காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பா.ம.க. வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பா.ம.க. வலியுறுத்தல்

சென்னை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: -

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. காவிரிப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண உதவும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

இன்றையத் தீர்ப்பைத் தொடர்ந்து வரும் 15-ம் தேதி பிற்பகல் முதல் காவிரிப் பிரச்னை குறித்த வழக்குகளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. அதன் இறுதியில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆணையிடலாம்.

அதை வேறு வழியின்றி மத்திய அரசு நிறைவேற்றலாம். இவை அனைத்தும் சட்டப்படியும், நீதிமன்ற ஆணைப்படியும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள். ஆனால், தார்மீக நெறிமுறைகளின்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 20-ம் தேதியும், அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதியும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தான், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்டத்தின்படி இல்லாவிட்டாலும், தார்மீக நெறிப்படி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உயிர்பெறுகிறது.

எனவே, அத்தீர்ப்பையும், தார்மீக நெறிகளையும் மதித்து காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com