“என் கர்ப்பப்பையை எடுக்கச் சொன்னார்கள்”: 19 வயதிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

எப்படி இந்த நோய் வருகிறது, எப்படியெல்லாம் பரவாது என்பதையெல்லாம் நாம் பள்ளி பாடத்திட்டத்திலேயே படித்துவிட்டோம். இதற்கு மேலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
“என் கர்ப்பப்பையை எடுக்கச் சொன்னார்கள்”: 19 வயதிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தத் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. எப்படி இந்த நோய் வருகிறது, எப்படியெல்லாம் பரவாது என்பதையெல்லாம் நாம் பள்ளி பாடத்திட்டத்திலேயே படித்துவிட்டோம். இதற்கு மேலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை உலக எய்ட்ஸ் தினமான இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

1955-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக “நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்!” என்று வெளிப்படையாக முன் வந்து சொன்னவர் இந்த கௌசல்யா பெரியசாமி. தனது இரண்டு வயதிலேயே தாயை இழந்த இவர் தான் பாட்டியுடன் வளர்கிறார். இவருடைய 19-ம் வயதிலேயே லாரி ஓட்டுநரான உறவினர் ஒருவரை இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான இரண்டு வாரத்திலேயே கௌசல்யா நோய் வாய்ப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது. எய்ட்ஸ் வருவதற்கான காரணம் என்னவென்று யோசித்த போதுதான் தெரிய வருகிறது இவரது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்பதும் அந்த விஷயம் அவருக்கு முன்னரே தெரிந்தும் இவரைத் திருமணம் செய்துள்ளார் என்பதும்.

அடுத்த 6 மாதத்தில் கௌசல்யாவின் கணவர் தற்கொலை செய்து இறந்து போகும் நிலையில் மீண்டும் அனாதை ஆக்கப் படும் கௌசல்யா செய்வது அறியாமல் தவிக்கிறார். அந்தச் சமயத்தில் இது ஒரு உயிர்க் கொல்லி நோய் என்பது கூட அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு விதமான தீர்வுகளை சொல்ல, ஒரு கட்டத்தில் ஒரு மருத்துவர் “உங்களது கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள், அதன் பின் நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்” என்று கூறியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர்களுக்கே எய்ட்ஸ் பற்றிய முழு விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. 

முதலில் குழப்பத்தில் வாடிய கௌசல்யா அதன் பின்னர் தம்மைப் போன்றே தனது ஊரில் பல பெண்கள் திருமணமான சில நாட்களிலேயே தங்களது கணவர்களால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து இதற்குத் தீர்வு காண முடிவு செய்கிறார். தனது உறவினர்களின் எதிர்ப்பை மீறி ஊடகங்களுக்கு முன்னாள் ‘நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருடன் இனைந்து ‘பாஸிடிவ் வுமன் நெட்வொர்க்’ (Positive Women Network) என்கிற ஒரு மறுவாழ்வு அமைப்பை துவங்குகினார்.

இப்போது இந்த அமைப்பின் மூலமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20,00,000-திற்கும் அதிகமான பெண்கள் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள். எய்ட்ஸ் என்பது ஒரு உயிர்க் கொல்லி நோய்தான் என்றாலும், எப்போது இறக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்களின் தன்னம்பிக்கை தான். 20 வயதில் தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று தெரிந்தவுடன், அவ்வளவுதான் நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என இவர் எண்ணி ஒரு மூலையில் முடங்கியிருந்தால் 20,00,000 பெண்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பி இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com