121. பனிப்புயல்

ஒரு மனிதனின் ஆகப்பெரிய அவமானம் சுய இரக்கம்தான் என்று அவனுக்குத் தோன்றியது. உறவு பந்த பாசங்களில் இருந்து விடுபடுவது சுலபம்.

அவளது கால்கள் மிகவும் சொரசொரப்பாக இருந்தன. வினோத் அவளது இரண்டு கால்களையும் அழுத்திப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தபோதும் அந்தக் கால்களின் சொரசொரப்பு அவன் மூளையின் ஒரு பகுதியில் நிறைந்து குவிந்திருந்தது. அவள் குளிப்பதேயில்லை; அல்லது அவளுக்கு ஏதோ சரும வியாதி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைவில் இருந்து விடுபட சிரமமாக இருந்தது. கூடவே தனது மனத்தின் அற்ப ஞாபகங்களை எண்ணி துக்கம் பொங்கவும் செய்தது.சுய துக்கத்தின்மீதுகூட கவிய மறுக்கும் மனத்தின் பலவீனம் அவனை அவமானம் கொள்ளச் செய்தது. அதை எண்ணியும் சிறிது நேரம் குமுறிக் குமுறி அழுதான். அவன் அழுது முடிக்கும்வரை அந்தப் பெண் நகரவில்லை. அவனாக அவளது பாதங்களை விடுத்து எழும்வரை அவனை எழுப்பவும் இல்லை.

வினோத் சற்று சமாதானமாவதற்கு நெடுநேரம் பிடித்தது. அவள் மடியில் தலைவைத்துப் படுக்கலாமா என்று நினைத்தான். அப்படியே அவள் தட்டினால் தூங்கிவிடுவோம் என்று தோன்றியது. அவனுக்கே இதெல்லாம் வியப்பாகவும் இருந்தது. தனக்கு என்ன ஆகிக்கொண்டிருக்கிறது? எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இலங்கைக்குப் போகாதிருந்திருந்தால் இவ்வளவு அவஸ்தைகள் வந்திருக்காது. ஒரு மனிதனின் ஆகப்பெரிய அவமானம் சுய இரக்கம்தான் என்று அவனுக்குத் தோன்றியது. உறவு பந்த பாசங்களில் இருந்து விடுபடுவது சுலபம். சுய இரக்கத்தில் இருந்து உதறிக்கொண்டு சிறகடிப்பதுதான் தவத்தின் உச்சமாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் தன்னால் ஏன் அது முடியவில்லை?

அந்தப் பெண்ணிடம் அவன் இதனைக் கேட்டான்.

‘உனக்கு சுயத்தின் மீதான பிரக்ஞை விலகாதிருக்கிறது. அதனால்தான் அதன் மீது இரக்கம் வருகிறது. நாளை அன்பு வரும். நேசம் பிறக்கும். பாசம் உதிக்கும். உன் மனம் எண்ணும் எண்ணங்களே சரியென்று அதே மனம் தீர்ப்புச் சொல்லும். மனம் வழங்கும் தீர்ப்பைப் பொதுவாக மூளை ஏற்பதில்லை’ என்று அவள் சொன்னாள்.

யோசித்துப் பார்த்தால் அவள் சொல்வது சரிதான் என்று தோன்றியது. ‘அம்மா, நீங்கள் என்னை இரண்டு கடவுள்களில் ஒருவரை நினைத்துக்கொள்ளச் சொன்னீர்கள். என்னால் ஏன் அது முடியாமல் போனது? நான் ஏன் சித்ராவை நினைத்தேன்?’ என்று அவன் கேட்டான்.

‘கிருஷ்ணனைவிட நீ அவளை அதிகம் விரும்பியிருக்கிறாய்’.

‘இது தவறல்லவா?’

‘யார் சொன்னது? ஒரு பெண்ணின் மீது செலுத்தும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் உலகில் வேறில்லை’.

‘அது ஆன்மிகமா?’

‘அதிலென்ன சந்தேகம்? உனக்கு நான் ஒரு கதை சொல்லவா?’ என்று அவள் கேட்டாள்.

