கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது

தமிழக, ராஜஸ்தான் காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ஜோத்பூரில்
கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது

ராஜஸ்தான்:  தமிழக, ராஜஸ்தான் காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ஜோத்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள நகைக் கடையில் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடந்த 3.5 கிலோ தங்க நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக அண்ணாநகர் காவல் துணை ஆய்வாளர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சென்னாராம், கேலாராம், தனவர்ஜி மற்றும் சங்கர்லால் ஆகிய. நான்கு பேரை நவம்பர் 29-ஆம் தேதி போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த குற்றவழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம்(28) தினேஷ் செளதாரி(20) மற்றும் அவருடைய கூட்டாளிகள்தான் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்து. அவர்களைப் பிடிப்பதற்காக, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமைக்காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார். ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தனிப்படையில் இருந்த மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து பெரியபாண்டியன் உடலில் குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது. 

துப்பாக்கி குண்டு, ரத்தமாதிரிளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதால் ஆய்வு முடிவு வந்த பிறகு உறுதியான தகவலை தெரிவிப்பதாக ராஜஸ்தான் பாலி மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்தரன் போலீஸார் கொள்ளையன் நாதுராமின் மனைவியை கைது செய்துள்ளனர். 

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது நாதுராம் மனைவி மஞ்சுவும் இருந்துள்ளார். ஏற்கனவே கைதான தேஜாராம் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சென்னை போலீஸார் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஜோத்பூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நாதுராமின் மனைவி மஞ்சுவை கைது செய்துள்ள ஜெய்தரன் போலீஸார், நாதுராம் பதுங்கியிருக்கும் இடம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com