சட்டப்பேரவைக் கூட்டம்: லோக் அயுக்தா குறித்த அறிவிப்பு வெளியிடவேண்டும்: பாமக வலியுறுத்தல்

சென்னை:  லோக் ஆயுக்தா, ஏழாவது ஊதியக் குழு போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையுடன் தொடங்கும்

சென்னை:  லோக் ஆயுக்தா, ஏழாவது ஊதியக் குழு போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக பாமக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுனர் உரையுடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.  இதில் பயனுள்ள அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சியின்மைக்கும் முக்கியக் காரணமாக இருப்பது ஊழல் தான். அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான உன்னத வழி லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது தான். லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அதிமுக தேர்தல் அறிக்கையிலும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

கடந்த 21.7.2016 அன்று தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும், இது தூய நிர்வாகத்தையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்து, நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர் ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, இந்தக் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். அது குறித்த அறிவிப்பை ஆளுநர் உரையிலேயே வெளியிட வேண்டும்.

அதுபோல ஏழாவது ஊதியக் குழு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, உழர்களுக்கான நிவாரணத் திட்டம், கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும்.
மேலும், நெடுஞ்சாலைகளில் மூடப்பட உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? என்பன குறித்தும் அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com