ஆசனம் 46. கோமுகாசனக் கிரியா

ஒரு ஆசனத்தில் சில மாறுதல்களைச் சேர்க்கும்போது, அதில் அபரிமிதமான பலன்கள் கிடைப்பது உறுதி.

அஷ்டாங்கயோகம்

தாரணை (உறுதி)


யோக நீதிக் கதை

லிஃப்ட் கிடைக்குமா?

தினேஷ், ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் ஆபீஸருக்கான இன்டர்வியூவுக்கு புறப்பட்டான்.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். பேருந்து ஒன்று கூட்டத்தோடு வேகமாக வந்தது. நிறுத்தத்தில் நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து கண்டக்டர் இரட்டை விசில் கொடுக்க, நிற்காமலேயே போனது.

தினேஷ் துரத்திக்கொண்டே ஓடினான். ஆனால், பிடிக்க முடியவில்லை. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத வேதனையோடு, மூச்சு வாங்கியபடி கண்ணை விட்டு மறைந்துகொண்டிருந்த பேருந்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

திடீரென்று ஒரு பைக் அவன் அருகே வந்து நின்றது. உங்கள டிராப் பண்ணவா சார்?

தினேஷ் திகைப்பாகப் பார்த்தான்.

லிஃப்ட் வேணுமா? என்றார் அவர்.

பரவாயில்லை சார். ரொம்ப தேங்க்ஸ். அடுத்த பஸ் வரும். நான் போய்க்கிறேன் என்று தன்மையுடன் பதில் அளித்தான்.

எங்க போகணும்?

மயிலாப்பூர் டேங்க்.

நானும் அந்தப் பக்கமாத்தான் போறேன். வாங்க…

தேங்க்ஸ் சார், அடுத்த பஸ் இப்ப வந்துடும்... என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அடுத்த பேருந்து வந்தது. அதிலும் கூட்டம்.

தினேஷ் முண்டியடித்துக்கொண்டு ஏறிவிட்டான். பேருந்து நகன்றது.

பைக்காரர் அவனை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே “ஸ்டார்ட்” செய்தார்.

தினேஷ் அவருக்கு டாட்டா காட்டியபடி பெருந்தன்மையோடு மறைந்தான்.

இன்டர்வியூவுக்கு முதல் ஆளாகப் போய் உட்கார்ந்தான். ஒருவர் ஒருவராகப் பின்னர் வந்தனர். ஆபீஸ் உதவியாளர், அவர்களிடம் இருந்து “கால்ஃபார்” கடிதங்களைப் வாங்கி வைத்துக்கொண்டார்.

*
முதல் ஆளாக உள்ளே அழைக்கப்பட்டான் தினேஷ்.

அதிகாரி அவனை வரவேற்றார். ‘புதுமையான’ கேள்விகள் கேட்டார்.

நீங்க அவசரமா ஒரு இடத்துக்குப் போயாகணும். பேருந்தே வரலை. எப்படிப் போவீங்க?

சார், பேருந்து எப்பவுமே லேட்டாதான் வரும்னு தெரியும். அதனால அரைமணி நேரம் முன்னதாகவே கிளம்பிடுவேன்.
யார்கிட்டயாவது லிப்ட் கேட்டு போகமாட்டீங்களா?

என்னால எதுக்கு சார் அடுத்தவங்களுக்கு கஷ்டம். என்னைப் பொறுத்தவரைக்கும் அது தப்பான பழக்கம். இன்னிக்கு ஒருத்தர் “லிப்ட்” குடுத்தார்ன்னு ஏறிக்கலாம். நாளைக்கு அவரை அதே எடத்துல பாக்கும்போது ரெண்டு பேருக்குமே தர்மசங்கடம். தொடர்ந்து லிப்ட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கறதும் தப்பு, குடுக்கறதும் தப்பு. வீணான வருத்தங்கள் எதுக்கு சார்…

அதைவிட, அரை மணி நேரம் முன்னாடியே வீட்டுல இருந்து கிளம்பிட்டா எல்லாம் சாதகமா இருக்கும். அரை மணி நேரம் லேட்டா கிளம்பிப் பாருங்க, எல்லாமே சோதனையா ஆயிடும்.

இன்டர்வியூ நடத்தியவர் முகத்தில் மகிழ்ச்சி, வெரி நைஸ். டயத்துக்கு கிளம்பற இந்தப் பக்குவம் உங்களுக்கு எப்படி வந்துச்சு?

வாழ்க்கைக்கு காலமும் பணமும் ரொம்ப முக்கியம். டைம்  மேனேஜ்மென்ட் இல்லாம, எவ்வளவு சம்பாதிச்சாலும் பயன்படாது. மணி மேனேஜ்மென்ட் இல்லாம எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பயன்படாது சார். நேரத்தையும் பணத்தையும் துளித் துளியா அருமை தெரிஞ்சு பயன்படுத்தினா, அந்த மனுஷன யாராலும் அசைக்கவே முடியாது.

சரி, நீங்க சொல்றபடியே பார்த்தா, நீங்க பணத்தை மேனேஜ் பண்ணியிருந்தா, எதுக்கு வேலை தேடறீங்க…
 
சார், என்கிட்ட பணம் மட்டும்தான் இல்லை. அதுக்குதான் வேலை தேடிக்கிட்டிருக்கேன். என்கிட்ட டயம் மட்டும்தான் இருக்கு. எனக்கு கிடைச்சிருக்கற டயத்தை சரியா செலவழிச்சா, பணம் என்னைத் தேடி வரும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. பணத்தை சம்பாதிக்கணும்னா, முதல்ல நேரத்தை சம்பாதிக்கணும். அந்த வகையில, நான் நேரத்தை நல்லாவே சம்பாதிச்சிட்டேன்.
அதெப்படி? இருக்கறது இருபத்தி நாலு மணி நேரம்தானே?

