சிறார்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் பிரிவினைவாதிகள்: மெஹபூபா குற்றச்சாட்டு

காஷ்மீர் பிரிவினைவாதிகள் சிறார்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறார்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் பிரிவினைவாதிகள்: மெஹபூபா குற்றச்சாட்டு

உதம்பூர், 

காஷ்மீர் பிரிவினைவாதிகள் சிறார்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள் செயல்படுவதை பிரிவினைவாதிகள் விரும்பவில்லை.

ஏனெனில் இங்குள்ள குழந்தைகள் கல்வி அறிவு பெற்றுவிட்டால் அவர்கள் கூறும் இடங்களில் கல்வீசித் தாக்குதல் நடத்தமாட்டார்கள். தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும்,

வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி படிக்கவைக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள், காஷ்மீரில் உள்ள ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. ஏனெனில் படித்தால் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுவிடுவார்கள்.

காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை பிரிவினைவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். சிறார்களும், இளைஞர்களும் கல்வி அறிவு இல்லாமல் இருந்தால்தான் அவர்களை கற்களை வீசும் இயந்திரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் மூடியுள்ளன. அவற்றை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று முறை காஷ்மீருக்கு வந்துள்ளார்.

நிதியமைச்சர், அனைத்துக் கட்சிக் குழுவினர் என அனைத்துத் தரப்புமே காஷ்மீரில் இயல்பு நிலை ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்து பேச்சு நடத்துகின்றனர். ஆனால், அவர்களைப் பிரிவினைவாதிகள் ஒருமுறை கூட சந்திக்கவில்லை.

காஷ்மீரில் மோதலின்போது காயமடைந்த ஏழைச் சிறார்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்துவிட வேண்டும் என்றுதான் பிரிவினைவாதிகள் நினைக்கிறார்கள். அப்போதுதான் காஷ்மீரில் அமைதியின்மையை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.

மோதலில் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் யாரும் உயிரிழக்கவில்லை. பிரிவினைவாதத் தலைவர்களின் வீட்டு சிறார்களுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை என்றார் மெஹபூபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com