ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் நல்ல பலன்களை அளிக்கும்: வெங்கய்ய நாயுடு

ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் நல்ல பலன்களை அளிக்கும் என்றும் இந்தத் திட்ட விவகாரத்தில் உத்தரப் பிரதேசம் பின்தங்கியுள்ளது என்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரி
ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் நல்ல பலன்களை அளிக்கும்: வெங்கய்ய நாயுடு

புதுதில்லி, 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் நல்ல பலன்களை அளிக்கும் என்றும் இந்தத் திட்ட விவகாரத்தில் உத்தரப் பிரதேசம் பின்தங்கியுள்ளது என்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தங்கள் மாநிலங்களில் பொலிவுறு நகரத் திட்டங்கள் அமைய வேண்டும் என்று மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த இந்த மாபெரும் திட்டத்தில் உத்தரப் பிரதேசம் இதுவரை ஆர்வமே காட்டவில்லை.

நாட்டின் நிலையை மாற்றியமைக்கக் கூடிய இந்தத் திட்டத்தின் பலன்கள் விரைவில் தெரிய வரும். முதல்கட்டமாக 20 நகரங்களில் மக்களின் சிறப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்தக் கூடிய பல்வேறு திட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாட்டின் அணுகுமுறையில் கடந்த காலத்தில் இல்லாத மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதால் பொலிவுறு நகரத் திட்டமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

போட்டியிடும் மனோபாவத்துடன், பல்வேறு திட்டங்களை மாறுபட்ட வகையில் அமல்படுத்த வேண்டும் என்ற புதிய சிந்தனையை நகரங்கள் கொண்டுள்ளன. மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டமானது நகர்ப்புற மறுமலர்ச்சிக்கான மைல்கல்லாகும்.

இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்காக இதுவரை தேர்வாகியுள்ள 60 நகரங்களும் சுமார் ரூ.1,35,000 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்மொழிந்துள்ளன. நகர்ப்புற வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் சொற்பமான முதலீடுகளே செய்யப்பட்டு வந்த நிலையில் இது மிகப்பெரிய தொகையாகும்.
கழிவுகள் மேலாண்மை என்பது சவாலானது. இந்தியாவில் உள்ள நகரங்களில் ஆண்டுதோறும் சுமார் 6.5 கோடி டன் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை 50 லட்சம் டன் உரமாக மாற்றவும், கழிவுகளில் இருந்து 400 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அரசு திட்டம் வகுத்துள்ளது.

போட்டியை அடிப்படையாகக் கொண்ட பொலிவுறு நகரத் திட்டத்தின் அமலாக்கமானது, நகரங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஒரு மாற்றம் ஏற்பட உதவியுள்ளது. நாட்டின் மொத்த நகர்ப்புற மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள 100 நகரங்கள் தற்போது விரிவான செயல்திட்டத்தை வகுத்துள்ளன.

உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகள், கிடைக்கும் வளங்கள் மற்றும் வளங்களை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயல்திட்டங்கள் குறிப்பிடத்தக்க வையாக உள்ளன என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com