ஆசனம் 42. ஜானு சிரசாசனக் கிரியா

‘ஜானு’ என்றால் முழங்கால் என்று பொருள். ‘சிரசு’ என்றால் தலை. தலையை முழங்காலுக்கு அருகே கொண்டுசெல்லும் ஆசனம்

அஷ்டாங்கயோகம்

சமாதி

யோக நீதிக் கதை  -  உதவும் கரங்கள்

புது மாப்பிள்ளை ஜெயராஜ், மனைவி ஹரிதாவை மார்பில் சாய்த்துக்கொண்டு கண்களை மூடிச் சொன்னான்.

அலாரம் அடிச்சிடுச்சி. நான் சொன்னது நினைவிருக்கா. தினமும் கரெக்டா சுவத்துல இருக்கற சாமி படத்துலதான் கண்ணை முழிக்கணும்.

நீங்க சொல்லவே வேணாம். நான் அந்த சாமி படத்துலதான் தினமும் கண்ணு முழிக்கறேன். ஆனா அது சாமி இல்லீங்க, நம்ம குலதெய்வம் சரியா?

அழகா சொன்னே ஹரிதா. நமக்கு குலதெய்வம், கோயில் தெய்வம் எல்லாம் அந்த ரமணி சார்தான். அவரு மட்டும் இல்லேன்னா நான் இன்னிக்கு பெரிய பதவியில, நல்ல சம்பளத்துல இருக்கமாட்டேன். நாம இன்னிக்கு வசதியா வாழறதுக்கு, அதோ அந்த போட்டோல இருக்கற ரமணி சார்தான் காரணம் என்று சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவை காட்டினான்.

ஸ்கூல் படிக்கற காலத்துல இருந்து, காலேஜ்ல பி.ஜி. முடிக்கிற வரைக்கும் நான் கேக்கறப்போல்லாம் பணம் கொடுத்து என்னை ஆதரிச்சவர் அவர்.

இன்னொருத்தர்கிட்ட பணம் வாங்கி புள்ளைய படிக்க வெக்கிறோமேன்னு உங்க அப்பா நினைக்கலியா…

ஐயோ, எங்க அப்பாவோட உயிர் நண்பர் ரமணி சார். எங்க அப்பாவை பார்க்காம ஒருநாள்கூட இருக்கமாட்டாரு. சின்ன வயசிலே இருந்தே ரெண்டு பேரும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எங்க அப்பா எப்பவுமே ஜோக் அடிக்கற பழக்கம் உள்ளவராம். அதைக் கேட்டுக் கேட்டு வயிறு குலுங்கச் சிரிப்பாராம் ரமணி சார். எங்க அப்பாவாலதான் இன்னிக்கு வரைக்கும் அவர் எந்த நோயும் இல்லாம இருக்கேன்னு அடிக்கடி சொல்வாரு.

நம்ம கல்யாணத்தன்னிக்கு உங்க அப்பாவைப் பத்தி ரமணி சாரே எங்கிட்ட இதைச் சொன்னாரு. அவங்க பிள்ளைங்கள்லாம் எப்படி?

பாவம், அவரோட  ஒய்ஃப் இறந்துட்டாங்க. ஒரே பையன். இப்பதான் அவனுக்கும் கல்யாணம் ஆச்சு. நல்ல ஜாப்புல இருக்கான்.
 
இந்தக் காலத்துல, அவருக்கு இருக்கற மாதிரி மனசு யாருக்குங்க வரும்?
 
அவருதான் நமக்கு காட்ஃபாதர் ஹரிதா. ரமணி சார் நம்ம வீட்டுக்கு எப்ப வந்தாலும் நல்லா அவரை உபசரிக்கணும். நாம நன்றியோட இருக்கோங்கறதை அவருக்கு நிரூபிச்சிக்கிட்டே இருக்கணும், தெரியுதா?

கவலையேபடாதீங்க, உங்க அப்பாவைவிட ஒரு மடங்கு கூடுதலாவே அவரை கவனிக்கிறேன், போதுமா.

