இரட்டை நாயகர்களின் விஸ்வரூபம்? தினகரனின் ஸ்லீப்பர் செல்ஸை வீழ்த்துமா!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் நாளொரு மாற்றமும் பொழுதொரு மாற்றமும் என போய்க் கொண்டிருக்கும் ...
இரட்டை நாயகர்களின் விஸ்வரூபம்? தினகரனின் ஸ்லீப்பர் செல்ஸை வீழ்த்துமா!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் நாளொரு மாற்றமும் பொழுதொரு மாற்றமும் என போய்க் கொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்று அரசியல் நோக்கர்களை மட்டுமில்லாமல் சாமானியனையையும் திகில்படம் பார்க்கும் உணர்வோடு இருக்கையின் நுனிக்கே கொண்டுவந்து உற்று நோக்க வைத்துள்ளனர் நம் ஆளும் தரப்பினர். 

ஜெயலலிதாவின் மரணத்தில் தொடங்கி தியானத்தில் தொடர்ந்து தில்லிக்கும் சென்னைக்குமான அங்கலாய்ப்புக்குப் பின் அணி சேர்ப்பில் வந்து நிற்கும் நம் பரபரப்பு கதாநாயகர்களுக்கு இப்போது வில்லனாக சொந்த வீட்டில் இருந்தே உருவெடுத்துள்ள பங்காளியை எப்படி இவர்கள் சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் அநேகமாக உச்சக்கட்ட காட்சியாக இருக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.  

நாங்கள் எல்லோரும் பங்காளிகள் எங்களால் இந்த ஆட்சிக்கு பங்கம் வராது என்று கூறி வந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், அணி இணைப்புக்குப் பிறகு தங்கள் போக்கை கொஞ்சம் மாற்றி கொண்டு ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர்.

இதற்கிடையில் ஜனநாயக முறையில்தான் இந்த ஆட்சியை வீழ்த்துவோம் என்று கொள்கைப் பிடிப்போடு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரு பக்கம் இரட்டை நாயகர்களுக்கு எதிராக நிற்பதும் காட்சிகளின் போக்கில் விறுவிறுப்பை கூட்டுகிறது. 

டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை நடத்த முடியாது என்று சவாலாகவே கூறி வருகின்றனர். எங்களுக்கு ஆதரவாக 60 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று திவாகரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் புரட்சித் தலைவர் உருவாக்கி, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட கட்சியை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. தினகரனின் ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தற்போது வெளிப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் எழுப்பும் ஒரே கேள்வி சின்னத்தை முடக்க காரணமான ஓபிஎஸ்-ஐ துணை முதல்வராக்கியது ஏன்? என்பதுதான். என்றாலும் பார்த்துக்கொண்டிருக்கும் திருவாளர் மகாஜனங்களோ..தொடக்கத்தில் காலில் விழுந்து வரவேற்ற இரட்டை நாயகர்கள் திடீர் என சசிகலா, தினகரன் தரப்பினரை எதிர்த்து நிற்பது ஏன். இருஅணிகளும் இணைந்து நாங்கள் ஆட்சியையும் கட்சியையும் நடத்திக்கொள்கிறோம் என்று சொன்னால் சந்தோசமாக நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விடும் அளவுக்கு நான் பற்றற்றவனாக இருக்கிறேன் என்று, வசனம் பேசிய தினகரன் இப்போது கட்சியை காக்கப் பிறந்த கடவுள் நான் தான் என்பது போல செயல்படுவதும் ஏன்  என்று கேட்கின்றனர். 

பொதுவாக தமிழக அரசியலில் ஜாதிமதம் கடந்த தலைவர்களே காலத்தை வென்று நின்றுள்ளனர். இன்று இருப்பவர்களும் தங்களை அப்படியே காட்டிக் கொள்ள விரும்பினாலும், தெரிந்தோ தெரியாமலோ கதையின் போக்கில் சிலர் பூசிக்கொண்டிருக்கும் ஜாதி மதச் சாயம் வெளுத்து விடுகிறது. இன்றைய தமிழகப் பரபரப்பு அரசியலுக்குள்ளும் ஜாதி பூச்சு இருக்கிறதோ என்றும் பார்வையாளர்கள் சிலர் எண்ணுகிறார்கள். 

இந்நிலையில்தான் திருப்பத்தை கொண்டுவரும் முக்கிய கதாபாத்திரமான ஆளுநர் இன்று மீண்டும் சென்னை வந்துள்ளார். நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆனாலும் துணைப்பாத்திரமாக நின்று இரட்டை நாயகர்களை தாங்கிப் பிடிக்கும் தில்லி தலைமைக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும்  ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் நான் மக்களுக்காக நான் என்று உழைத்த அதிமுக நாயகி இருந்தவரை, இருக்கும் இடமே தெரியாமல் இருந்த பல கதாபாத்திரங்கள், அக்கட்சியின் நாயகி மறைந்தப் பின் தங்களை தாங்களே கதையின் நாயகர்களாக காட்டிக் கொண்டு உலா வருவதை பாரக்கும்போது தான் நாயகியின் வலிமை, அவரை விரும்பாதவர்களுக்கும் தெரியவருகிறது. 

இன்று இரட்டை நாயகர்களாக கைகோர்த்துள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டாலும் இதுவரை தேர்தல் ஆணையம்  முடக்கி வைத்த அ.தி.மு.க., என்னும் பெயரையும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் மீட்க முயற்சி எடுக்கவில்லை என்பதும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணைக்கு இன்னும் நீதிபதியை அறிவிக்கவில்லை என்பது ஒரு குறையாக தெரிகிறது.

மேலும் கதையின் திருப்புமுனை போல் புயல் வேகத்தில் வந்த ஜெயலலிதாவின் உறவினரான  தீபா திடீரென வருவதும் போவதுமாக இருப்பது சுய ஆதாயத்தில் செயல்படுவதாகவே காட்டுகிறது. தற்போது க்ளைமேக்ஸ் எட்டுகின்ற நிலையிலாவது ஜெயலலிதாவின் உயில் விவாகாரம் குறித்து தீபா கேள்வி எழுப்புவாரா..அல்லது இரட்டை நாயகர்கள் ஏதேனும் தகவல் வெளியிடுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. 

மேலும் பெரும் சிக்கலான இந்த கதைப் பின்னலுக்குள் மறைமுக கதாபாத்திரங்கள் இருப்பதையும் உணரமுடிகிறது. நாளை என்ன நடக்கும் என க்ளைமேக்ஸை எதிர்பார்த்துள்ள நிலையில், முடியும் பொழுது விடியும், விடியும் பொழுது முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

                                                                             - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com