ஜிஎஸ்டி சட்டத்தை ஏப்ரல் முதல் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: அருண் ஜேட்லி

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான சட்டத்தை திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெ
ஜிஎஸ்டி சட்டத்தை ஏப்ரல் முதல் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: அருண் ஜேட்லி

புது தில்லி, 

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான சட்டத்தை திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தில்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் 4-ஆவது கூட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, இதுதொடர்பாக அருண் ஜேட்லி பேசியதாவது:

ஜிஎஸ்டி சட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான 2016-ஆம் ஆண்டு அரசமைப்பு திருத்த சட்டம் (101-ஆவது திருத்தம்) நிறைவேற்றப்பட்டு ஓராண்டு வரையிலும், அதாவது 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி வரையிலும், உற்பத்தித் துறை மீது கலால் வரி விதிக்கவும், சேவை அளித்தல் துறை மீது சேவை வரி விதிக்கவும் மத்திய அரசுக்கு இச்சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அந்தச் சட்டத்தில் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி வரையிலும், விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரியை (வாட்) வசூலிப்பதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் முதலாவது கூட்டம், சுமுகமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்திருந்தது என்றார் அருண் ஜேட்லி.

கூட்டத்தில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேசியபோது, ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கேட்டதுடன், அந்தச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் அளித்தனர். அப்போது அவர்கள், ஜிஎஸ்டி வரிகள் எங்கு யாரால் வசூலிக்கப்படும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக யாரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையும், துல்லியத்தன்மையும் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதேபோல், சிறு வணிகர்களிடம் ஜிஎஸ்டி வரி தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால், அவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மிகப்பெரிய பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com