்றன’ என்று சொன்னான்.

‘ஓடியா வந்தாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘ஆமாம். கடற்கரைச் சாலையில் இருந்து கோயிலடி வரை மூன்று நாய்களைச் சமாளித்து வந்திருக்கிறேன்’.

‘பெரிய பராக்கிரமம்தான்’.

‘நாய் துரத்தினால் ஓடக் கூடாது’ என்று வினோத் சொன்னான்.

‘பிறகு?’

‘திரும்பி நின்று முறைத்தால் அது நகர்ந்துவிடும்’.

வினய் சிரித்தான். ‘துரத்த வேண்டும் என்று அது விரும்பும்போது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? காலை நேரத்தில் சிறிது ஓடினால் எனக்கும் நல்லதுதானே?’

மாமா எங்களுக்குக் காப்பி எடுத்துவந்து கொடுத்தார். ‘இன்னிக்குத்தானா?’ என்று மூவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டார்.

‘அப்படித்தான் அண்ணா சொன்னான்’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘சரி, பகவான் சித்தம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

நான் வினய்யிடம், ‘போன காரியம் என்னவாயிற்று?’ என்று கேட்டேன்.

‘எனக்கென்னவோ சித்ராதான் அந்த வைத்தியர் சாமியை எனக்கு மாற்றாகத் தயாரித்து வைத்திருப்பாளோ என்று சந்தேகமாக இருக்கிறது’ என்று சொன்னான்.

‘அப்படியென்றால்? நீ அவளைப் பார்த்தாயா? அதைச் சொல் முதலில்’.

‘பார்த்தேன்’.

‘என்ன சொன்னாள்?’

‘என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்டாள்’.

‘சரி’.

‘இதில் நான் முடிவெடுக்க என்ன உள்ளது? கொலை எனது தருமமல்ல என்று சொன்னேன்’.

‘அதற்கு என்ன சொன்னாள்?’

‘உன்னுடைய எந்த தருமம் உனக்கு நீ கேட்டதைச் செய்து கொடுத்திருக்கிறது; இந்த முறை நான் சொல்வதைச் செய், நீ நினைத்தது நடக்கும் என்றாள். கொஞ்சம் மிரட்டல் தொனி இருந்தது இம்முறை’.

‘அடடே? இது நன்றாக உள்ளதே. சரி நீ என்ன சொன்னாய் அதற்கு?’

வினய் பதில் சொல்வதற்குள் வினோத் அவனைத் தடுத்தான். ‘நான் அவளைச் சந்திக்க வேண்டும். உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்று கேட்டான். ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘முடியாது என்று நினைக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘ஏன்?’

‘அவள் உன்னை நேரில் சந்திக்க நினைத்திருந்தால் என்னை அணுகியிருக்க அவசியமில்லை. உன்னைத் தூக்கிப்போய் தோப்புக்குள் வைத்துப் பேசியிருக்கலாம், அல்லது ரத்தத்தை உறிஞ்சி உன்னைக் கடலில் வீசியிருக்கலாம்’.

‘பேய் அதெல்லாம் செய்யுமா?’

‘அவள் வெறும் பேயா? பெரிய தபஸ்வினி’ என்று சொல்லிவிட்டு வினய் சிரித்தான்.

‘சிரிக்காதே. எனக்கு அவளைச் சந்திக்க வேண்டும்’.

‘வேண்டாம் வினோத். உனது சன்னியாச ஆசிரமம் ஒரு ஒழுங்கான வடிவில் கட்டமைக்கப்பட்டது. நீ புனிதங்களை நம்புகிறவன். கிருஷ்ணனை நம்புகிறவன். கடமைகளைக் கொண்டாட்டமாக்கி, கொண்டாட்டங்களை மோட்சமாக்க நினைப்பவன். அவள் கண்ணீரின் குழந்தையாகப் பிறந்து, உனது கோர மரணத்தைத் தனது தியானப் பொருளாகக் கொண்டவள்’.