அவன் அவளை நெருங்கி பத்மாசனமிட்டு சரியாக உட்கார்ந்துகொண்டான். அவள் புன்னகை செய்தாள். பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் இமயத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த நாள்களில் ஓர் இளம் துறவியை அடிக்கடி சந்திக்கும்படி இருந்தது. அந்தத் துறவிக்கு மிஞ்சிப் போனால் முப்பது முப்பத்து இரண்டு வயதுதான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் அவர் பதினெட்டில் இருந்து இருபது வயதுக்குள்தான் தென்படுவார். தீவிரமான யோக சாதனைகளைச் செய்து தன் உடலை முற்றிலும் தன்வயப்படுத்தியிருந்தார்.  முழங்கால் வரை புதையவைக்கும் நொறுங்கு பனியில் சளைக்காமல் பத்து மைல்கள் வெறுங்காலோடு நடந்து போவார். ‘கால் வலிக்கிறது’ என்று சொல்லி, அதே பனியில் அப்படியே சாய்ந்து படுத்துக்கொள்வார். பொதுவாக அவர் மேலாடை ஏதும் அணிவதில்லை. இடுப்பில் இருக்கும் ஒரு சிறிய துண்டுதான் அவரது உடை. அந்தத் துண்டை அவர் மாற்றுவதும் கிடையாது. வழியில் தென்படும் ஆற்றிலோ ஓடையிலோ அப்படியே அவிழ்த்து அலசிக் காயவைப்பார். அது உலரும்வரை நிர்வாணமாகவே நிற்பார். தனது நிர்வாணத்தை அவர் ஒரு பொருட்டாகக் கருதவே மாட்டார்.

அப்படி ஒருநாள் அவர் அரைத் துண்டைக் காயவைத்துக்கொண்டு நிர்வாணமாக நின்றிருந்தபோதுதான் அந்தப் பெண் துறவி அந்த வழியாகக் கடந்து போக நேர்ந்தது. பார்த்த மாத்திரத்தில் தன்னெதிரே நிற்பவர் ஒரு யோகி என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அவருக்கு வணக்கம் சொன்னாள். பதிலுக்கு அந்த இளம் யோகியும் அவளுக்கு வணக்கம் சொன்னார். ‘உடுப்பின் ஈரம் உலரும்வரை நீங்கள் இதனைக் கட்டிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவள் தன்னிடம் இருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினாள். அவர் மறுக்கவில்லை. அந்தத் துண்டை வாங்கிக்கொண்டு போய் ஆற்றில் முக்கி ஈரமாக்கி எடுத்து வந்து கட்டிக்கொண்டார். அந்தப் பெண்ணுக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. இருப்பினும் அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘என்னிடம் சிறிது உலர்ந்த பழங்கள் இருக்கின்றன. வேண்டுமா?’ என்று கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். அந்தப் பெண் மீண்டும் தனது பையில் கைவிட்டு அள்ளி உலர்ந்த திராட்சைகள் ஒருபிடியை எடுத்து அவரிடம் அளித்தாள். அவர் நன்றி சொல்லி அதை வாங்கி ஒரே வாயில் போட்டு மென்று விழுங்கினார்.

‘நான் ஆந்திரத்தில் இருந்து வருகிறேன்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

‘அப்படியா?’ என்று அவர் கேட்டார்.

‘வாரணாசியில் யோகி ஒருவர் இருக்கிறார். அவர் என் குரு. என்னை ஆறு மாதங்கள் இமயத்தில் திரிந்துவிட்டு வரச் சொல்லி அனுப்பினார்’.

‘திரியுங்கள்’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

‘ஒரு வாரமாக இந்தப் பகுதியில் திரிந்துகொண்டிருக்கிறேன். நீங்கள்தான் முதல் முதலில் என் கண்ணில் பட்ட நபர். மனிதர்களையே பார்க்காதிருந்துவிட்டுப் பார்க்கும்போது ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றியது’.

அவர் மீண்டும் சிரித்தார். ‘என் குகைக்கு வரலாம்’ என்று சொல்லிவிட்டு, காய்ந்திருந்த தனது துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெண் அவர் பின்னால் போகத் தொடங்கினாள்.

