ஆசனம் 45. வஜ்ராசனகிரியா

வஜ்ராசனத்தில் இருந்தவாறு உடலைத் திருக்கி முறுக்கி (கிரியை) செய்யக்கூடிய ஆசனம் என்பதால் வஜ்ராசனகிரியா என்றாயிற்று.

அஷ்டாங்கயோகம்

யோக நீதிக் கதைகள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகு

திலீபன், பிரபலமான ‘மல்ட்டிநேஷனல்‘ கம்பெனியின் ஜெனரல் மேனேஜர். தலைமை அலுவலம் நியூயார்க்கில் இருக்கிறது. ‘அட்மின் பிளாக்’கின் டீம் லீடர். ஆனால் எல்லோரிடமும் நண்பனைப்போல் பழகுவான். எதிரியைப்போல் கடுமையாக நடந்துகொள்வான். அதனால்தான், கம்பெனியை உலக அளவுக்கு கொடி பறக்க வைத்திருக்கிறான்.

சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களைப் பற்றி தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம் அடிக்கடி சொல்லும் வழக்கமுடையவன் திலீபன். தனது வளர்ச்சிக்குக் காரணம் அந்த வறுமைதான் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வான். உலகப் பிரசித்திபெற்ற நிறுவனங்களுக்கு ‘அட்வைசிங் கமிட்டி தலைவராக’ நியமிக்கப்பட்டதால், அடிக்கடி விமானங்களில் அயல்நாடுகளுக்கும் பறந்து கொண்டிருப்பான்.

கட்டக்காமன்பட்டி என்ற குக்கிராமத்தில், நேர்மையான விவசாயக் கூலித் தொழிலாளிக்குப் பிறந்த ஒரே மகன் திலீபன். வியர்வை ஒவ்வொன்றிலும் மகனின் எதிர்காலத்தை விதையாகச் சிந்தி விளைவித்து வளர்த்த தந்தை அவர்!
*

கம்பெனியில் வேலை பார்ப்போரை மாதம் ஒருமுறை சுற்றுலா அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தி வருகிறது அந்தக் கம்பெனி. அனைவரிடமும் அன்பாகப் பழகுவதில் வல்லவனான திலீப்தான் சுற்றுலாக்களுக்கும் டீம் லீடர். அன்று இளம்பெண்களும், இளைஞர்களும் குளிர் சாதனப் பேருந்தில் கடற்கரை நகரங்களுக்குச் சுற்றுலா போயிருந்தார்கள். புதுவையில் பகல் வரை கழிந்தது. மாலை காரைக்காலில் இருக்க வேண்டும்.

உச்சி வெயில் நேரம் -

புதுவையைத் தாண்டி கடற்கரைச் சாலையில் பேருந்து போய்க்கொண்டிருந்தது. பலத்த கடல்காற்று பேருந்தையே சாய்த்துவிடுவதுபோல் வீசிக்கொண்டிருந்தது.

கடலும் வானமும் ஒட்டுமொத்தமாய்க் கலந்துவிட்டது போன்று ஒரே நீலமாகக் காட்சியளித்தது! மேகக்கூட்டம் இல்லாததால் வானமும் கடலாகக் காட்சியளித்தது. அலைகள் இல்லாததால் கடலும் வானம்போலக் காட்சியளித்தது. கடற்கரையில் மட்டும் அலைகள். அதற்கு நேராக மட்டும் வான் மேகங்கள்!. பயணிகளுக்குத் திடீரென்று குஷி கிளம்பிவிட்டது.

டிரைவர் ஏ.சி.ய நிறுத்து. ‘லைவ்….வா’ கடல் காத்த வாங்கிட்டுப் போகலாம் என்றனர். டிரைவர், திலீபிடம் உத்தரவு கேட்டுவிட்டு ஏ.சி.யை நிறுத்தினார்.

பயணிகள், பேருந்தின் ஜன்னல்களைத் திறந்தபோது, காத்திருந்ததுபோல் கடல்காற்று உள்ளே வீசி அத்தனை பேரது முகங்களையும் ஆரத் தழுவிச் சுழன்றது.

