சென்னை கடலில் தீவிரமாகும் எண்ணெய் கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்
சென்னை கடலில் தீவிரமாகும் எண்ணெய் கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்பட மூன்று மத்திய அமைச்சர்களுக்கு மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி புதன்கிழமை தனித்தனி கடிதங்களை எழுதியுள்ளார். 

 வட சென்னை எண்ணூர் பகுதி கடலில் எண்ணெய் கசிவு ஜனவரி 29-ஆம் தேதி ஏற்பட்டது. இதையடுத்து, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து மத்திய வேளாண்மை மற்றும் மீனவர்கள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், தரைவழி- நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுற்றுச்சூழல், வனத் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே ஆகியோருக்கு கனிமொழி புதன்கிழமை தனித் தனி கடிதங்களை எழுதியுள்ளார்.
 இது குறித்து தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது, சிறிதளவு மட்டுமே கடலில் எண்ணெய் கசிந்ததாக கூறப்பட்டது. ஆனால், பல டன் எண்ணெய் கசிந்து அபாயகர நிலைக்கு சென்றுள்ளதாகவும் சுற்றுப்புறச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக அளவில் மீன்கள், ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் எண்ணெய்ப் படலத்துடன் கரை ஒதுங்குவதாகவும் தெரிய வருகிறது.

எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் வரை எண்ணெய் கசிவின் தாக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெட்ரோல் வாசனையால் அவதியுறும் நிலை உள்ளது. எண்ணெய் கசிவுக்கு பிந்தைய விளைகள் அதிகமாக இருக்கும்.

ஆனால், அதைத் தடுக்க இதுவரை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அளவுக்கு கடலில் எண்ணெய் கசிவு இருக்கிறது என்பதை மூடி மறைப்பதில் அரசுத் துறைகள் காட்டி வரும் அக்கறை, கசிவைத் தடுக்கும் நடவடிக்கையில் இல்லை. எனவேதான் மத்திய அமைச்சர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

முன்னதாக, வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கிற்கு கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில், "எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.


மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உள்ளூர் மீனவ சமுதாயத்துடன் ஆலோசனை நடத்தி எண்ணூர் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வு உதவியும் வழங்க எண்ணூர் துறைமுக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவுக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில்" எண்ணூர் கடலில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்த பயிற்சி பெற்ற ஊழியர்களும், சிறப்புக் கருவிகளும் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் உடனடியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com