பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் 

பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் நகரத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் இன்று காலை பணம் எடுப்பதற்காக வரிசையில் காத்துக் கிடந்த கோபால் ராவ் என்ற 80 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். 
கோபால் ராவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலும், மதுரையிலும் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த இருவர் உயிரிழந்த நிலையில் இவரையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாடு முழுவதும் குழந்தை, மூதாட்டிகள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கின்றனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழைகளும், நடுத்தர மக்களும் தான் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோடீஸ்வரர்களையும், கருப்புப்பண முதலைகளையும் இந்நடவடிக்கை சற்றும் பாதிக்கவில்லை. சென்னையில் சேகர் ரெட்டி என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வில் புதிய ரூ.2000 தாள்கள் மட்டும் ரூ.10 கோடி அளவுக்கு சிக்கியுள்ளது.

பெங்களூரில் நடந்த ஆய்வில் ரூ.5.70 கோடி அளவுக்கு புதிய ரூபாய் தாள்கள் பிடிபட்டுள்ளன. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்காக அதிகாரி ஒருவர் ரூ.100 கோடி கருப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ஒட்டுமொத்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையும் பயனற்றுப் போக வாய்ப்புள்ளது.

ரூபாய் தாள்கள் செல்லாது அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில் புதிய ரூபாய் தாள்களின் புழக்கத்தை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்த உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com