ஆய்.. ஊய்.. என்று உற்சாகத்தில் குரல் கொடுத்தனர். கொஞ்ச நேரம் அந்தப் பனை மரத்து நிழல்ல போய் நிக்கலாமே என்று பலரும் குரல் கொடுக்கவும், அதற்கும் சம்மதித்தான் திலீபன். ஆனால், அதுவே அவனுக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

பத்துப் பதினைந்து பனைமரங்கள் நெருக்கமாக இருந்ததால், பேருந்தில் வந்தவர்கள் இறங்கி இளைப்பாற போதுமானதாக இருந்தது. பெட்ஷீட்டை விரித்ததும், ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் வந்து குவிந்தன. பெண்களும் ஆண்களும் நீ நான் என்று அவரவர் டேஸ்டுக்கு தக்கபடி எடுத்து நொறுக்கினார்கள். ‘ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்’ பாட்டில்கள் இரண்டு இரண்டு லிட்டர்களாக பூட்டுகள் உடைக்கப்பட்டன.

ஆரஞ்சு, கிரேப், கோக், லெமன், மாம்பழம் போன்ற பாட்டில்கள் பொங்கி நுரைத்து, தாகம் தீர்த்தபடி ஏப்பங்களைக் எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தன. கடற்கரைக்கும் பேருந்துக்கும் இடைப்பட்ட தூரத்தில், கானல் நீர் அலை அலையாக மிதந்துகொண்டிருந்தது.

அது கானல் நீர்தானே என்றாள் ஒருத்தி.

இல்லை இல்லை, கடல் நீர்தான் அப்படி தெரிகிறது. கடற்கரையில் கானல் நீர் தோன்றாது என்றான் ஒருவன்.

இல்லை இல்லை, அது கானல் நீர்தான் என்றாள் இன்னொருத்தி.

கடல் நீர்தான், கானல் நீர்போல உச்சி வெயிலுக்குத் தெரிகிறது என்றாள் இன்னொருத்தி.

சந்தேகமா இருந்தா போய்ப் பார்த்துட்டா போவுது என்றான் இன்னொருவன்.

அதைக் கேட்டதும் ‘பக்’கென்றது திலீபனுக்கு.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் நமக்கு எதுக்கு? பேசாம கிளம்புங்க, போகலாம். காரைக்கால்ல ரூம் போட்டிருக்கு. அங்க போய் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம் என்றான் திலீபன்.

ரெஸ்ட்தானே சார். நைட்டுல எடுத்துக்கலாம். இந்த மாதிரி ‘பிக்னிக் ஸ்பாட்’ கிடைக்காது. கடல் வரைக்கும் போய்ட்டுதான் வரலாமே. அது கானல் நீரா இல்லையான்னு தெரிஞ்சாகணும் என்றான் ஒருவன்.

அது எந்த நீரா இருந்தா நமக்கென்னப்பா. வந்த வேலைய பார்க்கலாம் வாங்க என்றான் திலீபன்.

வந்த வேலையா? நாம என்ன வேலைக்கா வந்திருக்கோம்? வேலைக்கு டாட்டா குடுத்துட்டுதானே சார் ஜாலிக்காக வந்திருக்கோம். வாங்க அங்க போகலாம் என்றாள் இன்னொருத்தி.

கடல் வரைக்குமா, ஐயோ வேண்டாம். பேசாம கிளம்புங்க என்றான் திலீபன்.

நீங்க பேசாம இருங்க திலீபன். இந்த மாதிரி இடம் கிடைக்காது. ஆள் நடமாட்டமே இல்லை. வாங்க சும்மா போய் கானல் நீரைப் பார்த்துட்டு அப்படியே காலையும் நனைச்சிட்டு வந்துடுவோம் என்றாள் ஒருத்தி.

காலை நனைப்பீங்க, அப்பறம் கைய நனைப்பீங்க. அப்படியே ஒரு குளியல் போட்டுட்டு போயிடலாம்னு சொல்வீங்க என்று சொல்லி, பேருந்தில் ஏறச் சொல்லி கையை ஆட்டினான் திலீபன்.

யாருமே பேருந்தில் ஏறத் தயாராக இல்லை.

ப்ளீஸ் ப்ளீஸ் திலீப். எங்களுக்காக இந்த பர்மிஷன் குடுங்க. நெறைய டயம் இருக்கு. கடலும் காத்தும் ஜோரா இருக்கு. வெயிலே தெரியலை. வாங்க போய்
அலைகளுக்குச் சும்மா ஒரு ‘ஹாய்’ மட்டும் சொல்லிட்டு வந்துடுவோம் என்றாள் ஒருத்தி.

