ஆசனம் 39. நௌகாசனம்

படகுபோல உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இதற்கு நௌகாசனம் என்று பெயர்.


அஷ்டாங்க யோகம் - பிரத்யாகாரம்


யோக நீதிக் கதைகள்


நன்றி மறத்தல்


கோட்டைப்பட்டி சென்றாயப் பெருமாள் மலைக் கோயில்.

மதியம் பன்னிரெண்டு மணி. கோயிலின் வெளிப்பிராகாரத்தை சுற்றிக்கொண்டிருந்தேன். தகிக்கும் மே மாத வெய்யில். காலைக் கீழே வைக்க முடியவில்லை. எண்சாண் உடம்பைத் தாங்கி வண்டி மாடுகள்போல இழுத்துக்கொண்டு நடந்த என் பாதங்கள் சூடு தாளாமல் பொத்துப்போயின.

கோயிலில் சனிக்கிழமைதான் கூட்டம் அதிகம் இருக்கும். வார நாட்களில் காற்றாடும். நிர்வாகிகள் மட்டும் விளக்குப்போட்டு, ஊர்க்கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிசயமாக வெளியூர்க்காரர்கள் வந்தால் மட்டும் பட்டப் பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

நான் வியாழனன்று அந்த மலைக்கோயிலில் நடந்துகொண்டிருந்தேன். கோயிலைச் சுற்றிக்கொண்டிருந்த பக்தன் என்னைத் தவிர அன்றைக்கு யாரும் இல்லை.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன்அணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

என்ற பாடல் ஒன்று, சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
 

உச்சி வெய்யிலில் பைத்தியம்போல நடக்கிறானே இவன் என்று தூணில் சாய்ந்திருந்த கனத்த உருவம் ஒன்று என்னையே கவனித்துக்கொண்டிருப்பது புரிந்தது. யார் என்று பார்க்க தைரியம் வரவில்லை.

மாரியம்மன் திருவிழாவில் பூக்குழி இறங்குபவர்கள் ஏன் ஓடுகிறார்கள் என்று தெரியாது. ஆனால் நான் இப்போது ஓடவேண்டியதாயிற்று. மலையிலிருந்து திரும்பிச் செல்ல கால்கள் வேண்டுமே. கொப்புளங்கள் வந்திடுமோ என்ற கவலையோடு கருவறைக்குள் நுழைய முயன்றேன்.


இந்தாப்பா, உன்னைத்தான். எங்க இருந்து வர்றே? வார்த்தையால் என்னைப் பிடித்துக்கொண்டது அவ்வுருவம்.


திரும்பிப் பார்த்தேன்.


சட்டை போடாத கறுத்துக் கொழுத்த மேனி.


பெருமாள் போலவே, ஆஜானுபாகுவாக தர்மகர்த்தா பொம்மி நாயக்கர், தூணோடு தூணாக உட்கார்ந்திருந்தார்.


காதுகளில் சிவப்புக் கற்கள் பதித்த பெரிய பெரிய தோடுகள். நெற்றி நிறைய விசாலமான பெருமாள் திருவடிகள். முறுக்கப்பட்ட நரைத்த மீசை. தோளில் ஜரிகை போட்ட பச்சையும் சிவப்பும் கலந்த துண்டு கள்ளழகரை நினைவுபடுத்தியது.


ஏம்ப்பா, வேகாத வெய்யில்ல வந்து சுத்துறியே, வேலைக்குப் போலையா? என்று கேட்டார்.


வேலை இல்லீங்க சாமி.


நாராயணா, படிச்ச பையனா இருக்கே? உனக்கா வேலை இல்ல? என்ன படிச்சிருக்கே? என்றார்.


எம்.காம் படிச்சிருக்கேன் சாமி. நல்ல வேலை கிடைக்கலை. பார்த்த கம்பெனிகள் ஒண்ணுகூட சரியில்லை. வேலை வாங்கறாங்க. சம்பளம் மட்டும் தர்றதில்ல சாமி. நம்பி வேலை பார்க்க முடியலை.
 

நாராயணா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, வெற்றிலையை நீவினார்.


கடைசியா வேலை பார்த்த கம்பெனியில மூணு மாசமா சம்பளம் வரலை. கேட்டா ஆயிரத்தெட்டு காரணம் சொல்றாங்க. இதுவரைக்கும் சம்பளம் கையில வந்தது இல்ல.
 

