பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தடுத்த தந்தை மீது வழக்கு!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள இ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 நாட்களுக்கு முன் காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத குருவின் அறிவுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார். அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார்.

மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று அழைத்துச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, உரிய விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாய் ஹப்சத், தந்தை அபுபக்கர் மீது சிறார் நீதிச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.

இந்நிலையில், குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முக்கம் போலீஸார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com