வரலாம் வரலாம் வா...: வம்பு கட்டிய பாகிஸ்தான் - வரிந்து கட்டும் இந்தியா!

கடந்த 7 ஆண்டுகளிலேயே இந்த ஆண்டு மட்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கோட்டை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டை
வரலாம் வரலாம் வா...: வம்பு கட்டிய பாகிஸ்தான் - வரிந்து கட்டும் இந்தியா!

புதுதில்லி: கடந்த 7 ஆண்டுகளிலேயே இந்த ஆண்டு மட்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கோட்டை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி 720க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்தியப் படையினரின் கவனத்தை திசை திருப்பி, பயங்கரவாதிகளை நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.  

கடந்த சில மாதங்களில் மட்டும் எல்லையோரங்களில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் பாகிஸ்தான் படையினர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், சிறிய ரக குண்டுகளை எறிந்தும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிகள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தது.

இந்நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு மட்டும் கடந்த அக்டோபர் வரையில், 724 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் எல்லாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் மட்டும் நடத்தப்பட்டவையாகும்.

மேலும், பாகிஸ்தானின் இந்திய அத்துமீறலில் 12 பொதுமக்கள், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 67 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 12 பேர் படுகாயமடைந்து செயல்பட முடியாத நிலையில் உள்ளனர்.

இதற்கு முன்பு வரையில், அதாவது கடந்தாண்டு அக்டோபர் வரையில், இது போன்ற தாக்குதலில் மொத்தம் 449 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்தாண்டு மட்டும் தான், 724 பேர் உயிரிழந்துள்ளனர். 

2016 -ஆம் ஆண்டில் 449 முறை போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, இதில், 13 பொதுமக்கள் மற்றும் 13 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 83 பொதுமக்கள் மற்றும் 99 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.

2015-இல் 405 முறையும், 2014-இல் 583 முறை போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில்,14 பொதுமக்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர், 101 பொதுமக்கள் மற்றும் 28 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.

2013-இல் 347 முறையும், 2012-இல் 114 முறையும், 2011-இல் 62 முறையும் மற்றும் 2010-இல் 70 முறையும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோடு, கட்டுப்பாட்டு கோடு மற்றும் நிலப்பரப்பு, நிலைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிகமான அத்துமீறல்கள் இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. இரு நாளுகளுக்கிடையே நடைபெற்றும் அத்துமீறல் தாக்குதல் பதட்டத்தையே குறிக்கிறது. பாகிஸ்தான் ஆண்டு முழுவதும் தினசரி அடிப்படையில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோடு, கட்டுப்பாட்டு கோடு மற்றும் உண்மையான நிலப்பரப்பு நிலைப்பகுதி வழியாக இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சண்டைகள் அமலுக்கு வந்தது.

பாகிஸ்தானுடன் 3,323 கி.மீ. நீளமான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இதில் 221 கி.மீட்டர் சர்வதேச எல்லைக் கோடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் 740 கி.மீ மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com