ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும்:ராமதாஸ்

 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்காவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்

 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்காவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த இரு ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த மத்திய, மாநில அரசுகள், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்தன.  ஆனால், அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. 

 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு மட்டும்தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான விதியை அது தான் தீர்மானிக்கும். ஆனால் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால், உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புகள் இல்லை. 

எனவே, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.  தமிழகத்தில் பல அமைப்புகள் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தப் பிரச்னைகளைத் தடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com