ஆசனம் 40. சேதுபந்தனாசனம்

தோள்பட்டை வலிகள் குணமாகும். ஸ்பாண்டிலைசிஸ் எனப்படும் கழுத்து வலிகள் வராது.

அஷ்டாங்க யோகம் - தாரணை


யோக நீதிக் கதை

பாட்டி என்ன ஆனாளோ!

சுவாதி, என்னடீ பண்ணின்டு நிக்கற அங்கே?

தோ வாரேன் பாட்டீ.

ஊருக்கு போறச்சே கழுவிக் கவித்தி வெச்ச பாத்திரங்களை ஒன்னொன்னா நிமித்திண்டு வர்றேன். நீ கொஞ்சம்கூட ஒத்தாசை பண்ணமாட்றியே. தயிர் சுத்தமா இல்லை. சாரதா மாமிகிட்ட போய் கொஞ்சம் ஒரை தயிர் வாங்கிண்டு வாடின்னு சொல்லி அரை நாள் ஆவறது. அங்க என்ன வேடிக்கை, ஆம்பளப் பசங்க வேலையில்லாம திண்ணையில உட்கார்ந்து அரட்டையடிச்சுண்டு கெடக்கறானுங்க. சொன்ன நேரத்துக்குப் போய் வாங்கிட்டு வந்திருந்தா, இந்நேரம் பாதி தொவஞ்சிருக்குமேடீ...

அலமேலு பாட்டி என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள். ஆனால், இப்போதைக்கு என்னால் வீட்டுத் திண்ணையைத் தாண்டிப் போகமுடியாது. மூடியிருந்த ஜன்னல் வழியே திண்ணையில் தெருப் பசங்க பேசறதை பார்த்துகிட்டே இருந்தேன்.

எங்கள் வீட்டுத் திண்ணைதான் தெருப்பசங்களுக்கு அரட்டை அரங்கம். கிரிக்கெட்டில் துவங்கி சீரியல் சினிமாக்கள் வரை அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்துக்கொண்டிருப்பார்கள்.

நண்டு சுண்டைக்காய்ப் பருவத்துல இருந்து அத்தனை பசங்களும் என்னோட வளர்ந்தவங்க. இப்போகூட அவங்களுக்கு நடுவுல போய் என்னால உட்காரமுடியும். ஆனா திண்ணைய தாண்டிப் போகமுடியாம இப்போ ஒரு தடை!
 
எங்க தெருவுக்குப் புதுசா குடிவந்திருக்கற சங்கர்தான் அந்தத் தடை. அவன் எங்க வீட்டுத் திண்ணையிலே தெருப்பசங்களோட உட்கார்ந்திருக்கான்.

அவங்க அப்பா பேங்க் மேனேஜர். மதுரையில இருந்து மாற்றலாகி வந்திருக்காராம். அவனை பார்த்ததுல இருந்து எனக்குள்ள என்னன்னமோ நடக்குது. அவனை நெனைக்கும்போதெல்லாம் திக்கு திக்குன்னு மனசு அடிக்குது.

சங்கர் அழகான பையன். என்னமா இருக்கான்! அவனோட கலர் என்ன, ஹேர்ஸ்டைல் என்ன, ரோஸ் கலர் உதடுகளுக்கு மேல லைட்டா அரும்பு மீசை. ச்சே, எவ்வளவு சமர்த்தா உட்கார்ந்திருக்கான்! மத்த பசங்க லோக்கல் லாங்குவேஜ்களை சரளமா அள்ளி விடறாங்க. ஆனா சங்கரோ, அவங்க வாய பார்த்துகிட்டே இருக்கானே தவிர, அவன் வாய்ல இருந்து வார்த்தைகளே வரமாட்டேங்குது. நானும் இப்ப பேசுவான் அப்ப பேசுவான்னு பார்க்கறேன். பேசித் தொலைக்கமாட்டேங்கறானே...

கும்பகோணம் டிகிரி காப்பியாட்டமா, அப்பா சாயலும் அம்மா சாயலும் கணக்கச்சிதமா கலந்து பொறந்திருக்கான் பயல். மனசுல வஞ்சமில்லை, சூது வாது இல்லை, கள்ளங் கபடம் இல்லை. பச்சப் பிள்ளையாட்டமா இருக்கானே. மாமி பொத்திப் பொத்தி வளர்த்திருக்கா.
 
