காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் வழங்கிய விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட மத்திய அரசுக்கு கர்நாடக பாஜக கடிதம்

காங்கிரஸ் மேலிடத்துக்கு முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தலின்பேரில் ரூ.1,000 கோடி பணம் வழங்கிய விவகாரத்தில் வருமான வரித் துறை அல்லது அமலாக்கத் துறை மூலம் ஆதாரங்களை
காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் வழங்கிய விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட மத்திய அரசுக்கு கர்நாடக பாஜக கடிதம்

காங்கிரஸ் மேலிடத்துக்கு முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தலின்பேரில் ரூ.1,000 கோடி பணம் வழங்கிய விவகாரத்தில் வருமான வரித் துறை அல்லது அமலாக்கத் துறை மூலம் ஆதாரங்களை வெளியிடக் கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கலபுர்கியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தலின்பேரில், காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கிய விவரம் குறித்து காங்கிரஸ் எம்எல்சி கோவிந்தராஜு வீட்டில் அமலாக்கத் துறையினர் கண்டெடுத்த நாள்குறிப்பில் (டைரி) குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பெங்களூரில் அமையவிருக்கும் உருக்குப் பாலத்துக்கு குத்தகைதாரரிடம் இருந்து லஞ்சமாக ரூ.65 கோடியை முதல்வர் சித்தராமையா பெற்றுள்ளதாகவும் அந்த நாள்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை அமலாக்கத் துறை அல்லது வருமான வரித் துறை மூலம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதவிருக்கிறேன். நாள்குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரத்தை இதுவரை கோவிந்தராஜூ மறுக்கவில்லை என்பதில் இருந்தே அது உண்மை என்பது புலனாகிறது.

நாள்குறிப்பில் இருக்கும் விவரம் எடியூரப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? என்று வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு கோவிந்தராஜூ கடிதம் எழுதியுள்ளார். எதற்காக கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் நாள்குறிப்பில் இருப்பதாக நான் கூறும் விவரங்கள் உண்மை என்பது தெரியவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அக் கட்சியில் இருந்து இன்னும் ஓரிரு நாள்களில் விலகவிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா வெகுவிரைவில் பாஜகவில் சேரவிருக்கிறார். இதுகுறித்து குமார் பங்காரப்பா என்னை சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேருகிறாரா? என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

காங்கிரஸ் மேலிடத்துக்குப் பணம் கொடுத்தது பொய்யென்று நிரூபிக்கப்பட்டால், நானும் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

எனக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு முன்பாக எனது குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com