***

மாமா, பால்காரனை இன்னும் காணோம். கொஞ்சம் நாடார் கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க.

அந்த பாக்கெட் பால் நல்லா இருக்காது தாயி. பழைய ஸ்டாக்கா இருக்கும். புது பால் இப்ப வந்துடும். டிராஃபிக் ஜாமா இருக்கும்., இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் என்றார் சாமிநாதன்.

எவ்வளவு நேரம்தான் பார்த்துகிட்டு இருக்கறது மாமா. இப்பவே லேட்.  சும்மாதான இருக்கீங்க. போய் வாங்கிட்டு வாங்க. வாக்கிங் போனாப்பல இருக்கும்.
 
அதுக்கில்லம்மா, நேத்து பஸ் கிடைக்காம நடந்தே வந்தது கால் எல்லாம் வலிக்குது. நாடார் கடைக்கு நாலு தெரு தாண்டிப் போகணும். பால்காரன் இப்ப வந்துடுவான்.

ஏங்க என்றபடி படுக்கை அறைக்குள் நுழைந்தாள் ஹரிதா.

சிறிது நேரத்தில் லுங்கியை கட்டிக்கொண்டு வெளியே வந்தான் மகன் ஜெயராஜ்.

அப்பா, அவ டயத்துக்கு பெட் காப்பி குடிச்சி வளர்ந்தவ. சரியான நேரத்துக்கு காப்பி குடிக்கலன்னா அவளுக்கு தலைவலி வந்துடும். பால்காரன் மெதுவா வரட்டும். நீங்க போய் பால் வாங்கிட்டு வாங்கப்பா.

சாமிநாதன் சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்கள் கலங்கின.

டேய், நீ ஆசைப்பட்ட மாதிரி உன்னை படிக்கவெச்சேன். நீ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணமும் பண்ணிவெச்சேன்.
 
எல்லாத்துக்கும் அந்த ரமணி சார்தானே பணம் குடுத்து உதவினாரு.

ஆமாம், அந்த ரமணி யாரு. என் ஃப்ரெண்டுடா. என் கஷ்டத்த பார்த்து எனக்கு குடுத்து ஹெல்ப் பண்ணான். புதுப் பொண்டாட்டி வந்த சோக்குல நீ ரொம்பதான் மாறிட்டே. இதெல்லாம் பாக்கக்கூடாதுன்னுதான் உன் அம்மா போய்ச் சேர்ந்துட்டா.

அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா, ஹரிதா கேட்ட நேரத்துக்கு ஓடிப்போய் பால் வாங்கிட்டு வந்து காப்பி போட்டு குடுத்திருப்பாங்க.
 
உள்ளே இருந்து வேகமாக வந்தாள் ஹரிதா.

மாமா, இப்ப நீங்க பால் வாங்கிட்டு வர முடியுமா, முடியாதா?

என்னம்மா இப்படி பேசறே? உன்னை பத்தி உயர்வா நெனச்சிட்டிருந்தேன். மாமாங்கறதுக்காக இல்லன்னாலும், வயசானவன்றதுக்காவது மரியாதை தரக்கூடாதா?

சொன்ன நேரத்துக்குப் போய் வாங்கிட்டு வந்திருந்தா மரியாதை கெட்டுருக்குமா?

சரிப்பா. இனிமே எதுவும் பேசவேணாம். பால் பாக்கெட்தானே வேணும். உடனே போய் வாங்கிட்டு வரேன் என்று நடந்தார் சாமிநாதன்.
 
பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில், ரமணியைப் பார்த்துவிட்டார் சாமிநாதன்.

என்னப்பா, என்ன கையில. பால் பாக்கெட்டா. பால்காரன் வரலையா?

வருவான் ரமணி. இன்னும் அரை மணி நேரமாகும். அதுவரைக்கும் பொறுக்கமாட்டேங்கறா புது மருமக. கடையில போய் வாங்கிட்டுவாங்கன்னு வெரட்டுறா.