ஆஞ்சநேயரை நேரா பார்க்கணும்னு அவா அவா படாதபாடு படறா. சங்கருக்குப் பட்டுவேட்டி கட்டி கையில வில்லை குடுத்தா போதும். ஆஞ்சநேயரே வந்து நின்னுடுவாரு! ஆனா, ராமர் ஒரு பேக்கு. இந்த சங்கரும் ஒரு பேக்கு. அதனாலதான், சீதாவைக் கடத்திண்டு போனான் ராவணன். இவனுக்குக் கழுத்தை நீட்டினா, எனக்கும் நாளை ஒரு ராவணன் வருவான். அவன் மட்டும் வரட்டும். வில்லை என் கையில எடுத்துக்கிட்டு, எவன் எவன் பிறத்தியான் பொண்டாட்டிய ஜொள் விடறானோ அவனையெல்லாம் சரமாரியா அம்பு விட்டுச் சாய்ச்சுடுவேன்! எனக்கு புருஷனா வந்தா சங்கர்தான் வரணும். ஏன்னா, இந்த சங்கர் ஒரு ராமன். சீதாதான் இந்த சுவாதியா பொறந்திருக்கா. இந்த ராமனை என் மூலமா இன்னொரு தரம் கண்ணாலம் பண்ணிண்டு ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியான்னு ஹனிமூன் போகப் போறா. நான் இவனை ராமனா பார்த்தாச்சு. ஆனா அவன் என்னை சீதாவா பார்க்கணுமே, அது நடக்குமா! ஏன் நடக்காது. கண்ணை மூடிண்டு பெருமாளை நன்னா வேண்டிண்டா நடக்கும்!

ஏன்டி, இன்னும் அந்த ஜன்னல் கிட்டயே நிக்கிறியே. அங்க என்ன ராமனா இருக்கான்? என்றபடி பாட்டி வந்து என் கையில் இருந்த கின்னத்தைப் பிடுங்கியபோதுதான் நினைவு திரும்பியது!

ஓ, சாரி பாட்டி. இதோ போறேன். குடுங்க என்று தயிர்க் கின்னத்தைப் பிடுங்கிக்கொண்டு வாசல் பக்கம் எட்டு வைத்தபோது, சங்கர் என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். வெட்கம் பிடுங்கித் தின்றதால், கால்கள் இடறியது.

ஏய், என்னடீ திடீர்னு வெட்கம்? என்று குரல் கொடுத்தான், தடிப்பயல் கோபி.

சுவாதிக்கு ஐஸ்வர்யா ராய்னு நெனைப்புடா என்றான் விக்னேஷ்.

அப்போ சுவாதியை பாட்டிங்கறியா என்றான் பாண்டு.

சூரியனைப் பார்த்து நாய்கள் குரைப்பதாக எண்ணிக்கொண்டு, சாரதா மாமி வீட்டில் போய் தயிர் வாங்கிக்கொண்டு, திரும்பவும் தலையைக் குனிந்துகொண்டே திண்ணையைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தேன்.

*
வாரங்கள் மாதங்களாகின.
 
சங்கரும் நானும் ஒருவரை ஒருவர் விரும்புவது எங்களுக்குள் புரிந்துவிட்டது. ஆனால், இன்னும் பதிவு செய்யப்படாத பத்திரமாகவே தொடர்ந்துகொண்டிருந்தது.

அவன் கூச்சப்படறான்டீ. நீதான் அவனை வழிக்குக் கொண்டுவரணும். துணிஞ்சி லவ்வ சொல்லிடு. இல்லேன்னா இன்னொருத்திய கல்யாணம் பண்ணிட்டுப் போயிண்டே இருப்பான் என்றாள் தோழி உஷா.

அப்படியெல்லாம் சொல்லமுடியாதுடி. காதல் உறுதியாகணும்னா, அதுக்கு ஒரு சான்ஸ் வரணுன்டி. ஏதோ ஒரு மோதல் வரணும். அதுக்குதான் காத்திருக்கேன் உஷா.

நீ தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டுப் போனாள் உஷா.

*
வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வரும் பங்குனியில் திருவிழா.

ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வரும்போது, கோயில் தர்மகர்த்தா, பூசாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர், நாட்டாமை எல்லோரும் இரவில் கோயில் பிராகாரத்தில் ஒன்று கூடி உத்தரவு கேட்பது வழக்கம்.

அத்தனை பேருக்கும் நடுவில், வாட்டசாட்டமாக பட்டுப் பரிவட்டம் கட்டி பூசாரி ராமநாயக்கர் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றி அமர்ந்திருப்போர், அவரையே பெருமாளாக பாவிச்சி அவருக்கு முன்னால தவம் கிடப்பாங்க.

