விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை: திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுப்பு 

அங்கீகாரமில்லாமல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றால், எந்த காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது
விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை: திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுப்பு 

சென்னை, 

அங்கீகாரமில்லாமல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றால், எந்த காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். 

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு காரணமாக, ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியதோடு, தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் குறைந்துள்ளன. எனவே, தங்களையும் ஒரு மனுதாராக இந்த வழக்கில் இனைக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் வழக்குரைஞர் விபிஆர் மேனன் என்பவரும், இந்த விவகாரத்தில் விரிவான கொள்கையை அரசு வகுக்கும்படி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மூன்று மனுக்களும் இணைக்கப்பட்டு, தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவை நீக்கக்கோரி 11 அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.

அதன் பின்னர் நடந்த விவாதம் வருமாறு:

தடையை நீக்கினால், விவசாய நிலங்கள் பாழாகும். குறைந்த விலைக்கு விவசாயகளிடமிருந்து,  நிலத்தை வாங்கி கோடிக் கணக்கில் விற்கப்படுகிறது. எனவே, தடையை நீக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுப்படி செய்ய வேண்டும்.

மத்திய, மாநில நெடுஞ்சாலைசாலை அருகே போடப்படும் -பிளாட்-களால், அந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சினை என்றால் சாலைக்கு வந்து போராடுகின்றனர். இதனால் மற்றொரு பிரச்சினை ஏற்படுகிறது என்றார் மனுதாரரான வழக்குரைஞர் யானை ராஜேந்திரன்.

கூடுதல் தலைமை வழக்குரைஞர்:

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையால், சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்வதில்லை.

நீதிபதிகள்:

இந்த பிரச்சினை தொடர்பாக, அரசிடம் உள்ள கொள்கை என்ன. எப்படி தீர்க்க போகிறீர்கள். இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் தரப்பு வழக்குரைஞர்:

பத்திரப்பதிவு தடை காரணமாக, அரசுக்கு சுமார் ரூ.274 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோடிக்கணக்கான முதலீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தடையை நீக்க வேண்டும்.

நீதிபதிகள்:

கடத்தல் வியாபாரம் மூலம் தான் பல கோடி வருவாய் கிடைக்கும். அதற்காக, அவற்றை அனுமதிக்க முடியுமா?. மேலும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். மேலும் நிர்பந்திக்க வைக்கும் யுக்திகளை பயன்படுத்த வேண்டாம்.

இந்த விவகாரத்தில், அரசும், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பு விவாதித்து நிலங்களை வகைப்படுத்தி, ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அவ்வாறு அந்த கொள்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் தான், தடை உத்தரவில் மாற்றமோ அல்லது நீக்கமோ குறித்து பரிசீலிக்க முடியும் என்றுக் கூறி வழக்கின் விசாரணையை நவம்பர் 16-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com