கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசு 2013-14 ஆம் ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு வாகன வாடகை ரூ.100 சேர்த்து ரூ.2650 என்று நிர்ணயம் செய்தது. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலையை தராமல் கரும்பு விவசாயிகளை அலைக்கழித்து, அரசின் பரிந்துரை விலையில் விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 300 குறைத்து வழங்கின. அந்த வகையில் 2013-14 ஆம் ஆண்டு ரூ.300 கோடியும், 2014-15 இல் ரூ.250 கோடியும், 2015-16 இல் ரூ.450 கோடியும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

2013 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத்தரக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துப் போராடி வருன்றனர்.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அறிவித்தார். ஆனால், தமிழக அரசு இதுவரையில் அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது கரும்பு விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு இன்னல்களுடன் கடன் சுமைகளைத் தாங்கிக் கொண்டும், தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாயிகள் கரும்பு உற்பத்தி செய்து, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிவிட்டு, அரசு நிர்ணயம் செய்துள்ள கொள்முதல் விலையைக் கூடப் பெற முடியாமல் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், 2004-09 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு தனியார் ஆலைகள் தரவேண்டிய லாபப் பங்குத் தொகை ரூ.350 கோடியை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தர மறுக்கின்றனர். எனவே, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை இரண்டு ஆயிரம் கோடி ரூபாயை 15 விழுக்காடு வட்டியுடன் மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.

2016-17 ஆம் ஆண்டு நடப்பு கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தாமல், கடந்த ஆண்டு வழங்கிய விலையான ரூ. 2ஆயிரத்து 300 மட்டுமே நிர்ணயம் செய்தது விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. தமிழக அரசு நடப்பு கரும்புப் பருவத்திற்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர். நேற்று இரவு காவல்துறையினர் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்துள்ளனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சர்க்கரை ஆலை நிர்வாகங்களை அறிவுறுத்தி, கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com