அட நாராயணா, இப்படியே போனா என்னதான் வழி? இப்ப ஊர்ல யாருதான் இருக்கா? ஒண்ணு, பட்டணத்துக்குப் போறாங்க. இல்லேன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போயிடறாங்க. அந்த மாதிரி நீயும் போக வேண்டியதுதானப்பா என்று சொல்லிவிட்டு, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டார்.
 

அதோ இருக்கே மஞ்சளாறு, அந்தக் காலத்துல அக்கரையில ஆம்பளைங்களும், இக்கரையில பொம்பளைங்களுமா குளிச்சிட்டிருப்பாங்க. குட்டிப் பசங்க இங்கயும் அங்கயும் நீச்சல் அடிப்பாங்க. இப்ப அத்தனை தலைகளும் வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிஞ்சிடுச்சு. அந்த மாதிரி நீயும் போயிட வேண்டியதுதானே? என்றார்.
 

எனக்கும்கூட சான்ஸ் வந்துச்சு. ஆனா, அப்பா அம்மாவை விட்டுட்டு போக மனசு இல்ல. அப்பறம் இன்னொரு காரணமும் இருக்கு.
 

என்ன காதலா?
 

சேச்சே. எனக்கு அதெல்லாம் பிடிக்காது. சனிக்கிழமையானா மூச்சிறைக்க மலையேறி வந்து பெருமாளை சேவிக்கிற சுகமே தனியாச்சே. வெளிப்பிராகாரத்துல உட்கார்ந்து வெல்லக்கட்டிப் பொங்கலை டேஸ்ட் பண்ற சுகம் அங்க கெடைக்குமா? மலையேறி வந்து குளுகுளுன்னு வீசற வயல் காத்து அங்க ஏது? தூரத்துல தெரியற நம்ம ஊரையும், வீட்டையும் உத்து உத்துப் பார்க்கற மாதிரி அமெரிக்காவுல பார்க்க முடியுமா? மணிச்சத்தமும், மங்கையாழ்வார் பாட்டும் உலகத்துல எங்க போய்க் கேட்கமுடியும். கோடிகளைத் தேடிப் போறவங்க போகட்டும். ஆனா, எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுகத்தை விட்டுட்டு என்னாலா எங்கயும் போகமுடியாது என்றேன்.
 

கைகளை எடுத்துக் கும்பிட்டு, உனக்கு இந்த நாராயணன் நிச்சம் நல்லது செய்வாரு. கைவிட மாட்டாரு. இருந்தாலும், நான் ஒன்னு கேக்கறேன் தப்பா நெனச்சிக்காத. ஊருக்குள்ள நல்ல கம்பெனியே இல்லேங்கற. வெளிநாடு போகவும் பிடிக்கலேங்கற. இப்படி பெருமாளையே சுத்திக்கிட்டு இருந்தா போதுமா? என்றார் தர்மகர்த்தா.
 

ஒரே ஒரு கம்பெனி இருக்கு சாமி. அய்யனார் கோயில் ஸ்டாப்புல “சில்வேனியாஸ் இண்டியா” கம்பெனி இருக்குல்ல… என்றபோதே குறுக்கிட்டார்.
 

ரொம்பப் பெரிய கம்பெனியாச்சேப்பா! அதுல வேலை கிடைச்சா சொர்க்கத்துலயே கிடைச்ச மாதிரியில்ல?
 

ஆமாம். கிடைச்சா அதுல கிடைக்கணும். காலத்துக்கும் நிம்மதியான வேலை. ம்ஹும்… எனக்கெல்லாம் அங்க கிடைக்குமா?


ஏன் கிடைக்காது. உன் ஊரு பேரு விவரத்தை சொல்லிட்டு போ. எல்லாம் நாராயணன் பாத்துப்பான்.
 

சொல்லிவிட்டு கருவரைக்குள் போனேன். கருவறைக்குள் இருந்து வெளியே வந்தபோது, மழைக் காற்று வீசியது.
 

சொர்க்கத்தின் காற்று இதுதானோ என்று எண்ணியபோது, தர்மகர்த்தா நமுட்டுச் சிரிப்புடன் என்னை அருகே அழைத்தார்.
 

அவர் காலடியில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.
 

நாயை மிதித்துவிடாமல் கைகளைக் கட்டியபடி தூர நின்றேன்.
 

வெற்றிலைப் பெட்டிக்கடியில் வைத்திருந்த ஒரு தாளை எடுத்து நீட்டினார்.
 

