ஆசனம் 52. சிரசாசனம்

சிரசு என்றால் தலை என்று பொருள். தலையை தரையில் ஊன்றி, கால்களை அதற்கு மேல் உயர்த்திச் செய்யும் ஆசனம்

அஷ்டாங்கயோகம்
தாரணை

யோக நீதிக் கதை
திருப்பிக் கொடுக்கணும்

சிவராமய்யா, அந்தக் கூட்டுக் குடும்பத்தின் மூத்த தலை. 

மன்னவனூர் கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத் தலைவர். பரம்பரை பரம்பரையாக வாழும் பூர்வீக வீட்டில்  குலதெய்வம்போல அவர் கருதப்பட்டவர்.

சிறுவயதிலிருந்து கஷ்ட நஷ்டங்களில் அடிபட்டு விவசாய நிலங்களைப் பராமரித்து வளர்த்தவர். அதனால் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கரும்புத் தோட்டங்களில் சாகுபடிகள் கொட்டிக் குவித்தன!

குடும்பத்தில், அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது! 

நான்கு மகன்கள், நான்கு மகள்கள். எட்டுப்பேரையும் தனது பங்களா வீட்டிலேயே குடி வைத்திருந்தார். மகள்களை சொந்தத்துக்குள்ளேயே கட்டிக்கொடுத்து, தனது வீட்டோடு வைத்துக்கொண்டார். அதனால், பேரன் பேத்திகள் என வீடே கலகலவென்று இருந்தது. அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருப்பார் சிவராமய்யா.

காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னதாகவே எழுந்து வயலுக்கும், தோட்டங்களுக்கும், தோப்புகளுக்கும் புறப்படும் மகன்கள் மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரன் பேத்திகள் என்று அனைவருமே, சிவராமய்யாவின் அறைக்குச் சென்று அவரது கால்களைத் தொட்டு ஆசி வாங்கிவிட்டுத்தான் போவது வழக்கம். அதன் பிறகுதான் அவர்களுக்குச் சூரிய தரிசனமே!

விவசாயம் மட்டுமல்ல, ஊருக்குள் ரைஸ் மில், அரசி, காய்கறி வியாபாரம் என்று அவரது தலைமையில் தொழில்கள் கொடிகட்டிப் பறந்தன. வெல்லம், கருப்பட்டி உற்பத்திகளும் பெருகின. எல்லாத் தொழில்களுமே சில்லறை, மொத்த வியாபாரங்களில் லாபங்களைக் கொட்டிக் குவித்தன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின. 

எல்லாத் தொழில்களிலுமே ஒரு நியாயத்தை, நேர்மையை, கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர் சிவராமய்யா. அதனால், அந்தக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்குமே அவர் ஒரு நீதிபதி போலவும், ஆலோசகராகவும் இருந்தார்.

சிவராமய்யா, தொழிலில் நடக்கப்போவதை முன்கூட்டியே துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு தீர்க்க தரிசனம் பெற்றிருந்தார். அதனால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருபத்தி ஏழு பேர்களும் அவரையே கண்கண்ட தெய்வமாகப் போற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவரிடம் யோசனை கேட்டுச் செல்வார்கள். அவர் சொல்படி செய்தால் அது மிக மிகச் சரியானதாக இருக்கும்!

ஊராரே அவரிடம் போய் தங்கள் தொழில் சார்ந்த சந்தேகங்களைக் கேட்டு வருவது வழக்கமாகிவிட்டது. 

அதுவே நாளடைவில் பெண் பார்ப்பதற்கும், மாப்பிள்ளை பார்ப்பதற்கும்கூட அவரிடம் போய் யோசனை கேட்கும் அளவுக்குப் போய்விட்டது. 

அவர் தலைமை ஏற்று, “தாலி எடுத்துக்கொடுத்த” திருமணங்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும்!

செயற்கை உரங்கள் போடாமல் இயற்கை உரமாகப் போட்டு பயிர் விளைச்சலை அமோகமாக்கியவர். பசுஞ்சாணத்துக்கென்றே ஒரு மாட்டுப் பண்ணையையே வைத்திருந்தவர். 

ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து, அவற்றை வியாபாரத்துக்குப் போக மீதியை ஏழை மக்களுக்குத் தானமாக வழங்கி ஒரு வள்ளலாகவே வாழ்ந்தவர் சிவராமய்யா.

இப்படிப்பட்ட நிலையில், விதி யாரை விட்டது? அவருடைய வாழ்க்கையிலும் சோதனை! 
விவசாயத் துறையில் விஞ்ஞான வளர்ச்சிகள் தலைகாட்டியபோது, தலை கவிழ ஆரம்பித்தார் சிவராமய்யா.

விளைநிலங்களில் எமன்களைப்போல டிராக்டர்கள் டயர் பதித்து, யூரியா போன்ற ‘விஷ’ உரங்கள் தூவப்பட்டபோது துடிதுடித்துப் போனார். 

பேரன்களை, விவசாய அபிவிருத்தியைக் கற்றுக்கொள்வதற்கு மட்டுமே பட்டணத்துக்கு அனுப்பினார். ஆனால் அவர்களோ, வேளாண் கல்விகளை ஏட்டளவில் படித்துவிட்டு வந்து, நவீனம் என்ற பெயரில் சோலைவனங்களை பாலைவனங்களாக மாற்றிக்கொண்டிருந்தார்கள். தலைமுறைகளாகப் பாதுகாத்துவந்த பாரம்பரிய நிலங்களைப் பாழ்படுத்துவார்கள் என்று சிவராமய்யா எதிர்பார்க்கவில்லை!

இது தொழில் வியாபாரங்களை முடக்க ஆரம்பித்தது. ஆபத்துகள் வருவதைக் கண்டு அஞ்சிய சிவராமய்யா, அவற்றையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க முயன்றார், ஆனால், ஆனால் தடுக்கப்பட்டார்!

கல்வியின் கை ஓங்கியதால், வாரிசுகளின் கை ஓங்க ஆரம்பித்தது. சிவராமய்யாவுக்கு வயதாகிவிட்டதால், பலவீனமும் அவரை வீழ்த்த ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் வாரிசுகளை எதிர்த்துப் போராட முடியவில்லை!

வயல் வரப்பில், எறும்புகளால் உயிருக்குப் போராடிய மண்புழுக்களை இடம் மாற்றிப் போட்டு உயிர் மீட்டவர் சிவராமய்யா. ஆனால் இன்றோ, அவரே அந்த எறும்பின் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் சொல்வதை யாரும் கேட்பதில்லை. அதுகூடப் பரவாயில்லை; பெயர் சொல்லி அழைத்தால்கூட, காதில் வாங்கிக்கொள்ளாமல் போய்க்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அவரது மகன்களும் மகள்களும் அவர் எதிரே வந்து நின்றனர். 

காலம் மாறிப் போச்சுப்பா. நாமும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்கனும். இல்லன்னா, கெட்டுப்போவது உறுதி. விஞ்ஞானம் எங்கியோ போய்டுச்சு. எல்லாமே கம்ப்யூட்டர்மயமாயிடுச்சு. நாங்க படிச்சவங்க. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம். எங்கள சுதந்திரமா செயல்பட விடுங்கப்பா. இனிமே எதிலும் நீங்க தலையிடாதீங்க. ஓரமா உட்கார்ந்து ஓய்வெடுங்க என்று முகத்தில் அறைந்தார்போல் சொல்லிவிட்டார்கள்.

அடுத்த நாள், அவர் முன் பேரப்பிள்ளைகள் வந்து நின்றனர். இவர்களோ மெத்தப் படித்தவர்கள். தமிழை மறந்துவிட்டு, சிவராமய்யாவிடம் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்தார்கள்.

