ஜெயலலிதா நினைவிடத்தில் புதுமண தம்பதிகள் ஆசி கேட்டு அஞ்சலி

சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்றாவது நாளாக இன்று வெள்ளிக்கிழையும் பொது மக்கள்
ஜெயலலிதா நினைவிடத்தில் புதுமண தம்பதிகள் ஆசி கேட்டு அஞ்சலி

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்றாவது நாளாக இன்று வெள்ளிக்கிழையும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்த கார்த்திக்-சிநேகா என்ற புதுமண தம்பதிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் வரிசையில் நின்று வந்து ஆசி கேட்டு அஞ்சலி செலுத்தினர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமையைப் போன்றே நேற்று வியாழக்கிழமையும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பங்களாக வந்திருந்தனர்.
காலையிலேயே அதிகளவு வந்ததால் அவர்களை  காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். அனைவரையும் வரிசையாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பல பெண்கள் கதறி அழுது கண்ணீர் விட்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.
உணவு-குடிநீர் ஏற்பாடு: பொது மக்கள் அதிகம் கூடியதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
மூன்றாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் பொது மக்கள், அதிமுகவினர் அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயலலிதாவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்திவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்றும் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் ‘அம்மா.. அம்மா...’ என்று சிலர் கதறிக்கொண்டே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள் பெண்கள் என பலரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வரும் மக்களுக்கு அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டு வருகின்றன.  
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அதிமுக கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக்-சிநேகா திருமணம் இன்று காலை பெசன்ட் நகரில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதிகள் கார்த்திக்-சினேகா இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் வரிசையில் நின்று வந்து அஞ்சலி செலுத்தினர்
இதுகுறித்து கார்த்திக்-சிநேகா கூறுகையில், “நாங்கள் திருமணம் முடிந்தவுடன் முதல்வர் அம்மாவை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால், அம்மா உடல்நிலை குறைவால் திடீரென்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம். இன்று காலை திருமணம் முடிந்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி அம்மாவிடம் ஆசி பெற்றோம் என்று கூறினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com