பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  என்.டி. திவாரி

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என்.டி. திவாரி, பாஜகவில் புதன்கிழமை இணைந்தார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என்.டி. திவாரி, பாஜகவில் புதன்கிழமை இணைந்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் என்.டி. திவாரியும், அவரது மகன் ரோஹித் சேகரும் புதன்கிழமை இணைந்தனர்.

ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒருமுறையும் என்.டி. திவாரி பதவி வகித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பாஜகவில் அவர் இணைந்திருப்பது உத்தரகண்டில் அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும்.

என்.டி. திவாரியை தனது தந்தை என்று நீதிமன்றத்தின் மூலம் நிரூபித்து அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்தவர் ரோஹித் சேகர். பாஜகவில் என்.டி. திவாரியுடன் சேர்ந்து இணைந்திருப்பதன் மூலம், அரசியல் களத்தில் ரோஹித் சேகரும் முதல்முறையாக குதித்துள்ளார்.

91 வயதாகும் என்.டி. திவாரி, தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பகுதி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் சோனியா காந்தி முன்பு அரசியலில் ஈடுபடாமல் இருந்தபோது, காங்கிரஸ் தலைவராக நரசிம்ம ராவ் இருந்தார். அந்த காலகட்டத்தில், காங்கிரஸில் இருந்து என்.டி. திவாரி உள்ளிட்ட சில தலைவர்கள் தனியே சென்று புதிய அரசியல் கட்சியை (திவாரி காங்கிரஸ் கட்சி)ஆரம்பித்தனர். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, காங்கிரஸில் மீண்டும் என்.டி. திவாரி உள்ளிட்டோர் இணைந்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநராக கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலும் என்.டி. திவாரி இருந்தார். அப்போது அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அரசியலில் தீவிர கவனம் செலுத்தாமல் என்.டி. திவாரி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் சிவசேனை முன்னாள் எம்.பி.: இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனை கட்சியின் முன்னாள் எம்.பி. கஜானன் பாபர், மும்பையில் பாஜக மாநிலத் தலைவரும், முதல்வருமான தேவேந்திர பட்னவீஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்தத் தகவலை பாஜக எம்எல்ஏ பாலா பேகடே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com