தாத்தா, நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்க. நாங்க எல்லாருமே நிறைய படிச்சுட்டு வந்திருக்கோம். என்னன்ன பண்ணணும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். விவசாயம், வியாபாரம் எல்லாத்தையும் இனிமே நாங்களே பார்த்துக்கறோம். நீங்க எதுக்குமே அலட்டிக்க வேண்டாம் தாத்தா. பேசாம, ரெஸ்ட் எடுங்க.

பேரன் பேத்திகள் வந்து இப்படிச் சூழ்ந்துகொண்டு சொன்னபோது, அவரால் வாயடைத்துப்போக மட்டுமே முடிந்தது. அவரால் அப்போதைக்கு வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் போன பிறகு யோசித்தார், யோசித்தார், யோசித்தார்…
மறுநாள், பிள்ளைகள், பேரன் பேத்திகள் அனைவரையும் தனது அறைக்கு அழைத்தார் சிவராமய்யா. 

நீங்கள்லாம் சொல்றத கேட்க சந்தோஷமா இருக்கு. எல்லாம் சரிதான். ஆனா, எவ்வளவுதான் படிச்சாலும் அனுபவம்னு ஒண்ணு இருக்கு. அதை மறந்துடாதீங்க. நான் காலங்காலமா நல்லது கெட்டதுல நிறைய அனுபவப்பட்டவன். சுதந்திரமா செயல்படனுன்னு நெனைக்கிறீங்க. சந்தோஷம். ஆனா, விவசாயமோ வியாபாரமோ, எதுன்னாலும் என்கிட்ட வந்து கூச்சப்படாம யோசனை கேளுங்கப்பா!

எல்லாரும் தலையாட்டிவிட்டு, அவரது கால்களைத் தொட்டும் தொடமலும் கண்களில் ஒற்றிக்கொண்டு போனார்கள். 

ஆனால், பெயருக்குத்தான் தலையாட்டியிருக்கிறார்கள் என்ற உண்மை போகப் போகத்தான் அவருக்குப் புரிந்தது.

பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அவரவர் இஷ்டத்துக்கு முடிவெடுத்தார்கள். 
வேலைக்குத் திடீர் திடீரென ஆட்களை எடுத்தார்கள். மாற்றினார்கள். தூக்கி எரிந்தார்கள். 

விவசாயம், வியாபாரம் அனைத்திலுமே தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்தபோது, அதன் ஆபத்துகளை எண்ணித் தடுத்தார் சிவராமய்யா.

வயசான காலத்துல வாயை மூடிக்கிட்டு இருக்கமாட்டீங்களா, எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று வார்த்தை தடித்தபோது, சிவராமய்யா வாய்மூடி மௌனமானார்; யோசித்தார். 

சிவராமய்யா பழுத்த ஆன்மிகவாதி. 

தற்கொலை முடிவெடுத்த ஒரு ஏழைக்கு புத்திமதி சொல்லி, அவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்லி, இன்று அவன் நல்லபடியாக சந்தோஷமாக வாழ்வதை நினைத்துப் பார்த்தார். 

இன்று அவருக்கே அப்படி ஒரு சோதனை வந்துவிட்டது! ஆனால் அவருக்கு ஆலோசனை சொல்வது யார்?

ஊருக்குதான் உபதேசம் என்பது தன் அளவில் உண்மையாகிவிடக் கூடாது என்று நினைத்து, நன்றாக யோசித்து, ஒருநாள் யாருக்குத் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பினார். சாலைகளைத் தவிர்த்து காட்டுவழியில் நடக்க ஆரம்பித்தார்.

பெரிய மனிதர்தான். ஆனால், மனதில் இருந்த ஆற்றாமை அவர் கண்களில் கண்ணீராகப் பெருக்கெடுத்தது. கால்போன போக்கில் நடந்தார். 

வழியில் ஒரு பழைய முருகன் கோயில். அவர் கட்டிக் கொடுத்ததுதான். முருகா, போதும்ப்பா. குடும்பத்துக்குள்ளேயே மரியாதை இல்ல. இனி இந்த பூமிக்கு பாரமா எதுக்கு இருக்கனும். நீ கொடுத்த உசுர நீயே எடுத்துக்கோ என்று வேலைப் பிடித்துக்கொண்டு அழுதார்.

