ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற  21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஆனால், அதையும் மீறி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

ஆர்.கே.நகர் முழுவதும் துணை ராணுவப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் ஆர்.கே.நகரில் போதுமான அளவுக்கு துணை ராணுவப்படையினரை பணியமர்த்த வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, ஆர்.கே.நகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 

மேலும் தேர்தல் சிறப்பு அதிகாரி பந்ரா சென்னை வந்த நாளில் தான் ரூ.100 கோடி பணபட்டுவாடா நடந்துள்ளதாக திமுக குற்றம்சாட்டி இருந்தது. இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை எழுப்பி தேர்தலை ரத்து செய்ய திமுக முயற்சிப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

ஆர்.கே.நகரில் 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை நியாயமாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் குறுக்கிடுவோரை தேர்தல் ஆணையம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தது நீதிமன்றம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com