நான் சின்ன வயதிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆனா, அத பாக்கறதுக்கு ஒரு தைரியம் வரணும். பூசாரிக்கு அருள் வந்ததும், திடீர்னு பயங்கர சத்தத்தோட எழுந்து நின்னு குதிப்பாரு! நிலநடுக்கமே வந்தது மாதிரி இருக்கும்! பூசாரி திடீர்னு யாரையாவது துரத்துவாரு. அவங்க சட்டையப் புடிச்சு இழுத்து, உன்கிட்ட தப்பு இருக்குடான்னு உலுக்குவாரு! அதனால, எல்லாருமே ஒரு பயத்தோடதான் வந்து உட்காருவாங்க. பிடிவட்டவங்க, தப்பை ஒத்துக்கிட்டு திருந்துறதா சொல்லுவாங்க. அப்பறம்தான் பூசாரி திருவிழாவுக்குத் தேதி சொல்லுவாரு.

*
அன்று இரவு அந்த மண்டபத்துக்கு நானும் பாட்டியுடன் சேர்ந்து புறப்பட்டேன்.

சுவாதி, நீ சின்னப் பொண்ணா இருந்தப்போ வந்தே சரி. இப்போ பெரிய மனுஷியாயிட்டே. அதனால உள்ள வரக் கூடாது. அருள் வரும்போது, சாமி யார் குடுமியைப் பிடிப்பார்னு தெரியாது. நமக்கு எதுக்கு அந்த வம்பு? பேசாம போய் வீட்டுல படுத்துக்கோ என்று சொல்லிவிட்டு கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.

என்கிட்ட என்ன தப்பு இருக்கு பாட்டி, நான் எதுக்குப் பயப்படணும்? உனக்குப் பயமா இருந்தா நீ வீட்டுல இரு. எனக்குத் தூக்கம் வரலை, நானும்தான் வருவேன் என்று சொல்லிவிட்டு பாட்டியை முந்திக்கொண்டு நடந்தேன்.

பெரிய பூசாரி ராமு நாயக்கர், பரிவட்டம் கட்டிய தலையோடு கழுத்து நிறைய மாலைகளுடன் உட்கார்ந்திருந்தார். கண்களை மூடியவாறு ராமநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தார்.

இரவு பதினோரு மணிக்கு ஆரம்பித்தது, அரை மணி, ஒரு மணி என்று மூன்று மணி நேரம் போய்க்கொண்டே இருந்தது!

சாமி, எல்லாரும் காத்திருக்கோம். யார்கிட்டயாவது குத்தம்கொறை இருந்தா மன்னிச்சு உத்தரவு குடுக்கணும் என்றார் தர்மகர்த்தா, பயபக்தியுடன். எல்லாரும் அதே உணர்வோடு பூசாரியின் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர்.
 
நானும் பாட்டியும் ஒட்டி உட்கார்ந்தபடி, பூசாரியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். பூசாரிக்கு அருள் வந்தபாடில்லை.

நேரம்தான் போய்க்கொண்டிருந்தது. பூசாரி முகத்தையும் பாட்டி முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மணி இரவு இரண்டை நெருங்கியது.

சாமி எல்லாரும் காடு கரைக்கு வேலை வெட்டிக்கு போறவங்க. சீக்கிரமா உத்தரவு கொடுத்தா போய்த் தூங்குவாங்க, பாவம் என்றார் நாட்டாமை.

ஒனக்கு என்னதான் வேணும்னு கேளு. இப்படி எதுவும் சொல்லாமலே இருந்தா எப்படி? என்று பொக்கை வாயோடு கேட்டாள் பாட்டி.

இது ரொம்ப ஓவரா இல்ல பாட்டி? என்று காதில் கிசுகிசுத்துவிட்டு உதட்டை விளித்தேன். பாட்டி என்னைத் தொடையில் கிள்ளினான். உஷ் என்று சாமி வந்ததுபோல குரல் கொடுத்தேன். பட்டுப் பாவாடையே சிவந்துவிட்டது!

மூன்று மணிக்குதான் பூசாரிக்கு அருள் வர ஆரம்பித்தது!

சபையில ஒரு ஆளு கொறையுதுடா. அவன் வந்துட்டா திருவிழாதான்டா! என்று கண்களை மூடியவாறு சொன்னார்.