கோயிலில் ஒரு ஓரமாகப் படுத்திருந்த பூசாரி எழுந்து வந்து, சிவராமய்யா முன் துண்டை இடுப்பில் கட்டி பவ்யமாக வணங்கி நின்றார்.

என்னங்கய்யா இந்த ராத்திரி நேரத்துல? நீங்க முருகன்கிட்ட புலம்பினத கேட்டேன். என்ன உலகமய்யா இது. கலி முத்திப்போச்சு. வாங்க, இப்படி வந்து உக்காருங்க, என்ன ஆச்சுன்னு சொல்லுங்க என்று அவரை சமாதானப்படுத்தினார். 

தளர்ந்துபோய் திண்ணையில் உட்கார்ந்து, நடந்ததைச் சொல்லி முடித்தார் சிவராமய்யா.

என்னய்யா நீங்க. இந்த ஊருக்கே நல்லது சொன்ன நீங்க இப்படி நடந்துக்கலாமா. 
நடக்கற எல்லாத்தையும் முருகன் பார்த்துப்பான். நீங்க கவலைப்படாம வீட்டுக்கு போங்க. நீங்க வீட்டை விட்டு வந்தது யாருக்கும் தெரிய வேணாம். வாங்க, நானே உங்கள வீட்டுல கொண்டு போய் விடறேன் என்று அவரை தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, சிவராமய்யாவை அவர் வீட்டில் விட்டார். 

*

மறுநாளில் இருந்து, யாரிடமும் எதுவும் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது அறைக்குள்ளேயே ஐக்கியமாகிவிட்டார் சிவராமய்யா. யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. வேளா வேளைக்கு வரும் உணவை மட்டும் சாப்பிட்டு, இருந்தும் இல்லாதவராக, வாழ்ந்தும் வாழாதவராக, ஒரு நடைப்பிணம் போலவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார். 

ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. எல்லாருமே பணம் பணம் பணம் என்று அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தனர். 

நாட்கள் உருண்டன.

விவசாயம், வியாபாரம் எல்லாமே மோசமான விளைவுகளைச் சந்தித்தன. அனுபவப் படிப்பை நம்பாமல் ஏட்டுப் படிப்பை நம்பிய தலைமுறை ஒட்டுமொத்தமான தோல்வியைச் சந்தித்தது.

ஒருநாள் -

கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளப்போன இரண்டாவது மகனை அழைத்துப் பேசினார். 

இந்த உசுரு கடவுள் குடுத்தது. எல்லா பாரத்தையும் கடவுள்கிட்ட இறக்கி வெச்சிடு, அவன் பார்த்துப்பான் என்றார். 

குடும்பத்தின் தற்போதையை நிலையை உணர்ந்த எல்லோரும், அவர் முன் தலைகுனிந்து நின்றனர். 

வாழத் தெரியாம வாழ்ந்து தற்கொலை பண்ணிக்கிற மாதிரி, நீங்கி கட்டிக் காப்பாத்தின விவசாயத்தையும், தொழிலையும் நடத்தத் தெரியாம நடத்தி நஷ்டத்துல கொண்டுபோய் விட்டுட்டோம். எங்கள மன்னிச்சிடுங்கப்பா. இனிமே நீங்க என்ன சொல்றீங்களோ அதைக் கேட்டு நாங்க நடந்துக்கறோம் என்று கண்ணீர் விட்டனர். 

எனக்கு இப்போ தொன்னூத்தஞ்சி. இனிமே நான் என்ன பண்ண முடியும்.
உங்க ஆலோசனைய கேக்காமத்தான் நாங்க தோத்துப்போயிட்டோம். இனிமே நீங்க என்ன சொல்றீங்களோ அதைக் கேட்டு நாங்க நடந்துக்கறோம். இது சத்தியம் என்றபோது சிவராமய்யா மனம் கனிந்தார். 

