உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று சாலையோர மதுக்கடைகளை மூடுக! ராமதாஸ் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று சாலையோர மதுக்கடைகளை மூடுக! ராமதாஸ் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர்  கூறியிருக்கும் அறிவுரைகள் சிறப்பானவை. ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உண்மையான அக்கறையில் சொல்லப்பட்டவை அவை.

தமிழக குடும்பங்களை சீரழிக்கும் மதுவை முழுமையாக ஒழிப்பதற்காக மக்கள் போராட்டங்களையும், சட்டப்போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வருகிறது. மக்கள் போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக அரசு அறிவித்து, முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடியுள்ளது. சட்டப்போராட்டத்தின் ஓர் அங்கமாக என்னால் தோற்றுவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி அதன் தலைவர் க.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டும் மூட ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அடுத்தக்கட்டமாக, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுக்கடைகளை அகற்ற முடியாது என மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் கூறியதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி,‘‘ குடிப்பவர்களுக்கு வசதிகளை செய்து தரக்கூடாது. எளிமையாக மது கிடைப்பது தான் மனிதர்களை குடிக்கத் தூண்டுகிறது. நெடுஞ்சாலைகளில் ஊர்தி ஓட்டிச் செல்பவர்களின் பார்வையில் படாத வகையிலும், நெடுஞ்சாலையிலிருந்து எளிதாக செல்ல முடியாத தொலைவிலும் தான் மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும். மதுக்கடைகளுக்கு செல்லும் வழியை காட்டும் வழிகாட்டி பலகைகள் கூட நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படக் கூடாது’’ என்று  அறிவுறுத்தினார். இவ்வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தவை கருத்துக்கள் தான்... ஆணைகள் அல்ல என்றாலும் கூட மக்கள் நலன் விரும்பும் ஆட்சியில் இவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு எதிராகவே அமைந்திருந்தன. குடிப்பவர்களுக்கு வசதிகளை செய்து தரக் கூடாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆகும். ஆனால், தமிழகத்தில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து மதுவை தாராளமாக கிடைக்க ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்தனர். சென்னை போன்ற பெரிய நகரங்களில், எந்த பகுதியில் இருப்பவரும் அதிகபட்சமாக இரு நிமிடங்களில் மதுக்கடைக்கு சென்று விடலாம், கிராமப்புறங்களில் 5 நிமிடங்களில் மதுக்கடைகளுக்கு சென்று விடலாம் என்ற அளவுக்கு தாராளமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்விளைவு தான் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கூட மதுவை பள்ளிக்கூடத்திற்கே வாங்கி வந்து பிறந்தநாள் கொண்டாடும் அவல நிலை நிலவுகிறது.

நெடுஞ்சாலைகளில் இருந்து எளிதில் செல்லமுடியாத தொலைவில் தான் மதுக்கடைகள் அமைக்கப் பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் ஆகும். ஆனால், இதை சற்றும் மதிக்காமல் சுமார் 2000 மதுக்கடைகள் மாநில நெடுஞ்சாலைகளில் தான் திறக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில், அதிநவீன வசதிகளுடன் குடிப்பகம் அமைக்கப்பட்டிருப்பதாக  விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அதன்விளைவு தான் கடந்த 12 ஆண்டுகளில் சாலைவிபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது.

இதற்கெல்லாம் மது தான் காரணம் என்பது ஆட்சியாளர்களுக்கே தெரியும் என்றாலும், மதுக்கடைகளை மூட முடியாத அளவுக்கு அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் தமிழகத்தின் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்து விட்டது. மது வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துவது அவலம் என்ற உண்மை கூட தமிழக ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகளை கொண்ட மாநிலம், சாலைவிபத்து மற்றும் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம், அதிக மது விற்பனையாகும் மாநிலம், மது வருவாயில் முதன்மை மாநிலம், அதிக மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் கொண்ட மாநிலம் என எதிர்மறைப் பெருமைகளை மட்டுமே தமிழகம் பெற்றது போதும். தமிழகத்தின் பெயரையும், தமிழக மக்களையும் காக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திராமல் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். மற்ற கடைகளையும் அடுத்த 3 மாதங்களில் மூடி தமிழகத்தை மதுவில்லா மாநிலமாகவும், மது இறப்பு இல்லாத மாநிலமாகவும் மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com