அப்போது பார்த்து சங்கர் அங்கே எதிர்பாராமல் நுழைந்தான்!

எனக்கு ஒரே வியப்பு!

எல்லோரும் அவனையே பார்த்தார்கள். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. அவன் ஊருக்குப் புதுசு.

நான்தான் சங்கரை வாங்க, வந்து உட்காருங்க என்று கண்களாலேயே வரவேற்றேன்.

என்ன இதெல்லாம்? என்றவாறு வியப்போடு பார்வையாலேயே கேள்வி எழுப்பினான்.

திருவிழாவுக்கு உத்தரவு கேக்கறாங்க என்பதுபோல் கைகளைக் குவித்துக் காட்டினேன்.

அவன் தலையை ஆட்டியபடி எனக்கு எதிர்வரிசையில் உட்கார்ந்தான்.
 
சாமி, நம்ம சித்த வைத்தியரை சொல்றீங்களா? அவருதான் இன்னிக்கு வரலை. ஊர்ல சித்தப்பாவுக்கு முடியலன்னு பார்க்கப் போயிருக்காரு என்றார் தர்மகர்த்தா.

பூசாரி அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கண்களை மூடியபடியே தொடர்ந்து பேசினார்.

சபையில யாரோ மனக்கொறையோட இருக்காங்கடா. யாருன்னு பார்த்து தீர்த்துவையிங்கடா என்றார்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

யாருக்காவது எதாவது குறை இருக்கா, சொல்லிடுங்க என்றார் தர்மகர்த்தா.

என்னைப் பார்த்து யாருமே கேட்கவில்லை. கேட்டால் துணிந்து சொல்லியிருப்பேன்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பதுபோல, சங்கரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, எங்கள் காதலை பூசாரிக்கு முன்னால் உறுதி செய்துகொண்டோம்.

எல்லோருமே பூசாரியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவருக்கு அருள் வந்துவிட்டது!

ஜே...ய் ராம். ஜே…ய் ராம். ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம் என்று கர்ஜித்தபடி எழுந்து பயங்கரமாகக் குதிக்க ஆரம்பித்தார்!

எங்கே பூசாரி கையில் தங்கள் குடுமி சிக்கிவிடுமோ என்று வேடிக்கை பார்த்த மககள் விழுந்தடித்துக்கொண்டு வெளியே பாய்ந்தார்கள்.

கூட்டத்தோடு கூட்டமாக, சங்கரும் என்னோடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்தான். அவனைக் காப்பாற்ற நானும், என்னைக் காப்பாற்ற அவனும் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டு ஓடினோம்!

சங்கரும் நானும் முட்டிமோதிக்கொண்டு ஒரு தென்னந்தோப்புக்குள் போய்த்தான் மூச்சிறைக்க நின்றோம்!

கைகளை விடுவித்துக்கொண்டபோது, எங்களுக்குள் உறுதியான காதல் பிணைப்பு ஏற்பட்டதை மனப்பூர்வமாக உணர்ந்தோம்!

மோதல் இங்கே காதலை உறுதிசெய்தது; மணியோசை அங்கே திருவிழாவை உறுதிசெய்தது!

எங்கள் தாரணை வென்றது!

ஆனால், பாட்டிதான் பாவம், என்ன ஆனாளோ!

***

ஆசனம்

சேதுபந்தனாசனம்

செய்முறை

  • விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கெள்ளவும்.
  • பின்னர் கால்களை நன்றாக நீட்டவும்.
  • இரண்டு கைகளையும் இரண்டு பக்க வயிற்றுப் பகுதியில் வைத்து இடுப்பை நன்றாக உயர்த்தவும்.
  • அதே நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
  • பிறகு உடலைத் தளர்த்தி வைத்துவிடவும்.
  • மீண்டும் மீண்டும் இவ்வாசனத்தைச் செய்யலாம்.

பலன்கள்

தோள்பட்டை வலிகள் குணமாகும். ஸ்பாண்டிலைசிஸ் எனப்படும் கழுத்து வலிகள் வராது.

பின்னந் தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், பெரு மூளை, சிறு மூளை புத்துணர்ச்சி பெறுகின்றன.

தொண்டைப் பகுதி விரிவாக்கப்படுவதால், தைராய்டு சுரப்பி அழுத்தப்பட்டு, தைராக்ஸி அமிலம் நன்றாகச் சுரக்கிறது. அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

வீடியோ:  ப்ரியா
புகைப்படம்: மஞ்சுஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com