முன்னிலையில் வந்த காங்கிரஸ்.. நூலிழையில் பின்னிலைக்கு சென்றது எப்படி..?

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று திங்கள்கிழமை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை
முன்னிலையில் வந்த காங்கிரஸ்.. நூலிழையில் பின்னிலைக்கு சென்றது எப்படி..?

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று திங்கள்கிழமை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு முன்னிலை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான வெற்றி முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதல் நூலிழையில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் எப்படி இவ்வளவு பெரிய பின்னிலைக்கு சென்றது என்ற கேள்வி பரபரப்புடன் முன்னிலை அறிவிப்புகளை பாத்தவர்களின் உள்ளங்களில் எழுந்தது. 

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அந்த மாநில தேர்தல் முடிவு பெரும் பரபரப்பு நிலவியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மத்தியில் ஆளும் பாஜக-வின் கடும் நடவடிக்கையால் குஜராத்தில் 22 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு மக்கள் ஒரு மாற்றம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து எதிர்கட்சியினர் மத்தியிலும் எழுந்தது. 

இரு மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், குஜராத்தில் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக-வுக்கு கிடைக்காது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டும் அளவுக்கு வெற்றிபெறும். எனது இந்த கணிப்பானது அந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் விளைவாகும் என மராட்டிய பாஜக எம்.பி. சஞ்சய் காகடே கருத்து தெரிவித்திருந்தார். பாஜக எம்.பி. ஒருவரே குஜராத்தில் தங்கள் கட்சி வெற்றிபெறாது என்று கூறியிருந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக . இரு மாநிலங்களிலுமே பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸூம் இப்போது ஆட்சியில் உள்ளன. முன்னதாக, குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

பாஜக-வின் கோட்டை என பேசப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்தன. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை எதிர்த்தும், குஜராத் தேர்தலில் பாஜகவை தேற்கடிக்க காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தானிய தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தரம் தாழ்ந்த பேச்சுகளை பாஜக-வும், மதவாதம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகளை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியும் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,828 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க இதில் பாதிக்கும் கூடுதலான எம்எல்ஏக்கள் தேவை. எனினும், அனைத்து வாக்குக் கணிப்புகளிலும் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. 2வது கட்ட வாக்குப்பதிவில் பாஜக பக்கம் காற்று வீச ஆரம்பித்தது. 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில்தான் பாஜகவுக்கு முன்னிலை அதிகமாக கிடைத்துள்ளது என்பதை இன்றைய வாக்கு எண்ணிக்கையில் காண முடிந்தது. 

மணிசங்கர் அய்யர் விவகாரத்திற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்து கருத்துக் கணிப்பு, முதல்கட்ட தேர்தலுக்குப் பிந்தைய 10க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி அரியாசனத்தில் உள்ள பாஜகவே மீண்டும் ஆட்சி அரியாசனத்தில் அமரும் என்று ஒருமித்த குரலில் தெரிவித்தன.

குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பாஜகவுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. 

ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காக குறைந்துள்ளது. 

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதைபோல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும் தொடர்ந்து ஆட்சி நடத்தியதில்லை. குஜராத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான எதிர்மறையான கருத்தையும், பாதிப்பையும் உணர்ந்த பாஜக, இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸை விமர்சிப்பதிலும், உணர்ச்சி பொங்க வாக்காளர்களுக்கு கோரிக்கை வைப்பதிலுமே தீவிரமாக இருந்தனர். இதையும்தாண்டி பாஜகவின் வெற்றிக்கு பல காரணங்களை அரசியல் வல்லுநர்கள் கூறினாலும், பிரசாரத்தில் ஸ்டைலை மாற்றிய மோடி முதல்கட்ட தேர்தல் முடிந்த பிறகு பிரசார தொனியை வேறு விதமாக மாற்றினார் மோடி. அதவாது முதலில் பொதுவான பிரச்சினைகளை பற்றி பேசிய மோடி, பிறகு பாஜகவின் வழக்கமான தாக்குதல்களை கையில் எடுத்தார். ராகுல் காந்தி வாரிசு அடிப்படையில் காங்கிரஸ் தலைவராவதாகவும், தான் ஏழை என்பதால் காங்கிரசுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். இந்த நேரத்தில் மணிசங்கர் அய்யர் தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டார். அவர் தரக்குறைவான வார்த்தையால் மோடியை விமர்சனம் செய்ததால், பார்த்தீர்களா, நான் கூறியது சரிதான் என்பதை காங்கிரஸ் நிரூபித்துவிட்டது என்பதும், மண்ணின் மகன் என்ற கோஷத்தை தீவிரப்படுத்தினார். மேடையில் கண்ணீர் சிந்தினார். கிட்டத்தட்ட மோடி மீது குஜராத் மக்களுக்கு அனுதாபம் வருவதை போல மோடி பிரசாரம் அமைந்தது. மோடியின் பேச்சு வித்தையே வெற்றிக்கான காரணம் எனலாம். ஏடிஎம் மையங்களில் காசுக்க கால்கடுக்க காத்துகிடக்க வைத்த பாஜக-வின் செயலை மறந்து மீண்டும் தாமரையை மலர மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி முடிவுகள் பாஜவுக்கானதாக இருந்தாலும் வாக்கு சதவீதம் அதிகரிப்பு காங்கிரஸூக்கானது என்பது தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com