உன் மகன் இதையெல்லாம் கேக்கறதில்லையா?
அவனா. பொண்டாட்டி பக்கம் சேர்ந்து அவனும் என்னை விரட்டறான்.  என் பொண்டாட்டி போனப்பவே நானும் போயிருக்கணும். என்ன நேரமோ, இன்னும் எத்தனை காலத்துக்கோ?

சரி சரி. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும், கவலைப்படாத சாமிநாதா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ரமணி.

நாட்கள் செல்லச் செல்ல, வீட்டில் கொடுமைகள் அதிகரித்தன. ஹரிதாவின் அவமதிப்புகள் பெருக ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்கு மேல் சாமிநாதனால் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

அன்று காலை –

நான் காசிக்குப் போறேம்பா. நல்லபடியா இருங்கப்பா என்றார் சாமிநாதன்.

என்னப்பா, என்ன திடீர்னு…

காசிக்குப் போறதுக்கு நேரம் வரணும்ப்பா. எனக்கு இப்பதான் நேரம் வந்திருக்கு, அதான் கெளம்பிட்டேன்.

மாமா, நீங்க வீட்டுக்குப் பெரியவரு. இப்படி திடீர்னு கெளம்பிட்டா எப்படீ?

சாமிநாதன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

உயிர் நண்பன் ரமணியிடம்கூட சொல்லாமல் போகிறோமே என்று மனது அடித்துக்கொண்டது.

காசிக்கு போறதா சொல்லிட்டு வந்தாச்சு. ஆனால் கையில் அவ்வளவு பணம் இல்லை. திக்கற்றவனுக்குத் தில்லைதான் சரி என்று சிதம்பரம் பேருந்தில் ஏறப் போனபோது, ஒரு உருவம் மேலே மோதியது.

நிமிர்ந்து பார்த்த சாமிநாதனுக்கு ஒரே அதிர்ச்சி! தனது ஆத்மார்த்த நண்பன் ரமணி!

என்னடா சாமிநாதா. என்கிட்டகூட சொல்லாம எங்க புறப்பட்டுட்ட?

பதில் சொல்ல முடியாமல், சின்னப் பிள்ளைபோல் அழுதார் சாமிநாதன்.

ஏன்டா என்று பதறிய ரமணி, நீ எதுவும் பேச வேணாம். வா, என் வீட்டுக்கு போலாம் என்று சாமிநாதனை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

உயிர்த்தோழனிடம் தன் வீட்டில் நடக்கும் கொடுமைகளைச் சொல்லி அழுதார் சாமிநாதன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டார் ரமணி. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, தன் ரூமுக்குள் சென்று ஒரு பையில் தனது துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டே வெளியே வந்தார்.

சாமிநாதா, நான் திரும்பி வர்றவரைக்கும் நீ இங்கயே கொஞ்ச நாள் இரு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவரது மகன் வெங்கடேசன் வந்தான்.

வெங்கடேஸா, நான் அவசரமா யாத்திரை போறேன். நான் திரும்பி வர்றவரைக்கும் சாமிநாதன் இங்கேயே இருக்கட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் சாமிநாதனை வெளியே அனுப்பிடாத. எனக்கு தர்ற மரியாதையில கொஞ்சம்கூட குறையாம பார்த்துக்கணும். சரியா?

சரிப்பா.
என்னடா ரமணி, திடீர்னு என்னை இங்க உன் வீட்டுல உட்காரவெச்சிட்டு நீ ஊருக்குப் போறேன்னு சொல்றே? எங்க போறே? நானும் உன்கூடவே வரேன்டா என்றார் சாமிநாதன்.

உஷ்..! இங்க நான் சொல்றதத்தான் நீ கேட்கணும். ஒரு நல்ல காரியமாதான் போறேன். நான் திரும்பி வர்றவரை கப்சிப்னு இங்கேய உட்காரணும். இங்க உனக்கு ஒரு குறையும் வராம என் பையன் பார்த்துக்குவான். சரியா? நான் வர்றேன்.

***

பிற்பகல் மூன்று மணி. சாமிநாதன் வீட்டு காலிங் பெல் ஒலித்தது.