வாங்கிப் பிரித்தேன். அவரது லெட்டர்பேடில்…

கணம் பொருந்திய ஸில்வேனியாஸ் இண்டியா சேர்மன் கோதண்டம் அவர்கள் சமூகத்துக்கு அநேக வணக்கங்கள். இக்கடிதம் கொண்டு வரும் தம்பி, பெருமாளைத் தன் ஹ்ருதயத்தில் வைத்து பூஜிப்பவர். நாட்டுப்பற்று உள்ளவர். பாவம், ஸம்பாத்யம் இல்லாமல் சிரமப்படுகிறார். இந்தத் தம்பிக்கு தகுந்த உத்யோகம் குடுத்து ரக்ஷிக்க வேணும். இயலுமானால் செய்யவும்.
 

இப்படிக்கு, பொம்மி நாயக்கர், தர்மகர்த்தா. சென்றாயப் பெருமாள் மலைக்கோயில், கோட்டைப்பட்டி.
 

கடிதத்தைப் படித்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
 

இதை கொண்டுபோய் அந்த கம்பெனி சேர்மன்கிட்ட குடு. இன்னிக்கு அங்கதான் இருக்காரு. வெளிநாடு போயிட்டார்னா அப்பறம் கஷ்டம். உடனே கெளம்பு என்றார்.
 

நன்றி சொல்லிவிட்டு, பரிந்துரைக் கடிதத்தோடு மலையில் இருந்து இறங்கினேன்.

எங்கோ ஒரு மூலையில் இருக்கற பெருமாள் எங்கே, உலகம் முழுதும் சுத்திக்கிட்டு இருக்கற சில்வேனியாஸ் கோதண்டம் எங்கே? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டா மாதிரி இருக்கே. இதெல்லாம் நடக்கிற காரியமா. சரி, கொண்டுபோய் குடுத்துத்தான் பார்ப்போம் என்றவாறு படியிறங்கினேன்.
 

பிற்பகலில், சில்வேனியாஸ் இண்டியா ரிசப்ஷனிஸ்டிடம் விவரத்தை சொன்னேன். இன்டர்காமில் பேசிவிட்டு எனக்கு வழி சொன்னாள்.
 

குளுகுளு அறைக்குள், கோட், சூட், டை சகிதம் வெள்ளைக்காரன் தோரணையில் இருந்த சேர்மன் கோதண்டம், நான் கொடுத்த லெட்டரை வாங்கிப் பார்த்தார். அதில் தனது கையெழுத்துப் போட்டு நீட்டி, இதை எச்.ஆரிடம் கொடுத்துடு. நாளைக்கு உனக்கு அப்பாயின்மென்ட் மெயில் வரும். மார்ச் 1-ம் தேதி திங்கள்கிழமை வேலைக்கு வந்துடு. இப்ப நீ போலாம் என்றார்.
 

அதற்கு மேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. மகிழ்ச்சியில் கால்கள் தள்ளாடின. சமாளித்துக்கொண்டு வெளியேறினேன்.
 

மறுநாள் -
 

மின்னஞ்சலில் அப்பாயின்மென்ட் லெட்டர் வந்திருந்தது. சொர்க்கமே கண் முன் தெரிந்தது. பெற்றவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லிவிட்டுவர ஊருக்குக் கிளம்பினேன்.
 

புதிய உடைகளுடன் திரும்பினேன். மார்ச் 1. திங்கள்கிழமை. “சில்வேனியாஸ் இண்டியா”வில் வேலைக்குச் சேர்ந்து என்னுடைய இருக்கையில் அமர்ந்தபோது நெகிழ்ந்தேன்.
 

மதியம் அருமையான கேன்டீன் சாப்பாடு!
 

சாப்பிட்டுவிட்டு வந்தபோது, அலுவலகத்தில் பரபரப்பு. வெளிநாடு போயிருந்த சேர்மன் அலுவலகம் வந்திருந்தார்.
 

அடுத்த அரை மணி நேரத்தில், அவரைச் சந்திக்கும்படி நோட்டீஸ்.
 

திக் என்றது. அவரது அறைக்குச் சென்றேன். ஆனால், சிரித்த முகத்துடன் சேர்மன் வரவேற்று விசாரித்தார். தர்மகர்த்தா சிபாரிசு பண்ண ஆளாச்சே, நல்லா வேலை பாரு. என்ன வசதி வேணுன்னாலும் கேளு என்றவர் என் கைகளைக் கவனித்தார்.
 