இங்க இருந்தே ஹாய் சொல்லம்மா போதும் என்று சொல்லும்போதே திலீபனுக்கு பயத்தில் வியர்த்தது.

அவனது மவுனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு எல்லாரும் ஓவென்று கைகளை ஆட்டி, குதித்துக்கொண்டே கடற்கரைக்கு ஓடினார்கள்.

அருகில் இருந்த அலுவலப் பணியாளர்கள், திலீபனை சமாதானப்படுத்தினார்கள்.  போகட்டும் சார், ஒரு ஜாலிக்குதானே. அவங்களுக்குப் பிடிச்சதை விட்டுக்குடுத்தாதான், நாம கூட்டிவந்ததுக்கும் அர்த்தமாகும். இன்னொரு அரை மணி நேரம் ஆகப்போகுது, அவ்வளவுதானே. வாங்க, நாமும் கடலுக்குப் போகலாம் என்று கையைப் பிடித்து இழுத்தனர்.

ம்ஹும், அவங்க போய்ட்டு வரட்டும். அதுவரைக்கும் இங்கே வெயிட் பண்றேன் என்று அங்கேயே நின்றுகொண்டான் திலீபன்.

சார் நீங்க வந்தாதான் ‘கன்ட்ரோல்’ பண்ணமுடியும். கையோட அவங்கள கூட்டிட்டு வரவும் முடியும். இல்லேன்னா கடலுக்குள்ள இறங்கி ஆட்டம் போட ஆரம்பிச்சுடுவாங்க என்று கையைப் பிடித்து இழுத்தனர்.

அவர்கள் கையை உதறிவிட்டு, நீங்களே போய் கூட இருந்து ஜாக்கிரதையா கூட்டிட்டு வாங்க என்றான் திலீபன்.

பணியாளர்கள் யோசித்தார்கள். உம் என்று கண்டிப்போடு அவர்களை முறைத்தான். அவர்கள் கடற்கரைக்கு நடந்தார்கள். அங்கிருந்தவர்கள் அனைவரும், திலீபனை கையை ஆட்டி வாங்க சார் வாங்க என்று குரல் கொடுத்தனர்.

திலீபன் திரும்பிக்கொண்டான். சில பெண்களும் ஆண்களும் திலீபனை அழைப்பதற்கு கடல் மண்ணில் ஆடி ஆடி ஓடி வந்தார்கள்.  அவர்களைக் கண்டதும் திலீபனுக்குக் கைகால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

வந்தவர்கள், சார் நீங்களும் வந்தாதான் நல்லா இருக்கும், அலைகள் ஃபோர்ஸா இல்லை. லேசாதான் இருக்கு என்றனர்.

இருந்தா என்ன. பாத்தாச்சுல்ல, வாங்க போலாம் என்றான்.

சார் எல்லாரும் கடல்ல குளிக்கணும்னு ஆசைப்படறாங்க. இந்த மாதிரி ஆட்களே இல்லாத கடற்கரை கிடைக்கறது கஷ்டம் சார். கேர்ள்ஸும் அந்தப் பக்கம் கூச்சமில்லாம குளிக்கமுடியும் என்று கூறியபோது, கைகளை உதறிவிட்டு பேருந்துக்கு ஓடிவந்துவிடலாம் போலிருந்தது திலீபனுக்கு.

அதற்குள், மீதமிருந்த அத்தனை ஆண்களும் பெண்களும் ஓடிவந்து திலீபன் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடலுக்கு அருகில் கொண்டுபோய் நிறுத்தியபோது, ம் போதும் போதும், கிளம்புங்க கிளம்புங்க என்று கடுமையாகக் குரல் கொடுத்தான் திலீபன்.

இந்த மாதிரி கொதிக்கற வெயில்லதான் சார் கடல்ல குளிக்கணும். சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க சார். கேர்ள்ஸ் எல்லாம் அந்தப் பக்கம் போயிடுவாங்க. நாம இந்தப் பக்கம்தான் என்று சொல்லிக்கொண்டிருக்குபோதே, சில ஆண்கள் உடைகளைக் களைந்துவிட்டு ஜட்டி பனியனுடன் நின்றார்கள்.