சார், இருபத்தி நாலு மணி நேரத்துல நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு உழைக்கலாமே. அதுக்குரிய கூலி கிடைக்காதா?

இன்டர்வியூ முடிந்து, அடுத்த வாரமே வேலைக்கான உத்தரவு வந்தது.

அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஆபீஸராக நியமிக்கப்பட்ட தினேஷ், “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” செய்து நிறவனத்தின் வருவாயைப் பெருக்கினான்.

இந்தியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றான்.

*
நிறுவனத்தின் வெற்றிவிழா சிறப்புக் கூட்டம்.

தினேஷை முதன்முதலாக இன்டர்வியூ செய்த பொது மேலாளர் பேசினார்.

ஆபீஸுக்கு எல்லாருமே லேட்டா வர்றீங்க. கேட்டா, ஆயிரத்தெட்டு காரணம் சொல்றீங்க. வீட்டுல இருந்து புறப்படும்போதே அரைமணி நேரம் முன்னாடியே கிளம்பிப் பாருங்க. அப்படி கிளம்பினா, எல்லாமே உங்களுக்கு சாதகமா அமையும். லேட்டா கிளம்பிப் பாருங்க, எல்லாமே உங்களுக்கு சோதனையா அமையும்.

தினேஷ் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். முதல் நாள் இன்டர்வியூவில் தான் சொன்னது அது!

வெட்கத்தோடு அவன் தலைகுனிந்தபோது, அவர் மேலும் சொன்ன விஷயங்கள்தான் அவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது!
சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை கோட்டைவிட்டு நின்றிருந்த ஒருவருக்கு தான் லிஃப்ட் கொடுக்க முன் வந்தும் அவர் அதை ஏற்காமல், தனக்குச் சொன்ன பதில்தான் அது என்று அவர் சொல்லியபடியே ஓரக்கண்ணால் தினேஷை பார்த்தார்.

தினேஷுக்கு ஒரே நெகிழ்ச்சி.

அதுமட்டுமில்ல, டைம் மேனேஜ்மென்ட் – மணி மேனேஜ்மென்ட் பத்தியும் அவர் அன்னிக்கு சொன்ன அவர எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்பவே, இவர்தான் மார்க்கெட்டிங் டிவிஷனுக்கு பொருத்தமான ஆளுன்னு முடிவு பண்ணி வேலை குடுத்தேன். அவர் வேலைக்கு சேர்ந்த ஆறே மாசத்துல கம்பெனியின் வருமானத்தை நாலு மடங்கா உயர்த்தியிருக்காரு. அவருக்காகத்தான் இந்தச் சிறப்பு விழாவை ஏற்பாடு பண்ணினோம் என்று அவர் தினேஷை நோக்கி கை காட்ட, தினேஷ் எழுந்து நின்றான்.

அப்போதுதான், தனக்கு லிஃப்ட் கொடுக்க முன் வந்தது கம்பெனி ஜிஎம்தான் என்று தினேஷுக்கு தெரியவந்தது.
 
தினேஷை மேடைக்கு அழைத்து, பலத்த கரகோஷம் எழுப்ப பொன்னாடை போர்த்தினார் ஜெனரல் மேனேஜர்.

***

ஆசனம்

கோமுகாசனக் கிரியா

விளக்கம்

ஒரு ஆசனத்தில் சில மாறுதல்களைச் சேர்க்கும்போது, அதில் அபரிமிதமான பலன்கள் கிடைப்பது உறுதி. அந்தவகையில், கோமுகாசனத்தில் சின்ன மாறுதல்களைச் செய்து அதன்மூலம் பன்மடங்கு பலன்களைப் பெறமுடியும்.

செய்முறை


 
நிமிர்ந்து அமர்ந்து, இரண்டு கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக குறுக்காக அமைத்துக்கொண்டு அமரவும்.

ஒரு கையை தலைக்கு மேலே கன்னத்தை ஒட்டியவாறு உயர்த்திவைத்து அப்படியே பின்பக்கமாக மடக்கவும்.

இன்னொரு கையை முதுகுக்கு பின்பக்கமாக கீழ்நோக்கி வளைத்துச் சென்று, இடது கை விரல்களும் வலது கை விரல்களும் ஒன்றோடு ஒன்று கோத்து பற்றிக்கொள்ளவும்.

சில சுவாசங்கள் எடுக்கவும். இது கோமுகாசனம்.

அப்படியே சுவாசத்தை வெளியிட்டவாறு குனிந்துகொண்டே வரவும். முகம் தரையைத் தொடுவதுபோல் இருக்க வேண்டும்.

அதே நிலையில் சில சுவாசங்கள் எடுக்க வேண்டும்.

பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு தலையை உயர்த்த வேண்டும்.

பிறகு கை கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வரவும்.

அடுத்த முறை, கால் கைகளை மாற்றி வைத்து இதே ஆசனத்தை செய்யவும்.

பலன்கள்

வயிற்றுப் பகுதியும் குடல் பகுதிகளும் நன்றாக அழுத்தப்படுவதால், எல்லாச் சுரப்பிகளுக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகரித்து சுரப்பு நீர்களைத் தூண்டும்.

செரிமான மண்டலத்தின் வழியே அதிக அளவில் ரத்தம் கடந்து செல்வதால், வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். மேலும், எந்தப் புதுவித நோய்களும் வராது.

காணொளி: அர்ச்சகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com