சரி, போய் வேலையப் பாரு என்று என்னை அனுப்பும்போது என் கைகளைக் கவனித்தார். நான் என் அறைக்கு வந்த சில நிமிடங்களில் எச்.ஆர். வந்து என்னிடம் ஒரு பேப்பரை நீட்டினார்.
 

‘யூ ஆர் அண்டர் டிஸ்மிஸ்’ என்றது அந்த பேப்பர். கீழே சேர்மன் கையெழுத்து.
 

தலை சுற்றியது.
 

வேலையில் திருப்தி இல்லை என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தை கொடுத்த எச்.ஆரிடம் விசாரித்தேன்.
 

தெரியலப்பா. சரி நீ உடனே கெளம்பு. இல்லன்னா சேர்மன் டென்ஷன் ஆயிடுவாரு என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
 

ஆபீஸில் இருந்து நடைபிணமாக வெளியேறினேன். உலகமே சதிமயமாகத் தெரிந்தது. ஊருக்கு வந்து பெற்றோரிடம் சொல்லி அழுதேன்.
 

பொறாமை பிடிச்ச உன் ஃப்ரண்டுங்கதான் எதாவது பண்ணியிருப்பாங்க. போய் அந்த மலையில இருக்கற பெருமாள்கிட்டயே சொல்லி முறையிடு என்றாள் அம்மா.
 

பக்தர்களை பெருமாள் இப்படித்தான்டா சோதிப்பான். நீ உடனே போய் அந்த தர்மகர்த்தாகிட்ட சொல்லு என்றார் அப்பா.
 

ஊருக்கு வந்ததும் வராததுமாக, மூச்சிரைக்க மலை உச்சிக்கு ஓடிவந்து, தர்மகர்த்தா முன் நின்றேன். விவரத்தை சொல்லி கண்ணீர் விட்டேன்.
 

இப்ப அழுது என்னப்பா செய்யறது?
 

திக்கென்றது.
 

எனக்கு எதிரா யாரோ சதி பண்ணியிருக்காங்க என்றேன்.
 

யாரும் பண்ணல, பெருமாள்தான் பண்ணியிருக்காரு. அவர என்ன பண்ணப்போற.
 

அவரது நாய் மூச்சிரைக்க ஓடிவந்து, வாலை ஆட்டியபடி அவர் காலடியில் உட்கார்ந்தது.
 

இந்த நாயோட ஸ்பெஷாலிடி என்ன தெரியுமா? நன்றி. ஒருநாள் ஒரு பிஸ்கட் துண்டு போட்டா போதும். காலம் முழுக்க சுத்திவரும். நன்றி மறவாத பிறவின்னா இந்த நாய்தான். அதுக்கு மனசும் இல்லை, மனசாட்சியும் இல்ல. ஆனா நன்றி இருக்கு. மனுஷனுக்கு, மனசு, மனசாட்சி, அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்கு. ஆனா நன்றி மட்டும் இல்லை. வேலை கேட்டு கோயிலையே சுத்தி சுத்தி வந்தே. ஆனா, வேலை கெடைச்சதும் எல்லாத்தையும் மறந்துட்டியே! எனக்கு நன்றி சொல்ல வேணாம், இந்தப் பெருமாளுக்காவது நன்றி சொல்ல வந்திருக்க வேண்டாமா.
 

தவறு உரைத்தது.
 

என்ன விஷம்னா, உனக்கு வேலை குடுத்த விஷயத்தை வியாழக்கிழமையே சேர்மன் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டாரு. சனிக்கிழமை விசேஷ பூஜை. லட்டு பிடிக்கப்போறோம் கட்டாயம் வந்துடுங்கன்னேன். அவரு அவசரமா ஜப்பான் போறதாவும், திங்கள்கிழமை காத்தால வந்துடுவேன். அந்தப் பையன் திங்கள்கிழமை ஜாய்ன்ட் பண்றான். உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வரும்போது அவன்கிட்ட குடுத்துவிடுங்க. நான் வாங்கிக்கிறேன்னு சொன்னாரு. நீ வருவே வருவேன்னு பார்த்தேன். ஆனா, நீ வரல.
 

