176 முறை தோல்வியை தழுவிய பத்மராஜன் 177வது முறையாக வேட்புமனு தாக்கல்

176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை
176 முறை தோல்வியை தழுவிய பத்மராஜன் 177வது முறையாக வேட்புமனு தாக்கல்

திருப்பரங்குன்றம்: 176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன். பழைய லாரி மற்றும் பஸ்டயர்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தேர்தல்களில் வேட்புமணு தாக்கல் செய்து வருகிறார். முதன் முதலாக 1998-ஆம் ஆண்டு மேட்டூர் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு கூட்டுறவு சங்கத்தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டார்.

ஒரே சமயத்தில் 6 நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். தனது மகன் ஸ்ரீஜேஸ் மூன்று வயதாக இருக்கும்போதே தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு அழைத்து சென்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் தேல்தலில் போட்டியிடும் வயதை காரணம் காட்டி வேட்பு மணு பெறாமல் திருப்பி அனுப்பினார். ஒவ்வொரு தேர்தலின்போதும் பரபரப்பை ஏற்படுத்த போலீஸ் பாதுகாப்பு வாங்குவது இவரது வழக்கம். சில சமயங்களில் டெப்பாசிட் செலுத்த பணம் இல்லாமல் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார்.

இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இன்று வீரக்கல் புதூர் பேரூராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மணு தாக்கல் செய்தார். பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதால் நல்லநேரம், நல்ல நாள் பாக்காமல் முதல் வேட்பாளராக வேட்புமணு தாக்கல் செய்ததாக பத்மராஜன் தெரிவித்துள்ளார். தந்தையின் உள்ளாட்சி தேர்தல் செலவுக்காக தனது சம்பளத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை பத்மராஜனின் மகன் ஸ்ரீஜேஸ் பத்மராஜன் வழங்கியது உண்டு.

சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பத்மராஜன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து லக்னோ, நரசிம்மராவை எதிர்த்து நந்தியால் தொகுதியில் நரசிம்மராவை எதிர்த்து போட்டியிட்டபோது, இவரை சிலர் கடத்திச் சென்றதால் நாடு முழுவதும் அறியப்பட்டார். பின்னர், பிரதமர் மோடியை எதிர்த்து வதோரா மக்களவைத் தொகுதியிலும், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர், ஆண்டிபட்டி, ஆர்.கே.நகரிலும், முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம், மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியுற்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து பத்மராஜனும் போட்டியிட்டார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில், இதுவரை 176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பத்மராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. தோல்வியில் சாதனை புரிய வேண்டும். இதுவரை 176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். இதுவும் ஒருவகையில் சாதனைதான்.
தோல்வியில்தான் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். வெற்றி அதிக நாள் நீடிக்காது. எனது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யக்கோரி கடிதம் அனுப்பியுள்ளேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com