வடசென்னையில் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

சென்னைத் துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை குழாய்கள்
வடசென்னையில் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

சென்னைத் துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை குழாய்கள் மூலம்  எடுத்துச் செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மீனவர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டம் குறித்து இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.டி.தயாளன் கூறியது, தற்போது சென்னைத் துறைமுகத்திலிருந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைவரை தண்டார்பேட்டை வழியாக குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய், டீசல் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகின்றன. இக்குழாய்களில் ஏற்பட்ட கசிவுகள் மூலம் கொருக்குப் பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்டபகுதிகளில் 

நிலத்தடி நீர் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்துவிட்டது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்பிரச்னையைத் தீர்க்க அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் சென்னைத் துறைமுகம், திருவொற்றியூர், எர்ணாவூர் வழியாக சுமார் 17 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதித்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல சி.பி.சி.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தோம். இத்திட்டத்தால் தற்போது தண்டையார்பேட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போல  எதிர்காலத்தில் வடசென்னையே நாசமாகும் அளவுக்கு இத்திட்டத்தின் பின்விளைவுகள் இருக்கும். கடற்கரையின் வெகு அருகாமையில் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படும் போது சிறிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டாலும் வெளியாகும் எண்ணெய் கடல்நீரில் கலந்து விடும். சமீபத்தில் இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தால் வெளியான எண்ணெய்ப் படலத்தை அகற்றவே 

எவ்வித தொழில்நுட்பமும் இல்லாதபோது, இது போன்ற பெரிய திட்டங்களினால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் எங்களை அச்சமடைய வைத்துள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அதிக மக்கள் நெருக்கம் இல்லாத எண்ணூர் துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்துவர திட்டமிட முயற்களை மேற்கொள்ளவேண்டும். அதுவரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் தொடர்ந்து மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார் தயாளன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com