வாங்கியதை திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறோம் என்பதை உணர்வதே தாரணை.

*
ஆசனம்

சிரசாசனம்

பெயர்க்காரணம்

சிரசு என்றால் தலை என்று பொருள். தலையை தரையில் ஊன்றி, கால்களை அதற்கு மேல் உயர்த்திச் செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு சிரசாசனம் என்று பெயர்.


செய்முறை

மண்டியிட்ட நிலையில் இருந்தபடி, இரண்டு கைகளையும் மடக்கவும்.

பின்னர் மடக்கிய கைகளை விலக்காமல் அப்படியே குனிந்து முன் பக்கமாக வைக்கவும். இரண்டு கைகளையும் ஒன்று கூட்டி விரல்களைக் கோர்த்துக்கொள்ளவும். 


கோர்த்துக்கொண்ட விரல்களின் சந்திப்பில் பின்னந் தலையை வைக்கவும்.

பின்னர் முழங்கால்களை தரையில் இருந்து உயர்த்தி விரைப்பாக ஊன்றி நிற்கவும். 

முகத்தை நோக்கி கால்களை ஒவ்வொரு அடியாக நகர்த்திக்கொண்டே வரவும். முதுகுப் பகுதி நேராக இருக்கும் வரை நெருக்கமாக நகர்த்திக்கொண்டு வரவும்.

முழங்கால்களில் வளைவு இல்லாமல் விரைப்பாக நீட்டி கால் விரல்களால் நிற்கவும்.

பின்னர் கால்கள் இரண்டையும் மெதுவாக மேல்நோக்கி உயர்த்தி சமநிலையில் நிற்கவும். 

இதே நிலையில் சுமார் ஆறு சுவாசங்கள் செய்யவும்.

கண்களை இறுக மூடி திறந்தும், கருவிழிகளை பக்கவாட்டிலும், மேலும் கீழும் சுழற்றவும்.

பின்னர் மெதுவாக முழங்கால்களைத் தளர்த்தி தரையில் வைத்துத், தலையை நிமிர்த்தி நேராக வரவும். தரையில் மெள்ள படுத்து அமர்ந்து பக்கவாட்டில் சாய்ந்து, பிறகு மல்லாந்து படுத்துவிடவும்.

பலன்கள்

தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் மிகுந்து, பிராணாயாமப் பயிற்சியின்போது மிகுதியான பிரகாசத்தை முகத்துக்கு வழங்குகிறது. 
 

மூளைக்குள் நல்ல ரத்த ஓட்டத்தை வழங்குவதால், அறிவாற்றல் பெருகி ஆனந்த நிலை ஏற்படுகிறது. 

இறை பக்தி, பிறர் மேல் அன்பு, சகிப்புத்தன்மை, எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது. 

***

இறுதி நிலை ஆசனங்கள்

எத்தனை ஆசனங்கள் செய்தாலும், இறுதியாகக் கட்டாயம் செய்ய வேண்டிய ஆசனங்கள் இரண்டு. அவை, படகாசனம் மற்றும் சாந்தி ஆசனம். இந்த இரண்டு ஆசனங்கள்தான் அதுவரை செய்த அத்தனை ஆசனங்களின் பலன்களையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கி முழுமையைத் தருகின்றன.

இந்த இரண்டு ஆசனங்களைத் தவிர்த்தால், முன்பு செய்த அத்தனை ஆசனங்களையும் தவிர்த்ததுபோல் ஆகும். 

நவுக்காசனம் (படகாசனம்)

மல்லாந்து படுத்த நிலையில் இரண்டு கைகளையும் நேராக நீட்டவும். கால்களை மேலே உயர்த்தவும். முகத்தைக் குனிந்தவாறு, தாடை மார்பில் படுமாறு வைக்கவும். 

முழங்கால்கள் வளையாமல் விரைப்பாக இருத்தல் வேண்டும். 

ஆறு சுவாசங்கள் எடுக்கவும். 

பிறகு கைகால்களை தளர்த்தியவாறு மெதுவாக விரிப்பின் மீது வைத்து இளைப்பாறவும்.