‘இரு. அவளால் நேரடியாக இவனைத் தீர்த்துக்கட்ட முடியாதா?’ என்று கேட்டேன்.

‘தெரியவில்லை. சொன்னானே நாமஜெபம். அது ஒரு கவசமாக இவனைச் சுற்றி நின்று அவளை நெருங்கவிடாமல் இருக்கலாம்’ என்று வினய் சொன்னான். வினோத் சட்டென்று அவன் கையைப் பிடித்து, ‘தயவுசெய்து இன்னொரு முறை நீ அதை முயற்சி செய்ய வேண்டும் வினய்’ என்று கேட்டுக்கொண்டான். வினய் புன்னகை செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.

ஒன்பது மணிக்கு மாமா எங்கள் மூவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து, தனக்கு மிகவும் பதற்றமாக இருப்பதாகச் சொன்னார். இதில் பதற என்ன உள்ளது? அம்மா நிறை வாழ்வு வாழ்ந்தவள். போகத்தானே வேண்டும்? இதை நான் நினைவூட்டியபோது ‘புரியறது. ஆனாலும் பதட்டமாத்தான் இருக்கு’ என்று சொன்னார். ‘வாத்யாருக்கு சொல்லணுமேடா. இந்த ஊர்ல அந்த மாதிரி வாத்யார் யாருமில்லியே? நாவலூர்ல ஒருத்தர் இருக்கார்னு நினைக்கறேன். ஆனா அவர் என்ன வேதம்னு சரியா தெரியலே’ என்றார்.

வினய் சிரித்தான். ‘விடுங்கோ மாமா. நான் பாத்துக்கறேன்’ என்று சொன்னான்.

‘உனக்குத் தெரியுமா?’

‘தெரியும்’.

‘என்ன தெரியும்?’

‘அனுப்பி வெக்கற மந்திரம்தானே? அதெல்லாம் சொல்லிடலாம்’.

‘சீ. நீ பிள்ளை. நீ அதெல்லாம் பண்ண முடியாது’.

‘ஏன்? கொள்ளி வெக்கப்போறவன் வேற. நான் சும்மாத்தானே இருக்கப் போறேன்? நீங்க ஆசைப்படற மந்திரத்தை நானே சொல்லி நடத்தி வெச்சிடறேன்’.

‘அதெல்லாம் தப்பு’ என்று மாமா சொன்னார்.

‘தப்பான ஒன்றை இன்னொருவரை வைத்துச் செய்வது மட்டும் சரியா?’ என்று நான் கேட்டேன்.

‘டேய் நான் அந்த அர்த்தத்துல சொல்லலேடா. இவன் சொல்லப்படாதுன்னேன்’.

வினோத் வினய்க்குக் கண் காட்டினான். போதும் என்று ஜாடை செய்தான். அதன்பின் வினய் அந்தப் பேச்சை எடுக்கவில்லை.

மாமா டெலிபோன் டைரக்டரியை எடுத்து வந்து வைத்துக்கொண்டு மயானத்தின் எண்ணைத் தேடி எடுத்துக் குறித்துக்கொண்டார். ‘என்ன அவசரம்?’ என்று கேட்டேன். ‘நாளைக்குக் கார்த்தால தேடிண்டிருக்க முடியாதே’ என்று சொன்னார். எனக்கு சிரிப்பு வந்தது. ‘விடுங்கோ. அண்ணாட்ட சொல்லி வேணும்னா ரெண்டு மூணு நாளைக்குத் தள்ளிப் போடச் சொல்லிடலாம்’ என்றேன்.

‘அப்படியெல்லாம் முடியுமான்ன?’

‘யார் கண்டா? அவன் பெரிய யோகின்னு இவா ரெண்டு பேரும் சொல்றா. பண்ணாலும் பண்ணிடுவான்’.

‘இவா ரெண்டு பேரும் சொல்றான்னா என்ன அர்த்தம்? நீ ஒத்துக்கலியோ?’

‘எனக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது மாமா’ என்று சொன்னேன்.

‘எப்போ கடேசியா பாத்தே?’