திலீபன் எனக்கு உப்புத் தண்ணி ஒத்துக்காது என்று மறுத்தான்.

ஓ, உங்களுக்க கடல் பயமா? என்றான் ஒருவன்.

சாருக்கு அந்தப் பயத்தை போக்கிடுவோம் என்றபடி, சில ஆண்களும் பெண்களும் திலீபனை சிரித்துக்கொண்டே விரட்டினார்கள். நெருக்கமாகப் பழகும் சில இளைஞர்கள், திலீபனின் சட்டை பேண்ட்டை உருவினார்கள். திலீபனுக்கு அவமானமாகப் போய்விட்டது. குனிந்துகொண்டான்.

அவனை பார்த்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் ஆவென்று வாய் பிளந்து நின்றார்கள்! யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

என்ன சார் இப்படி? ஏன் இந்தக் கோலம்? என்னாச்சு உங்களுக்கு? என்று விசாரித்தார்கள்.

திலீபன் நண்பனின் டர்க்கியை உருவித் தனது கோவணத்தை மறைத்துக்கொண்டான். பெண்கள் எட்ட இருந்து வெட்கத்தில் சிரித்தார்கள்.
எல்லாரும் இங்க வாங்க. இதுக்காகத்தான் நான் கடல்ல குளிக்கத் தயங்கினேன். நான் கோவணம் கட்டிட்டு இருக்கற காரணத்தை இங்கேய உங்ககிட்ட சொல்லிடலாம்னு நினைக்கிறேன் என்றதும், அனைவரும் சிரித்தும் சிரிக்காமலும் வந்து ஒன்றுகூடினார்கள்.

நாம வசதியாக இருக்கறப்போ வறுமைய மறந்துடக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வேன் நினைவு இருக்கா? நான் கிராமத்துல இருந்தப்போ, முதன்முதலா பட்டணத்துல வேலை கிடைச்சிச்சு. இருக்கற காசை எல்லாம் போட்டு எங்க அப்பா எனக்காக பேன்ட் சர்ட், பனியன், துண்டு, பெட்ஷீட், போர்வை எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டாரு. ஆனா ஜட்டியை மட்டும் விட்டுட்டாரு. ஜட்டி வாங்கலியான்னு கேட்டப்ப, அப்பா முழிச்சாரு. அதுக்கு மட்டும் காசு பத்தலடான்னு கைய விரிச்சாரு. ஐயோ ஜட்டி இல்லாட்டா பேண்டே போட முடியாதேன்னு சொன்னேன். அப்போ எதையோ யோசிச்ச அப்பா திடீர்னு வீட்டுக்குள்ள ஓடினாரு.

தன்னோட வேட்டியை எடுத்துட்டு வந்து டர்ர்ர் டர்ர்ர்னு நாலா கிழிச்சுக் குடுத்தாரு. இதுதான்டா ஒரிஜினல் ஜட்டி. இதுக்கு மேலே ஜட்டி கிடையாதுடா.

உள்ளுக்குள்ள என்ன போட்டிருக்கோம்னு பார்க்கவா போறாங்க? பாதுகாப்பா இருந்தா போதாதா?ன்னு சொன்னப்ப, எனக்குக் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா அப்பாவின் பணக் கஷ்டத்தை நினைச்சிப் பார்த்தபோது, நான் மறுக்காம அதை வாங்கிக்கிட்டேன். அதைச் சுத்திக்கிட்டுதான் பேன்ட் சர்ட் போட்டுட்டு மெட்ராஸுக்கு ரயில் ஏறினேன். வந்ததும் வேலைல சேர்ந்தேன். நல்லா சம்பாதிச்சேன். எவ்வளவு சம்பாதிச்சாலும் என்னோட பழையதை மறக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். இன்னிக்கு எங்கப்பா உயிரோட இல்லை. ஆனா அவரு வழிகாட்டின உள்ளாடை எனக்கு மிகவும் உதவிகரமா இருக்கு. வசதியாவும் இருக்கு. இதை நீங்கள்லாம் பார்த்தா சிரிப்பீங்கன்னுதான் கடல்ல குளிக்க பயந்தேன் என்றபோது, அத்தனை பேர் கண்களும் கடல் நீர்போல் நிரம்பியிருந்தது.

அப்போ உங்களுக்கு கடல்னா பயம் இல்லியா என்றாள், எடக்காக ஒருத்தி.

