முத்தலாக் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
முத்தலாக் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

புதுதில்லி:  முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் மத பெண் ஒருவர் தொடுத்துள்ள 5 ரிட் மனுக்களும் அடங்கும்.

இந்த மனுக்களை கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய வழக்கங்களை மிகவும் முக்கியமான பிரச்னைகள் என்றும், இதுகுறித்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு இந்த மாதம் விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது.

அதன்படி, முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நஸீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது முத்தலாக் முறை இஸ்லாம் மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றா என்பது குறித்து ஆராயப்படும் எனவும், முத்தலாக் விவாகரத்து முறையில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு, அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இதையடுத்து கடந்த மே மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com