‘அவன் வீட்டை விட்டுக் கிளம்பிய தினத்துக்கு முதல் நாள் இரவு’.

‘அவனும் ஒன்னை வந்து பார்க்கவேயில்லியா?’

‘அவசியப்பட்டிருக்காது’.

‘அதைவிடு. ஒனக்கு அவனைப் பார்க்கணும்னு தோணித்தா இல்லியா?’

‘ஓ. ரொம்ப ஆசைப்பட்டேன். அவ்வளவு ஏன்? ரயிலில் வரும்போது வினய்யைப் பார்த்ததும் எப்படிப் பரவசமானேன் என்று அவனையே கேட்டுப் பாருங்கள். இங்கே வந்து இறங்கிய இடத்தில் வினோத்தைக் கண்டதும்கூட அதே பரவசம்தான்’.

‘ஆக, பாசம் இருக்கு உனக்கு!’ மாமா என்னை வளைத்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார்.

‘அதில் என்ன சந்தேகம்? நான் எதையும் வெறுத்துத் துறவியாகவில்லையே?’

‘அப்பறம்?’

அவருக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள மாமா, என் அன்பின் அபரிமிதத்தைத் தாங்கும் சக்தி இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு இல்லை. அதனால் விலகிச் சென்று நிற்கிறேன். இது உங்களுக்குப் புரியுமா?

மாமா எழுந்து அம்மாவின் அறைக்குப் போனார். வினய் அதற்குக் காத்திருந்தாற்போல வினோத்திடம், ‘நாளை அவளை எரித்த கையோடு நீ கிளம்பிவிடு’ என்று சொன்னான்.

‘அதற்குமேல் நமக்கென்ன வேலை இங்கே? கிளம்பத்தான் வேண்டும்’.

‘இல்லை. தாமதம் வேண்டாம் என்று சொன்னேன்’.

எனக்கு அவனது அச்சம் விநோதமாக இருந்தது. உறவற்றவனுக்கு இவ்வளவு அக்கறை இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் ரகசியமாக அவன் மனத்துக்குள் பாசத்தின் பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும் என்று என்னால் எண்ண முடியவில்லை. ‘அவன் உனக்காகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்’ என்று வினோத்திடம் சொன்னேன். ‘சித்ரா இன்னும் பல காலம் பேயாகவே சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவன் விரும்புகிறான்’.

இதைச் சொன்னதும், வினய் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். சட்டென்று வினோத் என் கரங்களைப் பிடித்துக்கொண்டான். ‘நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்’ என்று சொன்னான்.

‘என்ன முடிவு?’

‘அம்மா காரியம் முடிந்ததும் நான் பத்மா மாமியை என்னோடு அழைத்துச் செல்லப் போகிறேன்’.

‘எங்கே?’

‘வாரணாசிக்கு. அப்படித்தான் அவளிடம் வாக்களித்திருக்கிறேன்’.

‘ஐயோ. ஏன்?’

‘தெரியவில்லை. அது எம்பெருமான் சித்தம். என்னை அப்படிச் சொல்லவைத்தான். கோயில் வாசலில் அவள் பிராணனை விட முடிவு செய்து வந்து உட்கார்ந்தாள். அதைக் காட்டிலும், கயாவுக்குச் சென்று இறப்பது உசிதம் என்று ஆசை காட்டி அவளை எழுப்பி வீட்டுக்கு அனுப்பிவிட்டு வந்தேன்’.

‘வேண்டாத வேலை’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை வினய். எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. சித்ராவாவது இறந்தபின் பேயாக அலைகிறாள். இவள் இருக்கும்போதே பேய் அலைச்சல் அலைகிறாள். இரு அலைச்சல்களுக்கும் நான் காரணமாக இருந்தவன். இந்த உறுத்தல் என்னை விட்டு விலகினால்தான் என் கிருஷ்ணனை நான் காண்பேன்’.

‘அதனால்?’