அவர்கள் வெகுதூரம் நடந்து போனார்கள். மனித நடமாட்டம் அறவே இல்லாத வழித்தடங்கள் பல அந்த இளம் யோகிக்கு அங்கே தெரிந்திருந்தது. கால் புதைந்த பனியோ, வீசிய கொடூரமான பனிப்புயல் காற்றோ அவரைச் சற்றும் சலனம் கொள்ளச் செய்யவில்லை. திடீர் திடீரென்று பனிப் பாளங்கள் வழியில் பெரும் சத்தமுடன் உருண்டு வந்தபோது அவர் ஹோவென்று சிரித்தபடி சட்டென்று படுத்துக்கொள்வார். அவர் மீது மோதித் துள்ளி விழுந்து அந்தப் பாறைகள் மேலும் உருண்டு செல்லும். அவர் உடனே எழுந்து நின்று கைகொட்டிச் சிரிப்பார்.

அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது. ‘சுவாமி தங்களது குருநாதர் யார்?’ என்று அவள் கேட்டாள். இளம் துறவி இதற்கும் சிரித்துவிட்டு, ‘கபிலர்’ என்று சொன்னார். வழி முழுதும் அந்தப் பெண் தான் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவர் முகம் சுளிக்காமல் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்தார். நெடு நேரம் நடந்தபின் அவர்கள் ஒரு குகையின் வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். உள்ளே நுழையும் முன் அவர், ‘சாஜிதா..’ என்று யாரையோ அழைத்தார்.

குகைக்குள் இருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். புராதனமான காஷ்மீரத்து முஸ்லிம் பெண்களைப் போலவே அவள் பர்தா அணிந்து அதன்மீது ஒரு சால்வை போர்த்தியிருந்தாள்.

‘இவர் நமது விருந்தினர். உள்ளே வரலாம் அல்லவா?’ என்று அந்த இளம் துறவி கேட்டார்.

சாஜிதா அந்தப் பெண்ணுக்கு சலாம் இட்டு உள்ளே அழைத்துச் சென்றாள்.

அந்த குகை மிகவும் சுத்தமாக இருந்தது. தரையில் ஓரிடத்தில் கம்பளி விரிக்கப்பட்டு கவனமாக சுருக்கங்கள் நீக்கப்பட்டிருந்தன. இரண்டு மண் கலயங்களும் ஒரு மரப்பலகையும் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தன.

‘உட்காருங்கள்’ என்று அந்த இளம் துறவி சொன்னார்.

அந்தப் பெண் கம்பளியில் உட்கார்ந்ததும் சாஜிதா அந்த மரப்பலகையை எடுத்து வந்து அவளுக்கு எதிரே வைத்தாள். இளம் துறவி அதன்மீது அமர்ந்தார்.

‘தேநீர் அருந்துகிறீர்களா?’ என்று சாஜிதா கேட்டாள்.

‘ஆம் பெண்ணே. எனக்கு இப்போது சூடாக ஏதாவது தேவை. வெந்நீர் இருந்தால்கூடப் போதும்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

சாஜிதா ஒரு சிறு குமுட்டி அடுப்பை எடுத்து வைத்துப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை அதன்மீது வைத்துத் தண்ணீரை ஊற்றினாள். ஒரு சிறிய டப்பாவில் இருந்து தேயிலைத் தூளை எடுத்து அதில் போட்டுக் கொதிக்கவிட ஆரம்பித்தாள்.

‘இந்த சாஜிதா யார்?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது. அவள் ஒரு பாகிஸ்தானி. எப்படியோ இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டாள்’ என்று இளம் துறவி சொன்னார்.

‘உங்கள் மாணவியா?’

‘இல்லை’ என்று அவர் உடனே சொன்னார்.

‘அடைக்கலம் தந்திருக்கிறீர்களா?’

‘அடைக்கலமா! எவ்வளவு பெரிய சொல்! எனக்கென்ன தகுதி இருக்கிறது அதற்கு?’

‘பிறகு?’

‘அவளை கோட்லிக்கு அழைத்துச் சென்று விடமுடியுமா என்று என்னிடம் கேட்டாள். மூன்று மாதங்கள் பொறுத்தால் செய்யலாம் என்று சொன்னேன்’.

‘அதென்ன மூன்று மாதம்?’

‘எழுபத்து இரண்டு நாள் அப்பியாசம் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன்’ என்று அந்தத் துறவி சொன்னார்.

‘எனக்குப் புரியவில்லை. வழி தப்பி வந்தவள் மூன்று மாதங்கள் காத்திருந்துவிட்டு ஊர் திரும்பச் சம்மதித்தாளா? ஆச்சரியமாக இருக்கிறது’.

