ரூபாய் நோட்டு வாபஸ் நீண்ட கால பலனளிக்கும்: பிரதமர் மோடி

ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் குறுகிய காலத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும், அதனால் நீண்ட கால பலன் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.
ரூபாய் நோட்டு வாபஸ் நீண்ட கால பலனளிக்கும்: பிரதமர் மோடி

ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் குறுகிய காலத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும், அதனால் நீண்ட கால பலன் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால் கிடைக்கப்போகும் பலன்கள் குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது, ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள யாகமாகும். இந்த யாகத்தில் மனப்பூர்வமாக பங்கேற்றுள்ள இந்திய மக்கள் அனைவரையும் வணங்குகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதை உறுதிசெய்ய வேண்டும்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையால், சிறிதளவு சிரமங்கள் ஏற்பட்டாலும், அது, நீண்ட காலப் பயன்பெறுவதற்கு வழி வகுக்கும். இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள், எதிர்கால சந்ததியினர் ஆகியோர் பயனடைவார்கள்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் ஊழலும், கருப்புப் பணப் பதுக்கலும் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. எனவே, இனி ஊரகப் பகுதிகள் வளர்ச்சியடையும். 

மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக ரொக்கமில்லா பரிவர்த்தனை நடைமுறையைப் பின்பற்றுவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மோடி அந்த சுட்டுரைப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com