'பத்மா மாமி இறக்கும்வரை அவளுடன்கூட நான் இருக்கப்போகிறேன். முடிந்ததை சமைத்துப் போட்டுக்கொண்டு, அவள் புடைவை துணிமணி துவைத்துப் போட்டுக்கொண்டு, தினமும் கீதை படித்துக் காட்டிக்கொண்டு..’

‘உனக்கென்ன பைத்தியமா?’ வினய்க்குக் கோபம் வந்தது.

‘இருக்கலாம் வினய்’.

‘இதை நீ வீட்டோடு இருந்து அம்மாவுக்குச் செய்திருக்கலாம்’.

‘இப்போது மட்டும் என்ன? ஆள்தான் வேறு. அவளும் அம்மாதானே?’

நான் வினய்யை அமைதிப்படுத்திவிட்டு வினோத்திடம், ‘உள்ளே போய் அம்மாவிடம் இதனைச் சொல். ரொம்ப சந்தோஷப்படுவாள்’ என்று சொன்னேன். அவன் எழுந்து அம்மாவின் அறைக்குள் சென்றான். அங்கே அம்மாவுக்குப் புடைவை மாற்றிவிட்டுக்கொண்டிருந்த மாமாவை வெளியே அனுப்பிவிட்டுக் கதவை மூடிக்கொண்டான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘என்ன, சொல்லிவிட்டாயா?’

‘ஆம். சொன்னேன்’.

‘பதில் சொன்னாளா?’

‘இல்லை’.

‘சரி பரவாயில்லை. எப்படியும் காதில் விழுந்திருக்கும். அது போதும்’ என்று சொன்னேன்.

‘விமல், நீ இதை ஆதரிக்கிறாயா?’ என்று வினய் என்னைக் கேட்டான்.

‘சந்தேகமில்லாமல்! இதிலென்ன தவறு?’

‘இது ஒரு முட்டாள்த்தனம். அவன் ஒரு சன்யாசி. அவனுக்கு இது தேவையற்ற வேலை’.

‘ஆனால் கடமை என்று நினைக்கிறானே. நீதானே சொன்னாய்? அவன் கடமைகளைக் கொண்டாட்டமாக்கிக்கொள்கிறவன் என்று? இதையும் அப்படி நினைத்துக்கொண்டால் போயிற்று’.

அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, கேசவன் மாமா வேகமாக அருகே வந்தார். ‘டேய், உங்கண்ணன இன்னும் காணமேடா?’ என்றார்.

‘வருவான் மாமா. என்ன அவசரம்?’

‘வந்துடுவானோல்யோ?’

‘வருவான்’ என்று வினோத்தும் சொன்னான்.

‘அப்ப சரி’ என்று நகர்ந்துபோனார். இன்றைய பொழுது முழுவதையும் அவர் இத்தகைய வினாக்களுடனேயே கழிப்பார் என்று தோன்றியது. அண்ணா வருவானா? வாத்தியார் கிடைப்பாரா? மயானத்தின் தொலைபேசி எண் சரியானதாக இருக்குமா? நான் சிரித்தேன். மாமா மீண்டும் ஒருமுறை அருகே வந்து, ‘ஏண்டா, எரிச்சுட்டுப் போயிடுவேளா, இல்லேன்னா சுபம் வரைக்கும் இருப்பேளா?’ என்று கேட்டார். விட்டால், வருஷாப்திகம் வரை இருந்துவிட்டுப் போகச் சொல்லுவார் என்று தோன்றியது.

அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று நான் யோசித்தேன். வினோத் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, வினய் அவனைத் தடுத்தான்.

‘மயானத்துலேருந்து நேரா போயிடுவேன் மாமா’ என்று சொன்னான்.

அவர் அதிர்ந்துவிட்டார். ‘ஏண்டா நீ?’

‘நானும்தான் மாமா’.

‘விமல் நீயாவது இருக்கமாட்டியாடா?’

‘மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னேன். அவருக்குப் பேச்சு வரவில்லை. எங்களை அப்படியே பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தார். அவர் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.

‘அம்மாடா!’ என்று சொன்னார்.

அதிலென்ன சந்தேகம்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com