எனக்கா, கடல் பயமா? பக்கா கிராமத்துல பொறந்தவன். ஊர்ப் பக்கம் இருக்கற எல்லா கிணத்துலயே விளையாடினவன் நான். எனக்கு எதுக்குப் பயம். இப்ப பாருங்க என்னை என்று சொல்லிவிட்டு, டர்க்கியை உருவி வீசிவிட்டுக் கடலுக்குள் பாய்ந்தான் திலீபன். யாரும் போகாத தூரத்துக்குப் போய் நீந்தி மகிழ்ந்தான்.

போதும் போதும், வாங்க போகலாம் என்று கரையில் இருந்தவர்கள் குரல் கொடுத்தார்கள். ஆழப் பகுதியிலிருந்து கடற்கரைக்கு ஏறிவந்த திலீபன், இடுப்பு அளவு நீருக்கு வந்தபோது அப்படியே நின்றுவிட்டான்!.

அதிர்ச்சியோடு தன்னைச் சுற்றி எதையோ தேடினான்.

லேட் பண்ணாம சீக்கிரமா வாங்க சார் என்று குரல் கொடுத்தார்கள்.

ப்ளீஸ், கேர்ள்ஸ் எல்லாம் திரும்பிப் பார்க்காம பஸ்ஸுக்கு போங்க. நான் பின்னால வர்றேன் என்றபோதே புரிந்துகொண்ட ஒரு பணியாளர், டர்க்கியோடு திலீபனை நெருங்கி இடுப்பில் சுற்றிவிட்டார். ஓவென்று நண்பர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

டர்க்கியோடு மேல வந்தபோது, என்னதான் பழையதை மறக்கக்கூடாதுன்னு சொன்னாலும், காலம் மாறும்போது நாமும் மாறித்தான் சார் ஆகணும் என்றாள் ஒருத்தி, கிண்டலாக!
***

ஆசனம்
வஜ்ராசனகிரியா

வஜ்ராசனத்தில் இருந்தவாறு உடலைத் திருக்கி முறுக்கி (கிரியை) செய்யக்கூடிய ஆசனம் என்பதால் வஜ்ராசனகிரியா என்றாயிற்று.

செய்முறை
மண்டியிட்டு வஜ்ராசனத்தில் உட்காரவும். கைகள் முழங்கால்களில் இருக்க வேண்டும்.

பின்னர் இரண்டு கைகளையும் வலப் பக்கமாகக் கொண்டுசென்று, உடலின் வலப் பக்கமாகத் தரையில் வைத்து நன்றாகக் குனியவும். இயன்ற அளவு ஆசனத்தில் இருந்தபடிச் சுவாசிக்கவும்.

பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நிமிர்ந்து வஜ்ராசனத்துக்கு வரவும். அடுத்த முறை அதேபோல இடப் பக்கமாகத் திரும்பிக் குனிந்து இவ்வாசனத்தைச் செய்யவும்.

பின்னர் இரண்டு கைகளையும் பின்பக்கமாக் கொண்டு சென்று தரையில் ஊன்றி நெஞ்சுப் பகுதி ஆகாயத்தைப் பார்த்திருப்பது போன்று நிமிர்த்தி வைத்துச் சுவாசிக்கவும்.

அதுபோல முன்பக்கமாகவும் குனிந்து இந்த ஆசனத்தைச் செய்யவும். நாலாதிசைகளிலும் குனிந்து செய்வது மிகவும் நல்லது.

பலன்கள்

உடலின் முக்கிய உறுப்புகள் யாவும் வயிற்றுப் பகுதியில்தான் உள்ளன. வயிற்றை இப்படி முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் திருக்கி முறுக்கி வளைத்துச் செய்யும்போது, உள்ளுறுப்புகள் யாவும் அழுத்திப் பிசையப்படுகிறது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் நன்றாக சுரப்பு நீரைச் சுரந்து, அதன்மூலம் உடல், மன ஆரோக்கியம் கூடுகிறது.

சர்க்கரை நோய் குணமாகும்.

சிறுநீரக நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் தீரும்.

முதுகுத் தண்டுவடம் திருக்கி முறுக்கப்படுவதால், முதுகு வலி, இடுப்பு வலிகள் வராது. மேலும் எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கும் ஆசனம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com