முதல்வர் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல் நிலை குறித்து எந்தவித வதந்திகளை பரப்பக்கூடாது என்று, திமுக உறுப்பினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல் நிலை குறித்து எந்தவித வதந்திகளை பரப்பக்கூடாது என்று, திமுக உறுப்பினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர்.நவநீத கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: திமுகவில்  கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டேன். முகநூல், டூவிட்டர் மூலமாக திமுகவினர் மற்றும் நண்பர்கள் மத்தியி்ல் பிரசாரம் செய்து வருகிறேன். கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி எனக்கு கட்-செவி மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன்.

அதில் தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பதிவு என்னுடைய அசல் பதிவு அல்ல. வேறு ஒருவரிடமிருந்து வந்ததை நான் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தேன். 

ஆனால் அதேநேரம் முதல்வர் நல்ல முறையில் குணமடைந்து மீண்டும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் எனது முகநூல் பதிவை மறுநாளே அழித்துவிட்டேன்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அதிமுக நகரச் செயலாளர் வி.கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்யவும், என்னுடைய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

இதே போன்று திமுகவினர் பலரின் சமூக வலைதள பக்கங்களை முடக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது. எனவே, எங்களை கைது செய்வதற்கும், எங்களின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கும் போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும்.  மேலும் எங்களின் அன்றாட பணிகளில் தலையிடவும் போலீஸார் குறுக்கிடக்கூடாது என்று கோரியிருந்தார். 

இதேபோன்று மற்றொரு திமுக நிர்வாகியான ராஜீவ் காந்தி தனியாக மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற அனுமதியின் பேரில், இணைக்கப்பட்ட இரண்டு மனுக்களும் தனி நீதிபதி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நடைபெற்ற இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: பொது இடங்களில், எந்தவித வதந்திகளுக்கும் மனுதாரர் இடம் அளிக்கக்கூடாது. அதுபோன்ற செயலானது, சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல் நலம் குறித்தும், எந்தவித வதந்திகளை பரப்பக்கூடாது. அதேபோன்று, அவர்கள் முதல்வர் உடல் நலம் குறித்தும் கருத்து தெரிவிக்க பொருத்தமானவர்கள் இல்லை.

விசாரணையின் போது, மனுதாரர்களை துன்புறுத்தப் போவதில்லை. அது போன்ற எண்ணம் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com