கதவைத் திறந்த ஜெயராஜ் அதிர்ந்தான்.

ரமணி சார், நீங்களா!

ஆமாம்பா என்றபடி உள்ளே சோர்வுடன் நுழைந்தவரை, வாங்க வாங்க, உட்காருங்க சாப்பிடலாம் என்றான் ஜெயராஜ்.

குலதெய்வமே வந்திருப்பதாக எண்ணி ஹரிதாவும் ஓடிவந்து வரவேற்று சாப்பிடச் சொன்னாள்.

சாமிநாதனை எங்கடா?

அ, அதுவா… அப்பா காசிக்குப் போயிட்டாரு. உங்களுக்கு தெரியாதா? உங்களை விட்டுட்டு போகமாட்டாறே?

என்ன சார், வீட்ல எதும் பிரச்னையா?

எனக்கு மனசே சரியில்லடா.

உங்களுக்கு என்ன சார். நீங்களே பெருமாள் மாதிரி. வசதிக்கு ஒரு குறையும் இல்ல. மனசு சரியில்லையா?

ஆமான்டா, என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணிவெச்சேன். நன்றிய நல்லா காட்டிட்டான்டா. பொண்டாட்டி அழகுல சொக்கிப்போயிட்டான். என்னை கண்டுக்கவே மாட்றான். என் பொண்டாட்டி போனப்பவே நானும் போயிருக்கணும். ம்ம்… கஷ்டப்படணுன்னு என் தலையெழுத்து. என்னால அங்க மரியாதையை கெடுத்துக்கிட்டு இருக்கப் பிடிக்கலடா ஜெயராஜ். அதான் கிளம்பி வந்துட்டேன். சாமிநாதன் கிட்ட என் நெலமைய சொல்லி அழலாம்னு வந்தேன். அவனும் இல்லேன்றியே. அப்ப நான் எங்கதான் போறது?

ஏன் சார் போகணும். இது உங்க வீடு ரமணி சார். நீங்க போட்ட உப்பை தின்னு வளர்ந்தவன் இந்த ஜெயராஜ். இன்னிக்கு மாசம் லட்ச லட்சமா சம்பளம் வாங்கறேன்னா அதுக்குக் காரணம் நீங்கதான. இனி நீங்க இங்கேயே இருக்கலாம். ஹரிதா, இவர்தான் இனிமேல உனக்கு மாமா. எந்த வகையிலயும் மனசு கோணாம பார்த்துக்கணும். புரிஞ்சுதா?

இடையில் குறுக்கிட்டார் ரமணி.

நீங்கபாட்டுக்கு முடிவு பண்ணிடாதீங்க. சாமிநாதன் பாவம், போட்டதை தின்னுவான். ஆனா நான் அப்படியில்லை. வசதியா வாழ்ந்தவன். வேளாவேளைக்கு ஃபுரூட் ஜூஸ் வேணும். ஃபிரெஷ் வெஜிடபிள் சாலட் வேணும். மிட்நைட்ல ஹாட் வாட்டர் வேணும். இதெல்லாம் உங்களால முடியுமா?

ஓ, எங்களை இவ்வளவு வசதியா வெச்சிருக்கீங்க. உங்களுக்கு செய்யாமலா. தைரியமா தங்கிக்கங்க. உங்கள நாங்க நல்லா பார்த்துக்கறோம் என்றான் ஜெயராஜ்.

***
ஒரு வாரம் ஆயிருக்கும்.

பாருங்க, உங்க அப்பா எவ்வளவோ தேவலை. போட்டத தின்னுட்டு கம்முன்னு கெடப்பாரு. ஆனா இந்தக் கிழவன் என்னபாடு படுத்தறாரு. உங்களுக்கு அவர் உதவி செஞ்சிருக்கலாம். அதுக்காக இந்த ஆளை நான் கவனிக்கணும்னு அவசியம் இல்லை. உடனே அந்த ஆளை வெளியே போகச் சொல்லுங்க. இல்லன்னா நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கொஞ்ச நேரம்கூட படுக்கமுடியல. அது வேணும், இது வேணும்னு படுத்திட்டிருக்காரு.
 