இதே ஆசனத்தை மூன்று முறை செய்யவும்.

பலன்கள்

உடலின் மையப் பகுதிக்கு குவித்த நிலையில் ரத்த ஓட்டம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை வழங்குகிறது.
இதனால், பிராணாயாமம் செய்யும்போது, அத்தனை நாடி நரம்புகளுக்கும் பிராண சக்தியை  சரியாகப் பகிர்ந்தளிக்கப்பட வகை செய்கிறது. 

***

சாந்தி ஆசனம் (சவாசனம்)

கைகால்களை விரிப்பின் மீது தளர்த்தி விரித்து வைத்துக்கொள்ளவும்.
ஐந்து முறை நீண்ட நெடும் சுவாசம் எடுக்கவும்.

பிறகு சுவாசத்தை இயல்பாக்கவும் 

கண்களை இறுக மூடி மூடி திறக்கவும்.

பிறகு கண்களை மேலும் கீழும், பக்கவாட்டிலும் என ஐந்தைந்து முறை சுழற்றவும். 
பிறகு மேல் நோக்கிப் பார்த்தவாறு கண்களைச் சொருகிவைக்கவும். சிறிது நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கவும்.

இறுதியாக, கண்களை மெள்ள மூடிவிடவும்.

இப்போது ஆறு எண்ணிக்கை நினைத்தவாறு சுவாசத்தை உள்ளிழுக்கவும்.

பனிரெண்டு எண்ணிக்கை நினைத்தவாறு சுவாசத்தை வெளியிடவும்.

பிறகு ஐந்து எண்ணிக்கை நினைத்தவாறு சுவாசத்தை உள்ளிழுக்கவும்.

பத்து எண்ணிக்கை நினைத்தவாறு சுவாசத்தை வெளியிடவும்.

இப்படியாக நான்கு... எட்டு...; மூன்று... ஆறு...; இரண்டு... நான்கு... என்று சுவாசித்து நிறைவு செய்யவும்.

பின்னர் சுவாசத்தின் போக்குவரத்தை கவனித்துக்கொண்டே இருக்கவும். இதனால் உடலும் மனதும் சமாதான நிலைக்குச் செல்லும்.

இதன்பிறகு, கால்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக உள்ளுறுப்புகளை மனதால் கவனித்தவாறு மேலே வரவும். ஒவ்வொரு பகுதியையும் கவனிக்கும்போதெல்லாம் ‘சாந்தி... சாந்தி... அல்லது அமைதி... அமைதி... அல்லது ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...’ என்று சொல்லிக்கொண்டே வரவும்.

தலை வரை நினைத்து, முதுகுத் தண்டுவடத்தின் வழியாக இறங்கிவந்து, இடுப்பு எலும்பு சந்திப்பில் வந்து சேரவும். அங்கிருந்து, உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், இறைவன் இறைவி இவர்களை எண்ணி வணங்கவும்.

பிறகு நீங்கள் இதுகாறும் பார்த்த, மனதைக் கவர்ந்த இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை மனக் கண்களில் பார்த்து இன்புறவும்.

பிறகு, மீண்டும் முதுகுத் தண்டுவடம் வழியாக மேலேறி, ஒவ்வொரு உள் உறுப்புகளை மனக் கண்ணால் பார்த்தவாறு, கால்கள் வரை கவனித்துப் பின்னர் பூர்த்திசெய்யவும். 

பின்னர் பத்திலிருந்து பூஜ்யம் வரையில் கீழ் முகமாக ஒவ்வொரு எண்களாக எண்ணிக்கொண்டே வரவும். பிறகு சற்றே ஓய்வு எடுத்துவிட்டு மெள்ள கண் விழித்து எழுந்து அமரவும்.

பலன்கள்

மனதுக்குப் பேரமைதி கிட்டும். 

உடல், மன வளம் ஏற்படும். 

தன்னம்பிக்கை, தைரியம், சந்தோஷம் மனதில் நிலவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com