ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்தோர் மீது சிபிஐ விசாரணை தேவை: பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் விநியோகித்தவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் விநியோகித்தவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அத்துமீறிய தேர்தல் முறைகேடுகள் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் நடைபெற்றதன் விளைவுதான், இன்றைக்கு ஆர்.கே.நகரில் எவ்வித கூச்சமும் இன்றி, பண விநியோகம் செய்யும் துணிச்சலைக் கொடுத்து விட்டது. 

நியாயமான தேர்தலை நடத்தும் சூழ்நிலை உருவானதும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஜனநாயக முறைப்படி நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் இடைத்தேர்தலின் போது பண விநியோகத்துக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாக இருந்த அனைத்து காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேர்தல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள், இவ்வளவு பறக்கும் படைகள் இருந்தும் பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்தது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

ராமதாஸ்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகத் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம், அதற்குக் காரணமான அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?  

 வாக்காளர்களுக்கு முதல்வர் மற்றும் 30 அமைச்சர்களும் ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்ததாகத் தேர்தல் ஆணையம் ஆதாரத்துடன் கூறியுள்ளது. வருமான வரித் துறையிடமும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, அதிமுக அரசைக் கலைக்க வேண்டும். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்

ஓ.பன்னீர்செல்வம்: ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அமைச்சர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அங்கு தேர்தல் நடைபெறும்.

ஜி.கே.வாசன்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பது வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யும் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழலை ஏற்படுத்தியது ஆளும் கட்சியும், எதிர் கட்சியுமே. 

வருமான வரித்துறை மூலம் வெளிவந்திருக்கும் தகவல்கள் அடிப்படையில் பொறுப்பு வகிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த பொறுப்பில் இருப்பது நல்லதல்ல. இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியின் செயல்பாட்டால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com