அப்பா வராம இந்த ஆளை வெளியேத்த முடியாது ஹரிதா.

அப்போ, உங்க அப்பாவை எங்க இருந்தாலும் வரச் சொல்லுங்க.

எப்படி வரச் சொல்ல முடியும். எங்க போனாரோ. என்ன ஆனாரோ தெரியலையே!

அப்போ, எங்க இருந்தாலும் உடனே வீடு திரும்பவும்னு பேப்பர்ல ஒரு விளம்பரம் குடுங்க.

***

ரமணியின் வீடு -

சாமிநாதன் வீட்டில் நடப்பது இங்கேயும் அரங்கேறியது.

தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினார் சாமிநாதன்.

நேராக, ஊரில் இருந்த கோயில் வாசலில் போய் படுத்துக் கண்ணயர்ந்து சுவாமிநாதன்.

மறுநாள் காலை ஆறு மணி.

யாரோ எழுப்பினார்கள்.

கண் விழித்துப் பார்க்க, நெற்றி நிறைய திருநீறு அணிந்து திலகம் இட்டிருந்த ஒரு பெரியவர் புன்னகையோடு கைகொடுத்தார்.
 
அவரது இன்னொரு கையில் செய்தித்தாள் இருந்தது.

யாரு நீங்க? என்ன விஷயம்? ஓ, இந்த இடத்துல படுக்கக்கூடாதா? என்றார் சாமிநாதன்.

பகவான் கோயில் வாசல்ல விழுந்து கும்பிடறதுக்கே குடுத்துவெக்கணும். ஆனா, ராத்திரி பூரா படுத்துத் தூங்கியிருக்கீங்களே, அந்தப் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்குமா?

என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல.

பாருங்க. கடவுள் கண்ணை தொறந்துட்டான். உங்க பையனும் மருமகளும் உங்களை வீட்டுக்கு திரும்பிவரச் சொல்லி பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காங்க என்று செய்தித்தாளை நீட்டினார்.

அதை வாங்கிப்பார்த்த சாமிநாதன், ஐயா உங்களுக்கு கோடி புண்ணியம். என்னை மறுபடியும் அந்த நரகத்துல தள்ளிடாதீங்க. அவங்க வரச் சொல்றதுல ஏதோ சூது இருக்கும்!

அப்படிச் சொல்லாதீங்க. அப்படி சூது இருந்தா, அதை இந்தப் பகவான் பாத்துக்குவான். போய்ப் பாருங்க. இப்போ அவங்க திருந்தியிருக்கலாமே. வாங்க நானும் வாரேன் என்று சாமிநாதனை எழுப்பி ஆட்டோவில் ஏற்றி அவரும் ஏறிக்கொண்டார்.
 
சாமிநாதன் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது ஆட்டோ.

வீட்டுக்குள் சாமிநாதன் கண்ட காட்சி! அவர் கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை!

கால் மேல் கால் போட்டுக்கொண்டு, தனது நண்பன் ரமணி உட்கார்ந்து பூரிக்கிழங்கை பதம் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏய் ரமணி, யாத்திரை போறேன்னு சொல்லிட்டு கிளம்பிப்போனே. ஆனா, என் வீட்டுல உட்கார்ந்திருக்கே? என்னடா ஆச்சு உனக்கு? என்ன நடக்குது இங்கே? என்று கேட்க,

உஷ்… என்று வாயில் விரலை வைத்துக்காட்டி, கண்ணைச் சிமிட்டினார் ரமணி.

ஆட்டோவில் அழைத்து வந்துவருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, ரமணி அருகே வந்து உட்கார்ந்தார் சாமிநாதன்.