இன்னிக்கு ஜப்பான்ல இருந்து திரும்பினதும், உன்னை கூப்பிட்டு எதாச்சும் தகவல் இருக்கான்னு கேட்டிருக்காரு. நீ முழிச்சிருக்கே. உடனே எனக்கு ஃபோன் பண்ணி, பையன்கிட்ட பிரசாதம் குடுத்துவிடலையான்னு கேட்டாரு. நான் என்னத்தை சொல்றது. பையன் மூணு நாளா வரலேன்னு சொன்னேன். பயங்கர ஷாக் ஆயிட்டாரு! அதுக்குள்ள நன்றி மறந்துட்டானா. நன்றி கெட்டவன் இனிமே இங்க வேலைல இருக்கக்கூடாது. இப்பவே அவனை டிஸ்மிஸ் பண்றேன்னு சொல்லிட்டு, போனை கட் பண்ணிட்டாரு.

ஓ மை காட். அதான் என் கையையே உத்து உத்துப் பார்த்தாரா. கைகளால் நெற்றியில் அடித்துக்கொண்டேன்.
 

உள்ளதை சொல்லிடறேன்யா. வேலை கெடச்ச அன்னிக்கி ஃப்ரெண்ட்ஸோட கொண்டாட்டம். வெள்ளிக்கிழமை துணிமணி வாங்க திண்டுக்கல் போய்ட்டேன். சனிக்கிழமை கோயில்ல கூட்டமா இருக்கும்னு வரலை. ஞாயித்துக்கிழமை ஊருக்கு போயிட்டேன். திங்கள்கிழமை, இன்னிக்கு வேலையில சேர்ற அவசரத்துல போயிட்டேன். ஆனா, சாயந்திரம் கோயிலுக்கு வர்றதாதான் இருந்தேன்...
 

பிரயோஜனம் இல்லியேப்பா. கெட்ட பேரை வாங்கி, கெடைச்ச வேலைய விட்டுட்டு நிக்கிறியே.
 

ஐயா, நல்ல வேலை கெடைச்சும் நன்றி மறந்து கோட்டை விட்டுட்டேன். எனக்கு மன்னிப்பு கேட்க தகுதியில்லை. இதை ஒரு தண்டனையா ஏத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.
 

தர்மகர்த்தா என் பெயர் சொல்லி அழைத்தார்!
 

நின்று திரும்பினேன்.
 

ஒரு மஞ்சள் பையை நீட்டினார்.
 

குழப்பத்தோடு அருகே சென்றேன்.
 

உன் வேலை போனதுக்கு இதுதான் காரணம். சேர்மனுக்கு உன்கிட்ட குடுத்துவிடறதா சொன்ன பிரசாதப் பை இதுதான்.
 

“தப்பு செய்றது இயல்பு. அதை உணர்றவன்தான் மனிதன். அவனே கடவுளுக்கு உகந்தவன். நீ உன் தப்பை உணர்ந்துட்டே. இந்தா இதை கொண்டுபோய் நாளைக்கு அவர் கையில குடுத்துடு. எல்லாம் சரியாயிடும்” என்றார்.
 

தயங்கினேன்.
 

நான் சொல்றேன்ல? போப்பா, எல்லாம் பெருமாள் பாத்துக்குவார். இனிமேயாவது நன்றி மறக்காம இருக்கணும் என்றார்.
 

பிரசாதப் பையை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
 

மனத்தை அங்குமிங்கும் சிதறவிடக்கூடாது என்பது பிரத்யாகாரம்.
 

***

ஆசனம்

நௌகாசனம்

பெயர்க் காரணம்

படகுபோல உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இதற்கு நௌகாசனம் என்று பெயர்.

செய்முறை

  • விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.
     

  • பின்னர் கை, கால்கள் மற்றும் உடல் பகுதியை ஒருசேர உயர்த்தவும். அதாவது, புட்டப்பகுதி மட்டும் விரிப்பின் தொட்டுக்கொண்டிருக்கும்படி இருக்க வேண்டும். இப்போது பார்த்தால், உடல் படகுபோல இருக்கும். இந்த நிலையில் சில சுவாசங்கள் எடுக்க வேண்டும்.
     

  • பின்னர் மெதுவாகப் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

     

பலன்கள்
 

  • வயிற்றில்தான் நிறையச் சுரப்பிகள் அடங்கியிருக்கின்றன. இவ்வாசனத்தின் மூலம் அவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதால், அவை நன்றாக வேலை செய்து சுரப்பு நீர்களை சுரந்து உடல் ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் துணை நிற்கும்.

     

வீடியோ: கோபி

புகைப்படம்: சிவகாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com