நெடுவாசலுக்கு கூடுமா வாடிவாசல் கூட்டம்

நாடு முழுக்க வளர்ச்சி குறித்து பெரிதாக பேசப்படுவதோடு அதற்கான பல திட்டங்கள் முன்னெக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
நெடுவாசலுக்கு கூடுமா வாடிவாசல் கூட்டம்

நாடு முழுக்க வளர்ச்சி குறித்து பெரிதாக பேசப்படுவதோடு அதற்கான பல திட்டங்கள் முன்னெக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் என்னதான் நாம் தொழில் நுட்பத்திலும், அறிவியல் போன்ற பல துறைகளிலிலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், உணவு உற்பத்தி, விவசாயம் போன்ற விசயங்களில் நாளுக்கு நாள் பின் தங்கிபோகிறோம் என்றே சொல்ல வேண்டும். அதற்கு மழையின்மை, பஞ்சம், வறட்சி என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் விவசாயிகள் நிலை கேள்விக்குறியாக இருப்பதுதான் உண்மை.

முதுகு வளைந்து உழைத்தவர் வாழ்வையெல்லாம் இப்படி கேள்விக்குறியாக வைத்து விட்டு இந்த நாட்டு அரசு எதை சாதித்துக் காட்டப்போகிறது.  நமது தேசப்பிதா, நாட்டின் முதுகெலும்பாக கிராமங்களை அடையாளம் காட்டினார். அந்த கிராமங்களை, இப்போது நாம், தொலைதொடர்பை விரிவுப்படுத்தி நகர்மயமாக்கலை நோக்கி நகர்த்திக் கொண்டிக்கிறோம். வசதிவாய்ப்புகள் எல்லோருக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேசமயத்தில் கிராமம் என்பது பசுமையின் தாயகம், செழுமையின் உருவகம், ஊருக்கும் உலகுக்கும் உணவளிக்கும் அட்சய பாத்திரம். அந்த அட்சய பாத்திரம் வறண்டு விட்டால் பாத்திரத்தை விற்று எத்தனை நாள் நாம் உண்டு, உறங்கிட முடியும் என்பதை சிந்திதுப் பார்க்க வேண்டும். 

தனிமனிதப் பிரச்னைக்கு அவன் குடும்பமும் ஒரு குடும்பத்தின் பிரச்னைக்கு அவர்கள் உற்றார் உறவினரும் ஏன் ஊரே கூடியும் துணை நிற்கலாம் ஆனால் ஒரு சமூகத்தின் பிரச்னைக்கு, அந்த சமூகத் தலைவனும் மக்களும்தானே துணை நிற்கமுடியும். தமிழகத்தில் தற்போது மிகமுக்கிய பிரச்னையாக ஹைட்ரோ கார்பன் திட்டம் தலைதூக்கி வருகின்றது. தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் விலை உயர்வு தொடங்கி குடிநீர் பிரச்னை வரைக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே கொடி பிடித்து,  குரல் கொடுத்து வந்த நிலையில் முதன் முறையாக நாம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை பார்த்தோம். அது வரலாற்று சிறப்பு மிக்க மெரினா புரட்சியாகவே பேசப்பட்டது. 

அப்படி ஒரு போராட்டம் தமிழத்தில் மீண்டும் எழுவது சந்தேகம்தான் என்றாலும், தற்போது ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து அமெரிக்கா-வில் உள்ள நியூயார்க் ராச்செஸ்டர்  'தமிழ்ஸ் ஆப் கிரேட் ராச்செஸ்டர் ' தமிழ் மக்கள் சங்கத்தின் சார்பாக  # SaveNeduvasal என்ற பதாகைகள் ஏந்தி தங்கள் குரலை பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலை காக்க களமிறங்கிய வெளிநாடு வாழ் தமிழர்கள், தற்போது நெடுவாசலை காக்கவும் ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்திருப்பது தமிழர்களை நெகிழச் செய்துள்ளது. 

ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் வழக்கம் போல் தங்கள் போராட்டத்தை ஆதாயத்துக்காக தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக எந்த கட்சியும் களம் காணவரவில்லை. அவரவர்கள் தங்கள் எதிர்ப்பு குரலை அறிக்கைகளாகவும், அறிவிப்புகளாகவும், வெளியிடுவதோடு சிலகட்சிகள் தனித்தனியே வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது, உறுதிமொழி அளிப்பது, தர்ணாவில் கலந்து கொள்வது என்ற நிலையிலேயே செல்கிறது. 

இதைப் பார்க்கும் போதுதான் உள்ளாட்சித்தேர்தல் என்ற ஆதாயம் இதற்குப் பின்னால் மறைந்திருக்கிறதோ என்ற ஐயம் மக்களுக்கு எழுந்துள்ளது. இளைய சக்திகளால் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள்ளாக ஒரு சட்டத் திருத்தத்தையே கொண்டுவர முடிந்திருக்கிறது என்றால் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து இந்த எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து மத்திய அரசின் திட்டத்தை கைவிடச் செய்ய முடியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். 

இதற்கிடையில் மத்தியில் ஆளும் தரப்பை சேர்ந்த இல.கணேசன்,  நாடு வளம் பெற வேண்டும் என்றால், தனி மனிதன் என்ற எல்லையை கடந்து, தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இது அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று கூறியிருக்கிறார். விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்துவிட்டு நாடு என்ன நலம் பெறப்போகிறது  எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதானே அரசின் கடமையாக இருக்க முடியும். அப்படி இருக்க ஒரு மாநிலத்தை தியாகம் செய்யச் சொல்லி, நாட்டின் வளர்ச்சியை தேடிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்.  நெடுவாசலில் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்துக்கு முற்றிலும் விரோதமானதாக இருக்கும் போது அதை புறக்கணித்துவிட்டு மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க எண்ணும் உங்கள் கனவுமட்டும் சாத்தியமாகிவிடுமா..?

ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் என்பதையும், அந்த எஜமானர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு அரசு செயல்பட்டால் முடிவு எத்தகையதாக இருக்கும் என்றும் வரலாற்றை புரட்டிப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் இந்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும், ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு போராடி அதை தடுத்த நிலையில் மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மீது அழிவுத் திட்டங்களைத் திணித்து வருகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், கருத்தொருமித்து மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்றே அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இல்லையென்றால் வாடிவாசல் கூட்டம் நெடுவாசலிலும் கூடக்கூடும். இப்படி எல்லா பிரச்னைகளுக்கும் மக்களே முன்னின்று போராடத் தொடங்கினால் இந்த நாடும், அரசும் என்னவாகும் சிந்தீப்பீர்.

                                                                               - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com