‘அது ஒன்றுமில்லை. அவளுக்கு எனது யோகப் பயிற்சிகளைப் பார்க்கப் பிடித்திருக்கிறது. பக்கத்தில் இருந்து கவனிப்பதை மிகவும் விரும்புகிறாள். எனக்கு அதைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லாததால் நானும் சும்மா இருந்துவிட்டேன்’.

அந்தப் பெண் வியப்பில் பேச்சற்றுப் போனாள். ‘தவறாக எண்ணாதீர்கள். யோகப் பயிற்சிகளுக்கு யாருடைய இடையூறும் வேண்டாம் என்றுதானே இத்தனைத் தொலைவு தேடி வந்தீர்கள்?’

‘ஆம். சந்தேகமில்லை’.

‘முன்பின் தெரியாத ஒரு பெண்ணை உங்களால் இடையூறாகக் கருத முடியவில்லையா?’

‘இல்லையே. அவள் என்னைத் தொந்தரவு செய்வதே இல்லை. மாறாக எனக்குத் தேநீர் தயாரித்துத் தருகிறாள். இரவுகளில் உணவு சமைத்துத் தருகிறாள். மிகவும் உதவியாக இருக்கிறாள்’.

‘இது ஒரு சொகுசு அல்லவா?’

‘ஆம். ஆனால் இது இல்லாவிட்டாலும் எனக்குப் பிரச்னை இல்லையே’ என்று சொல்லிவிட்டு அவர் சிரித்தார்.

அன்றிரவு அந்த இளம் யோகி தன் கையாலேயே அந்தப் பெண்ணுக்கு சமைத்தார். சுடச்சுட ரொட்டிகளும் மிளகாய் ஊறுகாயும் கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதாக அந்தப் பெண் சொல்லியிருந்தாள். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அன்றிரவு அங்கே பனிப்புயல் தாக்கத் தொடங்கியது. ஒரு பிரளயம் போலப் பனி பொங்கி எழுந்து சுழன்று அடித்தது. பாறைகள் உருண்டு சிதறின. வெளியே பலத்த சத்தமுடன் பனிப்பாறைகள் பிளந்து நீர் கொப்பளித்துப் பொங்கும் ஓசை கேட்டது. மரங்கள் பேயாட்டம் ஆடத் தொடங்கின. பல மரங்கள் உடைந்து விழும் ஓசை கேட்டது. இளம் யோகி அவளை அன்றிரவு அங்கேயே தங்கிவிடச் சொன்னார். சாஜிதா அவளுக்குப் படுக்கை ஏற்பாடு செய்தாள். கம்பளியின் மீது இரண்டு சாக்குப் பைகளைப் போட்டு அவளைப் படுக்கவைத்து, அவள் மீது வேறொரு சாக்குப் பையைப் போர்த்திவிட்டாள். ‘மிகவும் குளிரினால் சாக்குப் பைக்குள் படுத்துக்கொண்டு இழுத்துப் போர்த்திக்கொண்டுவிடுங்கள்’ என்று சொன்னாள்.

‘ஏனம்மா, உனக்குக் குளிராதா?’

‘பழகிவிட்டது’ என்று அவள் சொன்னாள்.

‘எத்தனைக் காலமாகப் பழகியது இது?’

‘இப்போதுதான். இவள் வந்து சேர்ந்து இருபது நாள்கள்தான் ஆகின்றன’ என்று இளம் யோகி சொன்னார்.

இரவு அந்தப் பெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. கண்காணாத பனிமலையின் சிகரங்களுள் ஒன்றில் யாரோ ஒரு யோகியின் குகைக்குள் அன்று தங்குவோம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. அந்த யோகியின் குகையில் ஒரு பெண்ணைச் சந்திப்போம் என்று மிக நிச்சயமாக அவளால் நினைக்க முடியவில்லை. அதுவும் ஒரு முஸ்லிம் பெண்.

இதனை அவள் படுத்தபடி நினைத்துக்கொண்டிருந்தபோதே சற்றுத் தள்ளிப் படுத்திருந்த இளம் யோகி சொன்னார், ‘அவள் மிகவும் அன்பானவள். அவளது அன்பின் பரிசுத்தத்துக்கு நிகராகச் சொல்ல ஒன்றுதான் உள்ளது. அது சிவம்’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com