உன் பையன் படிப்புச் செலவுக்கு நான் நிறைய பணம் குடுத்து உதவினேன்ல. அந்த உரிமையோட இங்கு வந்து உட்கார்ந்துட்டேன். உன் பையனால ஒண்ணும் பண்ண முடியலை. உன் மருமகளும் ஒரு வழியாயிட்டா. வந்த நாள்ல இருந்து உரிமையோட ஆசைப்பட்டதை எல்லாம் சமைச்சித் தரச் சொல்லி, உன் மருமக உயிரை வாங்கிட்டேன். நீயே தேவலைன்னு, உன்னை வீட்டுகுகு திரும்பி வரச்சொல்லி விளம்பரம் குடுக்கற அளவுக்கு பண்ணிட்டேன். அது சரி. நீ ஏன் நான் வர்றதுக்குள்ள என் வீட்டை விட்டு வந்துட்ட?

அதையெல்லாம் நான் அப்பறம் சொல்றேன் என்று சாமிநாதன் சொல்ல, அவரது மகனும் மருமகளும் சுடான பூரிகளை எடுத்துக்கொண்டு வந்தனர்.

சாமிநாதனைப் பார்த்து, அப்பா நீங்களா? எப்பப்பா வந்தீங்க? வாங்க வாங்க. நமக்கு நல்ல காலம் பொறந்தாச்சு என்றான் ஜெயராஜ்.

மாமா, வாங்க மாமா. நீங்க இல்லாம வீடு வீடாவே இல்லை. சுடுகாடு மாதிரி ஆயிடுச்சு. அதான் பேப்பர்ல விளம்பரம் குடுக்கச் சொன்னேன். போங்க, போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க என்றாள் மருமகள் ஹரிதா.

சாப்பிட்டு முடித்ததும், பெரிய ஏப்பம் விட்டபடி ரமணி தன் தோள் பையை தோளில் போட்டபடி, என்னோட யாத்திரை முடிஞ்சுது. நான் வரட்டுமா என்று ரமணி வெளியேற,

கைகூப்பியபடி, கண்ணீரோடு கண்களால் நன்றி சொன்னார் சாமிநாதன்.
 
தகப்பன் ஸ்தானத்தில் உதவுபவரும் ஒரு தகப்பன்தான். அதுவே சமாதி.

***

ஆசனம்

ஜானு சிரசாசனக் கிரியா

‘ஜானு’ என்றால் முழங்கால் என்று பொருள். ‘சிரசு’ என்றால் தலை. தலையை முழங்காலுக்கு அருகே கொண்டுசெல்லும் ஆசனம் என்பதால், இதற்கு ஜானு சிரசாசனம் என்று பெயர்.

செய்முறை

  • கால்களை நீட்டி நேராக உட்காரவும்.
  • பின்னர் கால்களை அகலமாக விரிக்கவும்.
  • பின்னர், வலது காலை மட்டும் மடக்கி, குதிகால் தொடை சந்திப்பில் அழுத்திக்கொண்டிருக்கும்படி வைக்கவும்.
  • பிறகு இரண்டு கைகளையும் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு மேலே உயர்த்தி, உள்ளங்கைகளைச் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
  • அப்படியே சுவாசத்தை வெளியிட்டவாறு வலதுபக்கமாக திரும்பிக் குனிந்துகொண்டே வரவும். மூக்கு முழங்காலைத் தொட வேண்டும். கைகளால் கால் பாதத்தைச் சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டு சில சுவாசங்கள் புரியவும்.
  • பின்னர் உடலைத் தளர்த்தி, சுவாசத்தை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்திக்கொண்டே வந்து, கைகளைத் தளர்த்திவாறு வெளிச் சுவாசத்தோடு கீழே கொண்டுவந்து முடித்து ஓய்வுகொள்ளவும்.
  • இதேபோல், இடது காலை மடக்கி இடது பக்கமாகக் குனிந்து ஒருமுறை செய்யவும்.
  • இதுபோல், இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி குனிந்து செய்யவும்.


பலன்கள்

சர்க்கரை வியாதிக்கு ஏற்ற ஆசனம். வயிற்றின் பக்கவாட்டுத் தசைகள் அழுத்தப்படுவதால், சிறுகுடல், பெருங்குடல் சார்ந்த நோய்கள் தலை காட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com