ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம்? தமிழகத்துக்குப் புதிய பாதையை அமைத்து தருமா!

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் செய்தி விற்பனை சூடு பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம்? தமிழகத்துக்குப் புதிய பாதையை அமைத்து தருமா!

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் செய்தி விற்பனை சூடு பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் அவசர உலகத்தில் நேற்றைய காயங்களுக்கு இன்றைய பரபரப்பே மருந்தாகிப் போகிறது. டாஸ்மாக் ஒழிப்பு, மாநில தேர்தல், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, தமிழக முதல்வரின் மரணம் என எல்லாவற்றையும் தாண்டி தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. போராட்டம் நடக்கும் விதமும் மதிக்கத்தக்கதாகவும், ஆச்சரியத்திற்குரியதாகவும் உள்ளது.

ஆனால் இந்தப் போராட்டம் கடந்த ஆண்டு ஏன் நடத்தப்படவில்லை. நல்லது நடக்கும் என்று காத்திருந்தோம் என்று பதில் கூறினாலும். அந்த காத்திருப்புக்கான கால எல்லை முடிந்து இன்று இத்தனை வேகமாக பொங்கி எழ என்ன காரணம். இந்த எழுச்சியை எளிதில் அடக்க முடியாத அளவுக்கா மத்திய மாநில அரசுகள் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் நியாமற்ற தீர்ப்பை, மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து பல ஆயிரம், பல லட்சம் பேர் பொங்கி இருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியை, உத்வேகத்தை கூட்டுகிறது. ஆனால் பற்றி எரியும் இந்த தீக்குப் பின்னால் உள்ள சிறு தீப்பொறி எது?

நம் தமிழ் இனமான உணர்வுகளை கிளறிவிட்டு அதற்குப் பின்னால் இருந்து குளிர் காய நினைக்கும் அரசியல் என்ன? என்று நாம் யோசிக்க மறக்கக் கூடாது. ஒன்றை அழிக்க ஒன்றை வளர்க்க வேண்டும் என்றும் ஒரு பிர்சனையை ஒழிக்க இன்னொரு பிரச்னையை ஊதிவிட வேண்டும் என்ற நோக்கோடும் தான் அரசியல் கட்சிகள் இதுவரை செயல்பட்டு வந்திருப்பதை கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்தாலே நாம் புரிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில், இந்தப் போராட்டத்தை யார் எதற்காக வளர்த்தெடுகிறார்கள் என்று கூட யோசிக்க நேரம் இல்லாமல் நாம் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு முன்னால் இருந்த ரூபாய் நோட்டு விவகாரம், காவிரி நீர் பிரச்னை, புயல் நிவாரணம், முன்னாள் முதல்வரின் மரணத்தில் இருந்த மர்மம், உள்ளிட்ட அனைத்தையும் சகித்துக்கொண்ட நாம், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் வீதிக்கு வந்தது எப்படி?  தன்னெழுச்சியாக நம்மை வீதிக்கு வரவழைத்த தீப்பொறி எது என்ற கேள்விக்கான விடையோடும் இந்த போராட்டத்தின் முடிவு வெற்றியை பெற்றுத் தரட்டும்.

அப்போதுதான் நமக்கான புதிய பாதையாக அது அமையும். ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள எத்தனையோ பிரச்னைகளுக்கு இனி நாம் எல்லோரும் இப்படி தன்னெழுச்சியாக வந்து போராட வேண்டி இருக்கும். ஆனால், அப்போதும் இதேபோல் அரசும் காவல் துறையும் நமக்கு மறைமுக ஆதரவை தருமா என்பதே ஆகப்பெரிய கேள்வி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com